அறநெறிச்சாரம் - யார் சொல்வதைக் கேட்க வேண்டும்
துறவிகளுக்கு நம் சமுதாயம் மிக உயர்ந்த இடத்தை தந்திருக்கிறது.
நீத்தார் பெருமை என்று ஒரு அதிகாரமே ஒதுக்கி இருக்கிறார் வள்ளுவர்.
அப்படி என்ன துறவிகளுக்குப் பெருமை ?
மனித மனம் மயக்கமுறும் தன்மை கொண்டது. நல்லது எது, கெட்டது எது என்று அறியாமல் தடுமாறும் இயல்பு கொண்டது. எது சரி, எது தவறு என்று தெரியாமல் மயங்கும்போது யாரிடம் போய் கேட்பது ? யார் நமக்கு சரியான வழியை காட்டுவார்கள் ?
தனி மனிதன் மட்டும் அல்ல, சில சமயம் சமுதாயமே குழம்பி தவிக்கும் ?
இன்றும் கூட சமுதாயம் அப்படி பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது.
உதாரணமாக ஒரே இனத்தில் உள்ளவர்கள் (ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் ) திருமணம் செய்து கொள்ளலாமா ? துப்பாக்கி வைத்துக் கொள்ளலாமா ? விவாகரத்து சரியான தீர்வா ? என்று பல சிக்கல்களில் கிடந்து உலகம் உழல்கிறது.
யாரை கேட்டு உலகம் தெளிவு பெற முடியும் ?
துறவிகளுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது, வேண்டியவன் வேண்டாதவன் என்ற பாகு பாடு கிடையாது...ஆசை கிடையாது , நாம் செய்தாலும், செய்யாவிட்டாலும் அவர்களுக்கு இலாபமும் இல்லை , நட்டமும் இல்லை.
எனவே, அறிவுரை பெற சமுதாயமும், தனி மனிதர்களும் அவர்களிடம் போய் நின்றார்கள்.
அப்படி அறிவுரை சொல்லத் தக்கவர்கள் யார் என்று அறநெறிச்சாரம் கூறுகிறது.
பாடல்
அறங்கேட் டருள்புரிந் தைம்புலன்கள் மாட்டும்
இறங்கா திருசார் பொருளும்-துறந்தடங்கி
மன்னுயிர்க் குய்ந்துபோம் வாயி லுரைப்பானேற்
பன்னுதற்குப் பாற்பட் டவன்.
சீர் பிரித்த பின்
அறம் கேட்டு அருள் புரிந்து ஐம்புலன்கள் மாட்டும்
இறங்காது இருசார் பொருளும்-துறந்து அடக்கி
மன்னுயிர்க்கு உய்ந்து போம் வாயில் உரைப்பானேல்
பன்னுதற்குப் பாற் பட்டவன்.
பொருள்
அறம் கேட்டு = பல அற நூல்களை கேட்டு அறிந்து
அருள் புரிந்து = அருள் புரியும் நோக்கத்தோடு
ஐம்புலன்கள் மாட்டும் = ஐந்து புலன்களின் பால்
இறங்காது = சாராமல்
இருசார் பொருளும் = அகப்பற்றையும் புறப் பற்றியும்
துறந்து = துறந்து
அடக்கி = புலன்களை அடக்கி
மன்னுயிர்க்கு = உயிர்களுக்கு
உய்ந்து போம் = பிறவிப் பிணியில் இருந்து விட்டு வீடு பெற
வாயில் = வழியை
உரைப்பானேல் = உரைப்பவனே
பன்னுதற்குப் = அற உரைகளை சொல்லப்
பாற் பட்டவன் = நல்லவன்
அறவுரை சொல்வதற்கு இத்தனை தகுதிகள் வேண்டும் என்கிறது அறநெறிச் சாரம்.
முதலில் , தெளிந்த அறிவு
இரண்டாவது, புலனடக்கம்
மூன்றாவது, உயிர்கள் மேல் அருள்
நான்காவது , உயிர்கள் வீடு பேறு பெற வேண்டும் என்ற சிந்தனை
இவை நிறைந்தவனே அறவுரை சொல்லச் சிறந்தவன்.
பிறர் சொல்லும் அறிவுரையை கேட்பதன் முன்னம், அவர்களுக்கு இந்த தகுதி இருக்கிறதா என்று பாருங்கள்.
ReplyDeleteWhom to appreciate? The araneri chaaram or the one who is giving that to us in such a beautiful and simple way. Hats off to you.
Who poet the aranei saram
ReplyDeleteமுனைப்பாடியார்
ReplyDelete