அறநெறிச்சாரம் - எதைப் படிக்க வேண்டும் ?
ஒரு புத்தகத்தை படித்து முடிக்க மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகலாம். ஒரு வருடத்தில் பத்து அல்லது பன்னிரண்டு புத்தகங்கள் வாசித்து முடிக்கலாம்.
ஒரு அம்பது வருடம் தொடர்ந்து வாசித்து வந்தால் 500 முதல் 600 புத்தகங்கள் அதிக பட்சம் வாசிக்கலாம்.
இருக்கின்ற புத்தககளோ கோடிக்கணக்கில்.
இனி வரப் போகும் புத்தகங்களோ கணக்கில் அடங்காதவை.
இவற்றில், எதைப் படிப்பது, எதை விடுவது என்று மலைப்பாக இருக்கும்.
இருக்கின்ற கொஞ்ச நாளில் மிக மிக சிறந்த நூல்களை வாசிக்க வேண்டும்.
எது சிறந்த நூல், அதை எப்படி தேர்ந்து எடுப்பது என்று அறநெறிச்சாரம் சொல்கிறது.
ஒரு புத்தகத்துக்கு நீங்கள் இரண்டு விலை கொடுக்கிறீர்கள்.
ஒன்று, அந்த புத்தகம் வாங்க கடைகாரனுக்கு தரும் விலை. இது மிக மிக சிறய விலை.
இரண்டாவது, அந்த புத்தகத்தை நீங்கள் படிக்க செலவழிக்கும் உங்களின் மதிப்பு மிக்க நேரம். இது, மிக மிக அதிகமான விலை.
பணம் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு வினாடி நேரம் கூட நம்மால் அதிகமாக சம்பாதிக்க முடியாது.
எனவே, மிக மிக விலை கொடுத்து ஒரு புத்தகத்தை நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதிகமான விலை கொடுத்துதங்கத்தை வாங்குபவன் எப்படி வாங்குவான் ?
அதை நிறுத்து, அதை வெட்டிப் பார்த்து, நெருப்பில் சுட்டு, கல்லில் உரைத்து தங்கத்தை வாங்குவதைப் போல, நல்ல நூல்களை தரம் பார்த்து வாங்க வேண்டும்.
தங்கத்தை வாங்க வேண்டும் என்றால் இப்படி வாங்க வேண்டும்.
புத்தகங்களில் தங்கம் போல உயர்ந்தவை எது ?
இந்த பிறவி என்ற பந்தத்தை அறுக்கும் நூல்களே தங்கம் போல உயர்ந்த நூல்கள். அந்த மாதிரி நூல்களை தேடிப் பிடித்து படிக்க வேண்டும்.
பாடல்
நிறுத்தறுத்துச் சுட்டுரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால்--பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகுமற் றாகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.
பொருள்
நிறுத்தறுத்துச் = நிறுத்து , அறுத்து
சுட்டுரைத்துப் = சுட்டு (தீயில்) , உரைத்து (கல்லில்)
பொன் கொள்வான் போல = பொன்னை (தங்கத்தை) வாங்குபவன் போல
அறத்தினும் = அற நூல்களையும்
ஆராய்ந்து புக்கால் = ஆராய்ந்து பார்த்தால்
பிறப்பறுக்கும் = பிறப்பை அறுக்கும்
மெய்ந்நூல் = உண்மையை உரைக்கும் நூல்கள்
தலைப்பட லாகும் = கிடைக்கும்
மற் றாகாதே = மற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு = கண்ணால் கண்ட நூல்களை எல்லாம் வாங்கக் கூடாது.
அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.
அழித்து பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழை அற கற்கின்றிலீர்
என்பார் அருணகிரி.
பிறக்காமல் இருக்க உதவும் நூல்களை படியுங்கள் , தவறு இல்லாமால் அன்போடு படியுங்கள் என்கிறார்.
இதையே வள்ளுவரும்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
குறள் விளக்கம்
நல்ல நூல்களை கற்று அதன் உண்மையான பொருள்களை அறிந்தவர் மீண்டும் இங்கு வந்து பிறக்காமல் இருக்கும் வழியை அறிவார்கள் என்கிறார்.
அடுத்த முறை வார பத்தரிகைகள், மாத நாவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள், மர்ம நாவல்கள், என்று வாங்குமுன் சற்று சிந்தியுங்கள்.
அவை பிறப்பறுக்கும் நூல்களா என்று ?
very nice
ReplyDelete