நள வெண்பா - மனம் விரியட்டும்
இலக்கியங்கள் நம் மனதை விரிவடையச் செய்கின்றன.
மனம் ஏன் விரிய வேண்டும் ? மனம் பரந்து விரிவதால் என்ன பயன் ?
இரண்டு பயன்கள்
முதலாவது, துன்பங்கள் குறையும். பொதுவாகவே துன்பங்கள் நான், எனது, என் வீடு, என் கணவன், என் மனைவி, என் மக்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தினால் வருகிறது.
தரையிலே செல்பவனுக்கு மேடு பள்ளம் தெரியும். ஆகாய விமானத்தில் செல்பவனுக்கு மேடு பள்ளம் தெரியாது. மனம் உயர உயர, விரிய விரிய மேடு பள்ளம் மறைந்து சம நோக்கு வரும்.
இரண்டாவது, இறை அனுபவம் பெறலாம். நாம் தெரிந்ததில் இருந்து தெரியாததை அறிந்து கொள்கிறோம். புலி எப்படி இருக்கும் என்றால் பூனை போல இருக்கும், ஆனால் கொஞ்சம் பெரிதாக இருக்கும் இன்று பிள்ளைகளுக்கு சொல்லித்தருவோம். இப்படி தெரிந்த பூனையில் இருந்து தெரியாத புலியை நம்மால் யூகம் பண்ண முடியும்.
எதைச் சொல்லி இறைவனை யூகம் பண்ண முடியும் ? இறைவன் யாரைப் போல இருப்பான் ? எதைப் போல இருப்பான் ? தெரியாது. மனம் விரிந்து கொண்டே போனால் , எல்லாவற்றிலும் பெரியவன், உயர்ந்தவன், சிறந்தவன் என்று சொல்லப்படும் இறைவனை அறிய முடியும்.
அதீத கற்பனைகளினால், இலக்கியங்கள் நம் மனதை பெரிதும் விரிவடையச் செய்கின்றன.
நிடத நாடு.
அங்குள்ள மாளிகைகள் எல்லாம் உயரமாக இருக்கின்றன. எவ்வளவு உயரம் என்று கேட்டால், அந்த மேகம் வரை உயரமாக இருக்கின்றன. அந்த மாளிகைகளில் மேகம் முன் வாசல் வழி வந்து பின் வாசல் வழி போகும். அவ்வளவு உயரம்.
அந்த மாளிகைகளில், பெண்கள் குளித்து முடித்து தங்கள் கூந்தலில் உள்ள ஈரம் போக அகில், சாம்பிரானி புகை காட்டுகிறார்கள். அந்த புகை , அங்கு வரும் மேகங்களோடு கலந்து விடுகிறது. பின், அந்த மேகங்கள் மழை பொழிகிற பொழுது, இந்த நறுமண வாசனைகளும் கலந்து பொழிகின்றன. அதனால் அந்த ஊரில் பெய்யும் மழை எல்லாம் பன்னீர் தெளிப்பது போல வாசமாக இருக்கிறது.
பாடல்
நின்றுபுயல் வானம் பொழிந்த நெடுந்தாரை
என்றும் அகில்கமழும் என்பரால் - தென்றல்
அலர்த்தும் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.
பொருள்
நின்று = (வானில்) நின்று
புயல் = மேகம்
வானம் = வானம்
பொழிந்த நெடுந்தாரை = பொழிந்த நீண்ட மழை
என்றும் = எப்போதும்
அகில் கமழும் என்பரால் = அகில் (சந்தனம் போல ஒரு நறுமண மரம்) வாசம் வீசும் என்று கூறுவார்கள்
தென்றல் = தென்றல் மெல்ல வந்து
அலர்த்தும் = வருடிப் போகும்
கொடிமாடத் = கொடிகள் உள்ள மாடத்தில்
தாயிழையார் = ஆயிழையார் = ஆராய்ந்து எடுக்கப் பட்ட அணிகலன்களை அணிந்த பெண்கள்
ஐம்பால் = ஐந்து பிரிவு எடுத்து பின்னப்பட்ட கூந்தல். இப்போதெல்லாம் மூன்று பிரிவு எடுத்து பின்னுகிறார்கள். அந்தக் காலத்தில் அவ்வளவு அடர்த்தியான முடி. ஐந்து பிரிவாக கூந்தலைப் பிரித்து பின்னுவார்களாம். எனவே பெண்களுக்கு ஐம்பால் என்று ஒரு அடை மொழியும் உண்டு.
புலர்த்தும் = புகை போடும்
புகை = புகை
வான் புகுந்து = வானில் உள்ள மேகங்களின் ஊடே புகுந்து
சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கற்பனை விரியும். காணாத ஒன்றை உங்கள் கற்பனையில் காண முடியும்.
இப்படியே பழகுங்கள்...ஒரு நாள், காணாத ஒன்றை, கடவுளைக் கூட காண இது உதவலாம்.
என்ன சூப்பாரான கற்பனை!
ReplyDeleteகடவுளை அடைவது ஒரு பக்கம் இருக்கட்டும், இப்போது இந்தமாதிரிக் கற்பனையை அனுபவிக்கலாம்!