இராமாயணம் - பரதன் - பழி வந்தால் போகாது
தீய செயல்களை, பழி தரும் செயல்களை செய்வதில் உள்ள சிக்கல் என்ன என்றால் ஒரு தரம் பழி வந்துவிட்டால் அது எக்காலத்தும் போகாது. பழிச் செயலை செய்தவன் ஆயுளுக்குப் பின்னும் அந்த பழிச் சொல் அவனை விடாது.
நாம் செய்யும் நல்லவைகளை உலகம் எளிதாக மறந்து விடும். ஆனால், நாம் செய்யும் தீய செயல்களை ஒரு போதும் மன்னிக்காது.
இராமன் எவ்வளவோ நல்லது செய்தான். ஆனால் அவன் வாலியை மறைந்து நின்று கொன்றான் என்ற பழிச் சொல் இன்றுவரை போகவில்லை. போகாது.
எனவே தான் வள்ளுவரும்
ஈன்றாள் பசிக் காண்பான் ஆயினும் செய்யற்க ஆன்றோர் பழிக்கும் வினை
என்றார். சட்ட புத்தகம் ஆயிரம் சொல்லலாம், சாட்சிகள் இல்லாமல் போகலாம், நீதிபதி சரியாக நீதி வழங்காமல் போகலாம். சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யக் கூடாது.
நாம் மறைந்தாலும் நம் பழிச் செயல் மாறாது.
"மாயா வன் பழி தந்தீர்" என்றான். பழி மாயாது. என்றும் நிலைத்து நிற்கும்.
கைகேயிடம் பரதன் கூறுகிறான்.....
"நீ நோய் அல்ல, உன் கணவனின் உயிரை உண்ட பேய். நீ இன்னமும் உயிருடன் இருக்கிறாயே. எனக்கு என்றும் போகாத பழியைத் தேடித் தந்தீர். முலை தந்தீர், பழி தந்தீர். இன்னும் என்னென்ன தரப் போகிறாயோ "
பாடல்
‘நோயீர் அல்லீர்; நும் கணவன்தன்
உயிர் உண்டீர்;
பேயீரே! நீர் இன்னம் இருக்கப்
பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்!
முலை தந்தீர்!
தாயீரே நீர்? இன்னும் எனக்கு
என் தருவீரே?
பொருள்
‘நோயீர் அல்லீர் = நீ நோய் அல்ல
நும் கணவன்தன் = உன் கணவனின்
உயிர் உண்டீர் = உயிரை உண்டாய்
பேயீரே! = பேய் போன்றவள் நீ
நீர் இன்னம் இருக்கப் பெறுவீரே? = இன்னும் உயிரோடு இருக்கிறாயே
மாயீர்! = சாகவில்லையே இன்னும்
மாயா வன் பழி தந்தீர்! = தீராத கொடுமையான பழியைத் தந்தீர்
முலை தந்தீர்! = என்னை பாலூட்டி வளர்த்தாய்
தாயீரே நீர்? = நீயெல்லாம் ஒரு தாயா ?
இன்னும் எனக்கு என் தருவீரே? = இன்னும் எனக்கு என்னவெல்லாம் தரப் போகிறாயோ ?
பரதன் ஒரு குற்றமும் செய்யவில்லை. வரம் கேட்டது கைகேயி. தந்தவன் தசரதன். உயிர் விட்டவன் தசரதன். கானகம் போனவன் இராமன். இதில் பரதன் எங்கே வந்தான்.
இருந்தாலும், தாய் கேட்ட வரத்தால் தனக்கு ஒரு நன்மை வரும் என்றால், அந்த வரத்தின் தீமையும் தன்னையே சாரும் என்று அவன் நினைக்கிறான்.
திருட்டுப் பொருளை வாங்குவது மாதிரித்தான். நான் திருடவில்லை என்று சொன்னால் உலகம் ஏற்றுக் கொள்ளாது.
தவறான வழியில் வரும் செல்வம் தீராத பழியைக் கொண்டு சேர்க்கும் என்று அவன் நினைத்தான்.
அப்படி ஒவ்வொருவரும் நினைத்தால் இந்த உலகம் எப்படி இருக்கும் ?
உலகம் மாறுகிறதோ இல்லையோ, நாம் மாறுவோமே...
"பெற்றவர் செய்த பாவம், பிள்ளையைக் கொண்டுபோய்ச் சேரும்" என்பது நினைவுக்கு வருகிறது.
ReplyDelete