Pages

Friday, June 26, 2015

தாயுமானவர் பாடல் - எது ?

தாயுமானவர் பாடல் - எது ?


தாயுமானவர், வேதாரண்யத்தில் பிறந்து, திருச்சியில் வேலை பார்த்து, பின் இராமநாதபுரத்தில் சமாதி அடைந்தவர். 1700 களில் வாழ்ந்தவர்.

தமிழ், சமஸ்கிரதம் இரண்டிலும் புலமை பெற்றவர்.

கிட்டத்தட்ட 1700 பாடல்கள் பாடியுள்ளார்.  மிக மிக எளிமையான பாடல்கள்.

இராமலிங்க அடிகளும், பாரதியாரும் எளிமையான பாடல்கள் பாட இவர் ஒரு உதாரணம் என்று சொல்லுபவர்களும் உண்டு.

இவரை சித்தர் என்று சொல்பவர்களும் உண்டு.

எளிமையான பாடல்கள்தான் என்றாலும் ஆழ்ந்த பொருள் செறிந்த பாடல்கள்.

எல்லோரும் பாடத் தொடங்கும்போது பிள்ளையார் மேல் பாடல் பாடுவார்கள், அல்லது தங்கள் இஷ்ட தெய்வத்தைப் பாடி நூல் தொடங்குவார்கள்.

தாயுமானவர், கேள்வியோடு பாடலை ஆரம்பிக்கிறார்.

எங்கும் நிறைந்தது எது ? ஆனதமானது எது ? அருள் நிறைந்தது எது ? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விகளுக்கு விடையான அதை வணங்குவோம் என்று முடிக்கிறார்.

பாடல்

அங்கிங் கெனாதபடி  எங்கும் ப்ரகாசமாய்
      ஆனந்த பூர்த்தியாகி
  அருளடு  நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
      அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
       தழைத்ததெது மனவாக்கினில்
  தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
       தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
       எங்கணும் பெருவழக்காய்
  யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
       என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
       கருத்திற் கிசைந்ததுவே
  கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
       கருதிஅஞ் சலிசெய்குவாம்.   


கொஞ்சம்  .சீர் பிரிப்போம்


அங்கு இங்கு எனாத படி எங்கும் ப்ரகாசமாய்
      ஆனந்த பூர்த்தியாகி அருளடு  நிறைந்தது எது ?

தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் 
தங்கும் படிக்கு இச்சை வைத்து உயிர்க்கு உயிராய் 
தழைத்தது எது ?

மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது ?

சமய கோடிகள் எல்லாம் தன் தெய்வம் என் தெய்வம் 
என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது ?

எங்கணும் பெரு வழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கும் உள்ளது எது அது ? 

கங்குல் பகல் அற நின்ற எல்லையுள்ளது எது அது  ? 

கருத்திற்கு இசைந்ததுவே 
கண்டன எல்லாம் மோன  உரு வெளியதாவும் 
கருதி அஞ்சலி செய்குவாம்.   

கடின பதம் எதுவம் இல்லை. 

பொருள் வேண்டுமா என்ன ?


1 comment:

  1. கம்ப ராமாயணத்தில் "உலகம் யாவையும்..." என்ற இறை வணக்கத்தை, எந்த ஒரு சமயத்தையும் சாராமல் இருப்பதாகப் போற்றுவார்கள். அதே போல, இந்தப் பாடலையும் போற்றலாம்.

    "கண்டன எல்லாம் மோன உரு வெளியதாவும்
    கருதி அஞ்சலி செய்குவாம்"

    என்னும்போது, காண்பவை எல்லாவற்றையும் அஞ்சலி செய்வோம் என்பது இனிமை.

    ReplyDelete