திருவாசகம் - காணவும் நாணுவேன்
ஒரு நண்பரையோ உறவினரையோ நீண்ட நாள் பார்க்காமல் இருந்து பின் பார்த்தால் நமக்குள்ளே ஒரு நாணம் வரும் அல்லவா ?
எவ்வளவு நாள் ஒன்றாகப் பழகி இருந்தோம், நடுவில் இத்தனை நாள் பார்க்காமல், பேசாமல் இருந்து விட்டோமே. ஒரு கடிதமாவது போட்டிருக்கலாம். ஒரு போன் பண்ணி இருக்கலாம் என்று மனதுக்குள் ஒரு சிறு குறு குறுப்பு ஓடும் அல்லவா ? அது போல
இறைவா, என் வாழ்கையில் எத்தனையோ நிகழ்வுகள். அவற்றிற்கு இடையே உன்னை நான் நினைக்கவும் இல்லை, பார்க்க வரவும் இல்லை. ஒரு வேளை நீ நேரில் வந்து நின்றால் , எனக்கு உன்னை பார்க்க கூச்சமாக இருக்கும் என்கிறார் மணிவாசகர்.
அடடா, நமக்கு எவ்வளவு நல்லது செய்திருக்கிறான் இந்த இறைவன். அவனை ஒரு தரம் போய் பார்க்கவில்லையே. இப்போது எந்த முகத்தோடு அவனை சந்திப்பது என்ற நாணம் எனக்கு வரும் என்கிறார் மணிவாசகர்.
பாடல்
காணும தொழிந்தேன் நின்திருப்
பாதங் கண்டுகண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும
தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந்
துருகுந் தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி
வரினுங் காணவும் நாணுவனே.
சீர் பிரித்த பின்
காணும் அது ஒழிந்தேன் நின் திருப் பாதங்கள் கண்டு கண் குளிரப்
பேணும் அது ஒழிந்தேன் பிதற்றும் அது ஒழிந்தேன் பின்னை எம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னை நினைந்து உருகும் தன்மை என் புன்மைகளால்
காணும் அது ஒழிந்தேன் நீயினி வரினும் காணவும் நாணுவனே.
பொருள்
காணும் அது ஒழிந்தேன் = உன்னை பார்பதையும் விட்டு விட்டேன்
நின் திருப் பாதங்கள் = உன் திருவடிகளை
கண்டு = கண்டு
கண் குளிரப் = கண் குளிர
பேணும் அது ஒழிந்தேன் = போற்றுவதையும் விட்டு விட்டேன்
பிதற்றும் அது ஒழிந்தேன் = உன் பெருமைகளை உன்மந்தம் அடைந்து பேசுவதையும் விட்டு விட்டேன்
பின்னை = அப்புறம்
எம் பெருமானே = எம் பெருமானே
தாணுவே = நிலையானவனே
அழிந்தேன்= நான் கெட்டேன்
நின்னை = உன்னை
நினைந்து உருகும் தன்மை = நினைத்து உருகும் தன்மை
என் புன்மைகளால் = என்னுடைய சிறிய குணங்களால்
காணும் அது ஒழிந்தேன் = கண்டு கொள்ளவும் தவறினேன்
நீ இனி வரினும் = நீ இனிமேல் வந்தாலும்
காணவும் நாணுவனே.= உன்னை நேரில் பார்பதற்கும் நான் வெட்கப் படுவேன்
No comments:
Post a Comment