Pages

Tuesday, November 3, 2015

திருக்குறள் - பெரியோர் துணை

திருக்குறள் - பெரியோர் துணை 


வாழ்க்கையில் முன்னேற நாம் எத்தனையோ புத்தகங்களைப் படிக்கிறோம். மேலும் இப்போது இணைய தளங்களில் எவ்வளவோ அறிவு பொக்கிஷங்கள் கொட்டிக் கிட்டக்கின்றன. Wikdipedia , கூகிள் , ப்ளாகுகள் என்று ஆயிரம் ஆயிரம் வலை தளங்கள் அறிவை நம் இல்லதிற்குள்ளேயே கொண்டு வந்து கொட்டுகின்றன.  உலகில் எதைப் பற்றிய தகவல் வேண்டுமானாலும் சில நொடிகளில் அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.

இருந்தும், நம் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. இன்னும் சொல்லப் போனால், பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.

ஏன் ? அறிவு ஒரு தீர்வு இல்லையா ? ஞானம் வழி காட்டாதா ?  பெரியவர்கள் எல்லோரும் ஞானத்தைப் பற்றி மிக உயர்வாகச் சொல்லி இருக்கிறார்களே. பின் ஏன், இத்தனை அறிவு இருந்தும் நாம் மகிழ்ச்சியாக இல்லை ?

வாழ்கை சிறக்க வேண்டும் என்றால், படிப்பறிவு, புத்தக அறிவு மட்டும் போதாது.

இன்னும் சொல்லப் போனால், சில சமயம் புத்தகங்கள் நம்மை குழப்பக் கூடும்.  ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்களைத் தந்து நம்மை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும்.

வாழ்கை சிறக்க வேண்டும் என்றால் இரண்டு விசயங்களை சொல்கிறார் வள்ளுவர் - அற வழியில் செல்ல வேண்டும், இரண்டாவது பெரியவர்களின் துணை வேண்டும்.

பாடல்


அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை 
திறனறிந்து தேர்ந்து கொளல்.

பொருள்

அறனறிந்து = அறத்தினை அறிந்து

மூத்த வறிவுடையார் = மூத்த அறிவுடையார்

கேண்மை = நட்பு

திறனறிந்து = அவர்களின் திறமையினை அறிந்து

தேர்ந்து  கொளல் = தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாப்போம்.

அறன் அறிந்து - அதாவது நமக்கு முதலில் அறம் என்றால் என்ன என்று தெரிய வேண்டும். சும்மா முட்டாளாக இருந்து கொண்டு பெரியவர்களின் துணையை நாடுகிறேன் என்றால் அது உதாவது. அறம் என்றால் என்ன அறிந்து கொண்ட பின், அதில் சிக்கல்கள் வரும், குழப்பங்கள் வரும், அதன் முரண்களில் சிக்கித் தவிப்போம். அப்போது, பெரியோர்களின் துணையை நாட வேண்டும்.

இராமன், அறம் என்ன என்பதை வசிட்டரிடம் இருந்து கற்றுக் கொண்டான். அவன் கற்ற அறம் மாதரையும் தூதரையும் கொல்லக் கூடாது என்பது. தாடகை என்ற ஒரு பெண்  இராம இலக்குவனர்களை கொல்ல எதிர் நிற்கிறாள். அவளைக் கொல்லலாமா , கொல்லக் கூடாதா என்ற குழப்பம் வருகிறது இராமனுக்கு.  அப்போது விஸ்வாமித்திரன் சொல்லக் கேட்டான்.

மூத்த அறிவுடையார் = அது என்ன மூத்த அறிவுடையார் ? எதில் மூத்தவர்கள் ? நம் வீடுகளில் வயதானவர்கள் அடிக்கடி சொல்வதை நாம் கேட்டிருப்போம் "நான் வயசுல பெரியவன் டா ...பெரியவங்க சொன்னா கேக்கணும் " என்று. வயதால் மூத்தால் மட்டும் போதாது.  இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர் சொல்கிறார் "அறிவாலும், சீலத்தாலும், காலத்தாலும் மூத்தவர்கள்" என்று. வயது மட்டுமே போதும் என்றால் கடல் ஆமை மூன்னூறு ஆண்டுகள் வாழும், அது சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அறிவும், ஒழுக்கமும் வேண்டும். அவையும் நம்மை விட அவர்களிடம் அதிகம் இருக்கிறதா என்று பார்த்து அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். சில பேரிடம் அறிவு இருக்கும். வயதும் இருக்கும். ஒழுக்கம் இருக்காது. மூளை பூராவும் குறுக்கு சால் ஓட்டும். குயுக்தி இருக்கும். குள்ளநரித்தனம் இருக்கும். அவர்கள் பெரியவர்கள் இல்லை.


திறன் அறிந்து = ஒருவர் ஒன்றில் பெரியவர் என்றால் அவர் அனைத்து விஷயத்திலும் பெரியவராக  இருக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரிடம் என்ன திறமை  இருக்கிறது என்று அறிந்து (திறன் அறிந்து) பின் அந்த விஷயத்தில் அவர் சொல்வதை கேட்க்க வேண்டும். 

கேண்மை = திறமை உள்ளவர்களை வேலைக்கு வைத்துக் கொள் என்று சொல்லவில்லை. அவர்களிடம் நமக்கு வேண்டிய போது சென்று யோசனை கேட்டுக் கொள்ளச் சொல்லவில்லை. அவர்களது நட்பைப் பெற வேண்டும் என்கிறார்  வள்ளுவர். ஏன் என்றால் அவர்கள் நம்மோடு நட்பாக இருந்தால் நம்மிடம் உள்ள   நிறை குறைகள் அவர்களுக்குத் தெரியும். அதற்கு தகுந்த மாதிரி  யோசனை சொல்வார்கள். 

தேர்ந்து கொளல் = தேர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களை சிறப்பித்து, உயர்வு செய்து, மரியாதை செய்து அவர்களது நட்பை கொள்ள வேண்டும். 

இந்த ப்ளாகை படித்து விட்டீர்கள்தானே ?

கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசியுங்கள்.

உங்கள் நட்பு வட்டாரத்தில் அறிவில், ஒழுக்கத்தில், காலத்தில் உங்களை விட  மூத்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று. 

நிறைய பேர் இருந்தால் நல்லது.

இல்லை என்றால், ஏன் இல்லை என்று சிந்தியுங்கள். யார் யாரை துணை கொள்ளலாம் என்று  ஒரு பட்டியல் போடுங்கள். அவர்கள் நட்பைப் பெற முயலுங்கள். 

இப்படி பத்து குறள் சொல்லி இருக்கிறார், பெரியாரை துணை கோடல் என்ற அதிகாரத்தில். 

கொட்டி குவித்து விட்டுப் போய் இருக்கிறார்கள். வெட்டி எடுத்துக் கொண்டு வாருங்கள். 

வாழ்கை சிறக்கும். 

சிறக்கட்டும்.


No comments:

Post a Comment