பட்டினத்தார் பாடல்கள் - அங்கமெல்லாம் நொந்து
உடம்பில் ஒரு பாகத்தில் வலி வந்தால், அந்த பகுதி மட்டும் வலிக்கும்.
கண் வலி என்றால் கண் மட்டும் வலிக்கும்.
கால் வலி என்றால் கால் மட்டும் வலிக்கும். கை வலிக்காது.
ஆனால், இந்த பிரசவ காலமும், பிரசவமும் இருக்கிறதே, உடம்பின் ஒவ்வொரு பாகமும் வலிக்கும், சோர்ந்து போகும். அது மட்டும் அல்ல, ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, பத்து மாதமும் ஏதோ ஒரு அங்கம் வலித்துக் கொண்டே இருக்கும். ஒரு நாள் கால் வலிக்கும், இன்னொரு நாள் முதுகு, இன்னொரு நாள் தலை என்று அங்கமெல்லாம் நோகும்.
பட்டினத்தார், எல்லாம் துறந்தவர், தாயின் அந்த வேதனையை உணர்ந்து பாடுகிறார்.
பாடல்
ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பே னினி”
பொருள்
ஐயிரண்டு = ஐந்து இரண்டு = பத்து
திங்களாய் = மாதமாய்
அங்கமெலாம் = அனைத்து அங்கங்களும்
நொந்து = சோர்ந்து, சலித்து
பெற்றுப் = பிள்ளையைப் பெற்று
பையலென்ற போதே = பையுள் என்றால் துன்பம். அந்த பிரசவ வலியோடே
பரிந்தெடுத்துச் = குழந்தையை அன்போடு எடுத்து
செய்ய இரு கைப்புறத்தி லேந்திக் = கையில் ஏந்தி
கனக முலை தந்தாளை = தங்கம் போல உயர்ந்த தன் தனங்களைத் தந்தாளை
எப்பிறப்பிற் காண்பே னினி = இனி எந்தப் பிறப்பில் காண்பேன்
எல்லாம் துறந்த பட்டினத்தாருக்குக் கூடத் தனது தாய் மேல் பாசம் போகவில்லையா? அருமையான பாடல்.
ReplyDelete