பிரபந்தம் - வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே
இறைவன் யார் ? அவன் எப்படி இருப்பான் ? எங்கே இருப்பான் ?
பார்த்து விட்டு வந்த யாராவது நம்மிடம் சொல்லி இருக்கிறார்களா ? நாம் நேரடியாக கேட்டு இருக்கிறோமா?
இல்லை.
இருந்தாலும், பெருமாள் இப்படி இருப்பார், இவ்வளவு உயரம், இன்ன நிறம், இத்தனை கை, இந்த மாதிரி பொருள் எல்லாம் கையில் வைத்து இருப்பார், இந்த மாதிரி உடை உடுத்து இருப்பார் என்று நாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம்.
இது சரியா ?
இறைவனை அறிந்து கொள்ள வேண்டும் என்றால், அவனை தேட வேண்டும். தேட வேண்டும் என்றால், அவனைப் பற்றி தெரியாது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவனை பற்றி எல்லாம் தெரியும் என்றால் பின் எதற்கு தேடுவது ?
நம்முடைய மனதில் உள்ள எண்ணங்களை, கற்பனைகளை, பிறர் சொன்ன செய்திகளை எல்லாம் உதறி விட்டு, சொந்தமாக தேடத் தொடங்குங்கள். இறை என்பது ஒரு அனுபவம். ஒவ்வொருவரும் தனித் தனியே அனுபவிக்க வேண்டிய ஒன்று. என் அனுபவம் உங்களுக்குப் புரியாது. உங்கள் அனுபவம் எனக்குத் தெரியாது.
இறைவன் ஒரு வரையறைக்குள் உட்பட்டவன் அல்ல. நம் சிற்றறிவால் அவனை அறிந்து கொள்ள முடியாது.
"சித்தமும் செல்லா சேச்சியன் காண்க" என்பார் மணிவாசகர்.
நம் சித்தத்துக்குள் அகப்படாது.
அப்படி என்றால் இறைவனை நாம் அறிந்து கொள்ளவே முடியாதா ? தெரிந்து கொள்ளவே முடியாதா என்றால் முடியும்.
அறிவுக்கு அப்பாற்பட்டு நிற்கும் அவன், நமக்காக இரங்கி இறங்கி வருவான். அவதாரம் என்றால் இறங்கி வருதல் என்று பொருள். அவன் இறங்கி வரும் போது நாம் அவனை அறிய முடியும்.
பெரியாழ்வார் அழைக்கிறார்
"வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ"
வரம்பு ஒழிந்து வந்து ஒல்லை கூடுமினோ.
வரம்பு என்றால் எல்லைக் கோடு . இது தான் என்று இறைவனை ஒரு கட்டத்துக்குள் அடைக்காதீர்கள். அவன் எல்லை அற்றவன். நீங்கள் அந்த எல்லைகளை கடந்து சீக்கிரமாக வாருங்கள்.
அது என்ன ஒல்லை ? ஒல்லை என்றால் சீக்கிரம் என்று அர்த்தம்.
இராமாயணத்தில், இராமன் மிதிலை நோக்கி வருகிறான். அப்போது மிதிலை நகரின் கோட்டையின் மேல் இருந்த கொடிகள் எல்லாம், "மிதிலை நகரமாகிய நான் செய்த மா தவத்தினால், தாமரை மலரில் இருக்கும் திருமகள் இங்கு வந்து இருக்கிறாள். அவளை கரம் பிடிக்க நீ சீக்கிரம் வா " என்று அழைப்பது போல அந்த கொடிகள் அசைந்தன என்பார் கம்பர்.
‘மை அறு மலரின் நீங்கி.
யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்’ என்று.
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை. ‘ஒல்லை வா’ என்று
அழைப்பது போன்றது அம்மா!
பெரியாழ்வாரும் சீக்கிரம் வாருங்கள் என்று அழைக்கிறார்.
ஏன் ? என்ன அவசரம் ?
மனிதனின் வாழ்நாள் மிகச் சிறியது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், கடவுளை பற்றி சிந்திக்க எல்லாம் எங்க நேரம் இருக்கு ? இருக்கிற வேலைய பாக்கவே நேரம் இல்லை என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள். சீக்கிரமாக எங்கள் குழுவில் வந்து சேருங்கள் என்று அழைக்கிறார்.
பிள்ளையை பள்ளியில் சேர்க்க வேண்டும், பின் அதுக்கு கல்லூரியில் இடம் பார்க்க வேண்டும், பின் வேலை, பின் கல்யாணம், ஒரு பேரப் பிள்ளையை பார்க்க வேண்டும், அதற்குள் பெற்றோர்களுக்கு வயதாகி விடும், அவர்களை பார்க்க வேண்டும்...இப்படி தள்ளிக் கொண்டே போனால் நமக்கும் வயதாகி விடும்.
எனவே தள்ளிப் போடாமல் சீக்கிரம் வாருங்கள் என்று அழைப்பு விடுகிறார்.
"ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்"
எல்லோருக்கும் ஒரு குறிப்பேடு இருக்கிறது. பிறக்கின்ற தினம்,இறக்கின்ற தினம் என்று குறித்து வைத்திருக்கிறது அதில்.அது நிலத்தில் விழு முன் வாருங்கள்.
ஒன்றாகச் சேர்ந்தாலும், நமக்கு என்ன என்ன இலாபம் என்று பார்க்காமல் எல்லோருக்கும் நன்மை கிட்ட வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
"கூடும் மனம் உடையீர்கள் " என்கிறார்.
அவனுக்கு முக்தி கிடைத்து விடுமோ, அவனுக்கு பெருமாள் அருள் செய்து விடுவாரோ, நானும் தான் தினமும் பெருமாளை சேவிக்கிறேன், எனக்கு ஒண்ணும் இல்லை, அவனுக்கு மட்டும் பெருமாள் எல்லா சௌபாக்கியத்தையும் அள்ளி அள்ளி தருகிறார் என்று பொறாமை படக் கூடாது. எல்லோரும் ஒன்றாக இருக்கும் போது உள்ளம் குளிர வேண்டும்.
"கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்." என்று ஆண்டாள் கூறியபடி. மனத்தில் சூடு இருக்கக் கூடாது. குளிர்ந்து இருக்க வேண்டும்.
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்த பின் என்ன செய்ய வேண்டும் ?
நாடும் நகரமும் நன்கு அறிய "நமோ நாராயாணா" என்று கூறி அவனை பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் என்கிறார்.
பாடல்;
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே
பொருள்
ஏடு = இந்த உடல்
நிலத்தில் = நிலத்தில்
இடுவதன் முன்னம் = விழுவதற்கு முன்னால்
வந்து = இங்கே வந்து
எங்கள் குழாம்புகுந்து = எங்கள் குழுவில் சேர்ந்து
கூடு மனமுடை யீர்கள் = கூட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களே
வரம்பொழி வந்து = உங்கள் வாழ்க்கையில் எது எது எல்லைகள் என்று நீங்கள் வகுத்து வைத்து இருந்தீர்களோ அவற்றை எல்லாம் தாண்டி
ஒல்லைக் கூடுமினோ = சீக்கிரமாக வந்து கூடுங்கள்
நாடும் நகரமும் = நாடும் நகரமும்
நன்கறி ய = நன்றாக அறியும் படி
நமோ நாராய ணாயவென்று = நமோ நாராயாணா என்று
பாடு = பாடும்
மனமுடைப் பத்தருள் ளீர் = பாடும் பக்தர்களுக்கு நடுவே
வந்து = வந்து
பல்லாண்டு கூறுமினே = பல்லாண்டு கூறுங்கள்
excellent...
ReplyDeleteஅருமை..
ReplyDelete