பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின் - பாகம் 2
பாடல்
வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே
பொருள்
வாழ்வதற்காக என்று இருப்பவர்களே, வந்து மண்ணும், மணமும் பெற்றுக் கொள்ளுங்கள். கூழுக்காக அலைந்து கொண்டிருப்பவர்களை எங்கள் கோஷ்டியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். ஏழேழு பிறவியாக ஒரு பழி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். அரக்கர்கள் வாழும் இலங்கை மேல் படை எடுத்துச் சென்று அதை பாழாக்கியவனுக்கு பல்லாண்டு கூறுவோம்.
இது அடுத்த பாசுரம்.
வாழாட் பட்டு = வாழ்வதற்காக ஆட்பட்டு
நின் றீருள்ளீ ரேல் = நின்று உள்ளீரேல்
வந்து = இங்கு வந்து
மண்ணும் மணமும்கொண்மின் = மண்ணும் மணமும் பெற்றுக் கொள்ளுங்கள்
கூழாட் பட்டு = கூழுக்கு ஆட்பட்டு
நின் றீர்களை = நிற்பவர்களை
எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் = எங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்
ஏழாட் காலும் = ஏழு பிறப்பிலும்
பழிப்பிலோம் நாங்கள் = பழி இல்லாமல் வாழ்பவர்கள் நாங்கள்
இராக்கதர் வாழ் இலங்கை = அரக்கர்கள் வாழும் இலங்கை
பாழா ளாகப் = பாழ் படும்படி
படைபொரு தானுக்குப் = படை எடுத்தவனுக்கு
பல்லாண்டு கூறுதமே = பல்லாண்டு கூறுவோம்
சரி, இந்த பாட்டில் அப்படி என்ன விசேஷம் ?
பெரியாழ்வாரின் பாடல்கள், அள்ள அள்ள குறையாத பொக்கிஷங்கள்.
வாருங்கள், சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.
தந்தை, நம்மை ஆசாரியனிடம் கொண்டு சேர்க்கிறார். தந்தை சொல்லித்தான் ஆசாரியனை நமக்குத் தெரியும்.
அந்த ஆசாரியன் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பான். அவன் சொல்லித்தான் இறைவன் யார் என்று நமக்குத் தெரியும்.
பெரியாழ்வார் இறைவனை கண்டு கொண்டார். அவனுக்கும், திருமகளுக்கும், சங்கு சக்ரத்துக்கும் பல்லாண்டு பாடினார்.
அடுத்து என்ன செய்வது ?
தான் மட்டும் அறிந்தால் போதாது, இறைவனைத் தேடி அலையும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
தான் மட்டும் இறைவனை அடைந்தால் போதாது, அந்த பேரின்பத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்று அவரது தாயுள்ளம் விரும்புகிறது.
வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் பக்தர்களை நான்காகப் பிரிக்கிறார்கள்.
முதலாவது, உலகில் உள்ள பொருள் செல்வத்தைப் பெறுவதற்காக பக்தி பண்ணுபவர்கள். அவர்கள் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
இரண்டாவது, ஆத்மாவை அறிய விரும்புபவர்கள். ஆத்ம அனுபவத்தை தேடுபவர்கள். அதற்காக இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள்.
மூன்றாவது, மோட்சம், வைகுண்டம் வேண்டி இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள். அவர்களுக்கு பணம் வேண்டாம், செல்வம் வேண்டாம், ஆத்ம அனுபவம் வேண்டாம்...முக்தி ஒன்றையே விரும்பி இறைவனிடம் பக்தி செலுத்துவார்கள்.
நான்காவது, இறைவனையே வேண்டும் என்று, அவனை அடைய வேண்டும் என்று பக்தி செலுத்துபவர்கள்.
(மேலும் சிந்திப்போம்)
அடியவர்களை ஆண்டவனிடம் சேர்பிப்பது ஆசாரியனின் கடமை.
ஒவ்வொருவராக அழைக்கிறார் பெரியாழ்வார்.
முதலில், யார் வர வேண்டாம் என்று நிர்ணயம் பண்ணிக் கொள்கிறார்.
பணத்துக்காக இறைவனை வேண்டுபவர்களை முதலிலேயே தள்ளி வைத்து விடுகிறார். உலக இன்பத்துக்காக அலைபவர்கள் ஒரு போதும் இறைவனை அடைய முடியாது என்பதை குறிப்பால் உணர்த்த ...
"கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்"
கூழுக்காக அலைபவர்களை (கூழுக்கு ஆட் பட்டு ) எங்கள் குழுவில் புக விடமாட்டோம் என்கிறார். இறைவனின் அடியவர்களின் கூட்டத்தில் சேர வேண்டும் என்றால் முதல் தகுதி செல்வத்தின் மேல் உள்ள ஆசையை விட வேண்டும்.
அடுத்து மீதி உள்ள மூன்று விதமான பக்தர்களில் யாரை அழைப்பது ?
எப்போதும் சிறந்தவர்களை முதலில் அழைக்க வேண்டும் என்ற மரபுப் படி , இறைவனையே அடைய வேண்டும் என்று விரும்பும் பக்தர்களை முதலில் அழைக்கிறார்.
"வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்"
வாழ்வதற்காக ஆட்பட்டு நின்று உள்ளீரேல் (இருப்பீர்கள் ஆனால்) வந்து மண்ணும் மணமும் கொண்மின் என்கிறார்.
மண்ணும் மணமும் கொள்ளுங்கள் என்றால் - திருமண்ணும், துளசியும் கொள்ளுங்கள் என்று பொருள் சொல்கிறார்கள்.
இறைவனை அடைய விரும்பும் பக்தர்களுக்கு இன்னொரு தகுதி சொல்கிறார்.
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள்
நாம் இந்த பிறவி மட்டும் பழி செயலில் ஈடு படாமல் இருந்தால் போதாது ....ஏழேழ் பிறவியும் பழி இல்லாமல் இருக்க வேண்டும். இப்போது யாராவது அவன் அடியவர்களாக இருக்கிறார்கள் என்றால் அது இந்தப் பிறவியில் மட்டும் நல்லவர்களாக இருந்ததால் வந்த நிலை அல்ல. முன்பு பல பிறவிகளில் பழி இல்லாமல் வாழ்ந்ததால் இப்போது அவன் பக்தனாக ஆகும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
அப்படி செல்வத்தில் நாட்டம் இல்லாமல், ஏழேழ் பிறவியில் பழி இல்லாமல் வாழ்ந்து, அவனையே அடையும் உள்ளம் கொண்டவர்களே வாருங்கள், அவனுக்கு பல்லாண்டு கூறுவோம் என்கிறார்.
இந்த நான்கு வகை பக்தர்கள் என்ற சிந்திப்பு சுவாரசியமானது. நன்றி.
ReplyDelete