Pages

Sunday, January 31, 2016

பிரபந்தம் - ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே

பிரபந்தம் - ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே


எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
சென்னாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனிந்து ஐந்தலைய
பை நாகத்தலைப் பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

நாம் யாருக்குமே அடிமையாக, அடியவனாக இருக்க விரும்புவதில்லை. எப்போதுமே தலைவனாக, மற்றவர்களுக்கு வழி நடத்துபவர்களாக, எல்லாவற்றையும் கட்டுபாட்டுக்குள் வைத்து இருப்பவர்களாவே இருக்க விரும்புகிறோம்.

ஆனால், நடப்பது என்ன. எவ்வளவுகெவ்வளவு நாம் இந்த உலகை, அதில் உள்ள மக்களை நம் கட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நாம் அவற்றிற்கு அடிமையாக மாறிப் போகிறோம்.

எதன் மேல் பற்று இருக்கிறதோ, அதற்கு நாம் அடிமையாகிப் போகிறோம்.

அது எப்படி ?

என் வீட்டு வேலையாள், அலுவகலத்தில் எனக்கு கீழே வேலை பார்பவர்கள், தோட்டக்காரன், வண்டி ஓட்டுபவன், இவர்களுக்கெல்லாம் நான் எப்படி அடிமையாவேன் ?

எந்தத் தலைவனும், தொண்டனுக்கு அடிமைதான்.

தொண்டனுக்கு வேண்டியதை, விரும்பியதை செய்யும் வரை தான் தொண்டன் தலைவன் பின்னால் நிற்பான்.

தொண்டன் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று தலைவன் நினைத்தால், தொண்டனுக்கு எது பிடிக்கும், எது தேவை என்று பார்த்து பார்த்து செய்ய வேண்டும்.

குடும்பத்திலும் அப்படித்தான். குடும்பத் தலைவன் சம்பாதித்து கொண்டு வரும்வரை, குடும்பத்திற்கு வேண்டியதை கொடுத்துக் கொண்டிருக்கும்வரை மற்றவர்கள் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

 இப்படி ஆயிரம் இடத்தில் அடிமைகளாகத்தான் இருக்கிறோம்.

என்ன ஒரு ஆறுதல் என்றால், நாம் விரும்பியே அடிமைகளாக இருக்கிறோம்.

இப்படி யார் யாருக்கோ அடிமைகளாக இருப்பதை விட, ஏன் இறைவனுக்கே அடியவனாக இருக்கக் கூடாது ?


 பெரியாழ்வார் சொல்கிறார்

"உனக்கு என்று ஆட்பட்டோமோ அன்றில் இருந்து நான் மட்டும் அல்ல, என் குடும்பமே வீடு பேற்றை அடைந்து விட்டோம் "

இறைவனுக்கு ஆட்படுவதில்தான் பெரியவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம்....

"நான் உன் அடிமை. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள். நான் உன்னுடைய பொருள். நீ என்னை ஆண்டு கொள், விற்க வேண்டும் என்றால் விற்றுக் கொள், அடமானம் வைக்க வேண்டும் என்றால் அடமானம் வைத்துக் கொள். ஆனா ல், என்ன செய்தாலும், என்னை விட்டு விடாதே" என்று உருகுகிறார் மணிவாசகர்.

இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,

மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.

நான் என்றைக்கு உனக்கு அடியவனானேனோ, அன்றே நானும் என் குலமும் வீடு பேற்றினை அடைந்து விட்டோம்.

அப்படி என்று யாரிடம் சொல்கிறார் ?

"ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே "

ஐந்து தலையுடன் படம் எடுத்து ஆடும் நாகப் பாம்பின் மேல் பாய்ந்தவனே என்று கண்ணனாக வந்த திருமாலிடம் கூறுகிறார்.

அது என்ன ஐந்து தலை நாகம் ?

புலன்கள் ஐந்தையும் அடக்கி அதன் மேல் நடனம் ஆடியவன். மற்றவர்கள் இந்த ஐந்து புலன்களையும் கண்டு பயப்படுவார்கள். கண்ணன் , அந்த பாம்பை அடக்கி அதன் மேல் நடனம் ஆடினான். புலன்களை அடக்கி விட்டால், பின் அவை நாம் சொல்வதை  கேட்கும். இல்லை என்றால் , அது நம்மை பாடாய் படுத்தும்.

பாடல்

எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
சென்னாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனிந்து ஐந்தலைய
பை நாகத்தலைப் பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

பொருள் 

எந்நாள் =எந்த நாளில்

எம்பெருமான் = என்னுடைய பெருமானே

உன்றனுக்கு = உனக்கு

அ டியோமென்று = அடியவன் என்று

எழுத்துப் பட்ட = எழுதி தந்து விட்டோமோ

அந்நாளே = அந்த நாளே

அடியோங்கள் = அடியவர்களாகிய நாங்கள்

அடிக்குடில் = குலம் முழுவதும்

வீடு பெற்றுய்ந்தது காண் = வீடு பேற்றினை அடைந்தோம்

சென்னாள்  = செம்மையான நாளில் . சிறந்த நாளில்

தோற்றித் = தோன்றி

திருமதுரையுட் = மதுராபுரியில்

சிலைகுனிந்து = வில்லை வளைத்து

ஐந்தலைய = ஐந்து தலையை கொண்ட

பை = படம் எடுத்து ஆடும்

நாகத்தலைப் பாய்ந்தவனே ! = நாகத்தின் தலையின் மேல் பாய்ந்தவனே

உன்னைப் பல்லாண்டு கூறுதுமே = உனக்கு பல்லாண்டு என்று வாழ்த்து கூறுகிறோம்















Saturday, January 30, 2016

பிரபந்தம் -உடுத்து களைந்த ஆடை

பிரபந்தம் -உடுத்து களைந்த ஆடை 




உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
      வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே 

எப்போதாவது அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்தது உண்டா ? அம்மாவின் சேலைக்கு ஒரு மணம் உண்டு. அம்மாவின் மணம் அந்த சேலையில் இருக்கும்.

எப்போதாவது அப்பாவின் மடியில் தலைவைத்து படுத்தது உண்டா ? அப்பாவின் வேட்டியிலும் அப்பாவின் மணம் தெரியும்.

குழந்தையை தோளில் போட்டு தூங்க வைக்கும் போது குழந்தையின் மணம் தெரியும்.

அன்யோன்யமாய் இருப்பவர்களுக்கு இந்த வாசம் தெரியும்.

உடுத்த உடையில், உடுத்தியவரின் வாசம் இருக்கும்.

இந்த உலகை யார் படைத்தார் ? படைத்தவன் பெயர் என்ன ? ஊர், விலாசம் என்ன ? உலகம் படைக்கப் பட்டதா அல்லது தன்னைத் தானே படைபித்துக் கொண்டதா ?

விடை தெரியாத கேள்விகள்.

எது எப்படியோ, ஒன்று மட்டும் நிச்சயம், நீங்களோ, நானோ இந்த உலகைப் படைக்கவில்லை.

யாராலோ, எப்படியோ படைக்கப் பட்டது. அது யார் என்று தெரிய வேண்டும் என்றால், உலகை அன்யோன்யமாக, ஆழ்ந்து அனுபவித்தால் இது யாரிடம் இருந்து  வந்தது என்று தெரியும்.

புடவையின் மணத்தைக் கொண்டு அம்மாவை அறிவதைப் போல, உலகினை அறிந்தால், உலகைப் படைத்தவனை அறிய முடியும்.

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்

அவன் உடுத்த ஆடை, அவன் உண்ட உணவு, அவன் சூடிய மாலை இவற்றை உடுத்து, உண்டு, சூடி அவனை அறியலாம்.

உண்ணும் உணவு, உடுக்கும் உடை, சூடும் மாலை என்பன குறியீடுகள். இந்த உலகில் எல்லாம்   எங்கிருந்தோ வந்தது. உலகில் உள்ளவற்றை ஆழ்ந்து அறிவதன் மூலம்   இதைப் படைத்தவனை அறியலாம்.

ஆடை - கண்டு அறிவது. பார்த்தால் அதன் நிறம் தெரியும். கனம் தெரியும். பார்த்து அறிவது.  புறத் தோற்றம். பீதக ஆடை என்றார். பீதகம் என்றால் மஞ்சள். மஞ்சள் நிற ஆடை. மஞ்சள் அல்ல எங்கே முக்கியம். ஆடை என்பது பார்த்து அறியக் கூடியது. ஒரு புறத் தோற்றம் உள்ளது. 

உணவு - உணர்வது. உணவை பார்த்து அறிய முடியாது. சுவைத்துத் தான் உணர முடியும்.  எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியாது. இனிப்பு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா ? வெளியில் சொல்ல முடியாது. அனுபவிக்க முடியும். 

மணம்  -  துளசியின் மணம் .  மணம் காற்றில் இருக்கும். உருவம் அற்றது. எங்கும் பரந்து விரிந்து கிடக்கும். 

ஆடையை நான் மட்டும்தான் அணிய முடியும்.

உணவை கொஞ்ச பேருடன் பகிர்ந்து உண்ணலாம். 

மணம் என்பதை நான் பிடித்து வைக்க முடியாது. ஒரு சமயம் இருக்கும், அதை உணர்வதற்குள் மறைந்து விடும். அது எல்லோருக்கும் பொது. 

முதலில்  இறைவன் என்பவன் எனக்கு மட்டும் தான் என்ற எண்ணம் இருக்கும். எனக்கு அருள் புரிய வேண்டும், எனக்கு உதவி செய்ய வேண்டும், எனக்கு பரம பதம் அருள வேண்டும்,  என்ற  சுயநலம் சார்ந்தே பக்தி ஆரம்பிக்கிறது. 

அடுத்த கட்டம், பக்தியை, இறை அனுபவத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது. எல்லோரிடமும் என்றால் நமக்கு தெரிந்த, அருகில் உள்ள எல்லோரிடமும். 

அதற்கும் அடுத்த கட்டம், இறை உணர்வ, பக்தி என்பது எங்கும் பரவி நிற்பது. நான் யார்   அதை மற்றவர்களுக்குத் தர ? அது எல்லோருக்கும் பொது என்ற எண்ணம் வருவது. 

அவனை அறிவது. அறிந்த அவனை மற்றவர்களோடு  பகிர்ந்து கொள்வது. அறிவதும், உணர்வதும், பகிர்வதும் சுய முயற்சியால் நிகழ்வது. இவை அனைத்தையும் தாண்டி, என்றும் எப்போதும் இருக்கும் இறை தன்மையை உணர்வது  அடுத்த கட்டம். அது நம் சிந்தனைக்கும், அறிவுக்கும் சிக்காதது. ஒரு சமயம்  புரிந்த மாதிரி இருக்கும். மறு சமயம் நழுவி விடும்.  துளசியின் மணம் போல.

அறிவால் அறிவது. - "நீ உடுத்த பீதக ஆடை "

உணர்வால் புரிவது.- "கலந்தது உண்டு "

அறிவையும், உணர்வையும் தாண்டி நிற்பது  " தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன"

பாடல்

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
      வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே 


பொருள்

உடுத்துக் களைந்த = உடுத்து களைந்த

நின் = உன்னுடைய

பீதக ஆடை = மஞ்சள் நிற ஆடை

உடுத்து = (அதை நாங்கள் ) உடுத்து

கலத்தது உண்டு = (நீ) உண்ட கலத்தில் உண்டு

தொடுத்த துழாய் மலர் = தொடுத்த துளசி மற்றும் மலர்  மாலையை

சூடிக் = நீ சூடி

களைந்தன சூடும் = நீ அதை களைந்த பிறகு அதை சூடும்

இத்தொண்டர்களோம் = தொண்டர்களாகிய நாங்கள்

விடுத்த = நீ சொல்லிய

திசைக் கருமம் = அன்றாட கருமங்களை

திருத்தித் = திருத்தமாகச் செய்து

திரு வோணத் திருவிழவில் = திருவோண நட்சத்திரத்தில் வரும்
திருவிழாவில்

படுத்த = பள்ளி கொண்ட

பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப் = படம் எடுத்து ஆடும் நாகத்தின் மீது பள்ளி கொண்டவனுக்கு

பல்லாண்டு கூறுதுமே = பல்லாண்டு கூறுவோம்


Thursday, January 28, 2016

திருக்குறள் - நினைத்ததை அடைய

திருக்குறள் - நினைத்ததை அடைய


உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

மனதில் நினைத்ததை அடைய யாருக்குத்தான் ஆசை இருக்காது ? நினைப்பது எல்லாம் நடக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறார்கள்.

ஆனாலும், நடப்பதிலையே ...ஏன் ?

மனதில் நினைத்ததை சாதிக்க வள்ளுவர் ஒரு வழி சொல்லித் தருகிறார்.

நாம் நம் மனதில் நினைத்ததை அடையாமல் போவதற்கு காரணம் ...

"மறதி"

மறதிக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் ? நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள் தங்கள் மனதில் நினைத்ததை எல்லாம் அடைந்து விடுவார்களா ?

கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

முதலில் சில உதாரணங்களைப் பாப்போம்.

நம்மில் பல பேருக்கு எடையை குறைக்க வேண்டும்,  நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்,  கண்டதையும் தின்னக் கூடாது என்ற எண்ணம் உண்டல்லவா ?

ஏன் அது நடக்க மாட்டேன் என்கிறது ? ஏன் எடை குறைய மாட்டேன் என்கிறது ?

காரணம் - ஒரு எண்ணெய்  பலகாரத்தைக் கண்டவுடன், ஒரு இனிப்பு பலகாரத்தைக் கண்டவுடன், சாக்லேட், ஐஸ் கிரீம் இவற்றைப் பார்த்தவுடன் ஆரோக்கியமான  உணவை மட்டுமே உண்ண வேண்டும் என்பது "மறந்து" போகிறது. ஆரோக்கியம் இல்லாத உணவை உட்கொண்டு உடம்பை கெடுத்துக் கொள்கிறோம்.

ஒரு மாணவன், நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று மனதில்  நினைக்கிறான்.

தொலைக் காட்சியில் நல்ல படம் வந்தால்,  படிக்க வேண்டும் என்ற எண்ணம் "மறந்து" போகிறது. நண்பர்கள் வெளியே சுத்தலாம் என்று கூப்பிட்டால் , படிக்கும் எண்ணம் "மறந்து" போகிறது.

இந்த உதாரணத்தை நீட்டிக் கொண்டே போகலாம்

- பணம் சம்பாதிக்க, தொழிலில் முன்னேற, கணவன் மனைவி உறவு பலப்பட என்று எந்த எண்ணத்திற்கும் பொருத்தலாம்.

 நமக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் அதை தொடர்ந்து செய்வது இல்லை.

மனைவியிடம் சண்டை பிடிக்கக் கூடாது என்று மனதில் எண்ணம் இருக்கும்.   ஆனாலும், அதை "மறந்து" விட்டு, ஏதோ ஒரு காரணத்துக்காக சண்டை பிடித்துவிடுவோம்.

எடையை குறைக்க வேண்டுமா, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா ...ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் இது சரியான உணவுதானா, என் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுதானா என்ற நினைப்போடு இருக்க வேண்டும். மறந்து விடக் கூடாது.



பாடல்

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

பொருள் 

உள்ளியது = மனதில் நினைத்தது

எய்தல் =அடைதல்

எளிது = எளிது

மன் = அசைச் சொல் அல்லது மன்னன்/தலைவன் என்று கொள்ளலாம்

மற்றுந்தான்  = மற்றபடி அவன்

உள்ளியது = மனதில் நினைத்ததை

உள்ளப் பெறின் = (எப்போதும் ) நினைப்பான் ஆனால்

எந்நேரமும் அதே சிந்தனையோடு இருக்க வேண்டும்.

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்பார் மணிவாசகர்.

அவருக்கு பக்தி ஒன்றே குறிக்கோள். இறைவனின் திருவடிகள் ஒரு கண் இமைக்கும் நேரம்  கூட  அவர் மனதில் இருந்து நீங்கவில்லை.

அது போல, நாம் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை ஒரு போதும் மறக்கக் கூடாது. மறந்து, அதற்கு எதிரான ஒன்றைச் செய்யக் கூடாது.


மனம்தான் செயலை நடத்திச் செல்லும். நாம் எதை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ, நம் செயலும் அந்தத் திசையிலேயே போகத் தொடங்கும்.


சரி, சிந்தித்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமா ? நினைத்தது நடந்து விடுமா ?

நடக்காது.

அந்த சிந்தனை எப்படி இருக்க வேண்டும், சிந்தனையைத் தொடர்ந்த செயல் எப்படி இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

ஆனால் , முதல் படி மறக்காத சிந்தனை.

இதை, மறக்காதீர்கள். 















Wednesday, January 27, 2016

பிரபந்தம் - வெள்ளுயிர் ஆக்க வல்ல

பிரபந்தம் - வெள்ளுயிர் ஆக்க வல்ல


நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே

நெய்யோடு கூடிய சோறு, தினமும், அரசாங்கத்தில் பெரிய வேலையும், தாம்பூலமும், கழுத்துக்கும், காதுக்கும்  அணியும் ஆபரணங்களும், உடம்பில் பூசிக் கொள்ள நல்ல சந்தனமும் தந்து என்னை நல்லவானாக்கிய, படம் எடுத்து ஆடும் பாம்பின் எதிரியான கருடனைக் கொடியாகக் கொண்டவனை பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம்.

இதில் என்ன இருக்கிறது ? பெருமாள் எனக்கு எல்லா சௌகரியங்களும் செய்து தந்து இருக்கிறார், நான் அவரை அவரை வாழ்த்துகிறேன் என்று சொல்கிறார்.

சரி. இதில் நமக்கு என்ன செய்தி இருக்கிறது ? இதன் ஆழ்ந்த அர்த்தம் என்ன ?

நாம் இறைவனை எப்போது சிந்திப்போம் ?

நமக்கு ஏதாவது துன்பம் வந்தால், ஆபத்து வந்தால், சிக்கல் வந்தால் , துக்கம் வந்தால் இறைவனை  நினைப்போம். அவனிடம் வேண்டிக் கொள்வோம்.

சந்தோஷம் வந்தால் எப்போவாவது இறைவனை நினைப்போமா ? ஏதோ எல்லாம் நாமே சாதித்து முடித்தது போல நாம் நினைப்போம். என் உழைப்பு, என் திறமையால் எனக்கு இந்த செல்வங்கள் கிடைத்தது, இந்த வாழ்வு கிடைத்தது, இந்த சந்தோஷம் கிடைத்தது என்று நினைப்போம்.

அப்படி அல்ல.

நமக்கு கிடைக்கும் எல்லாம் அவன் தந்தது என்று நினைத்தால், வரும்போது அளவு கடந்த சந்தோஷம் வராது. போகும் போது நெஞ்சை அடைக்கும் துக்கம் வராது.

அவன் தந்தது, அவன் எடுத்துக் கொண்டான். இதில் என் வேலை என்ன என்ற சம நிலை வரும்.

எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும். எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும். எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் உருகுவார்.

வேண்டத் தக்கது அறிவை நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
    யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில்
    அதுவும் உன்றன் விருப்பன்றே.


எனவே, பெருமாளே, எனக்கு கிடைத்தது எல்லாம் நீ பார்த்து தந்தது என்று நன்றியோடு நினைக்கிறார்.

செல்வம் , பதவி, இன்பம் வரும்போது அவனை நினையுங்கள். எல்லாம் அவன் தந்தது என்று நினையுங்கள்.

அப்படி நினைத்தால் என்ன நிகழும் ?

இறைவன் தந்தது என்று நினைத்தால் அது பிரசாதமாகி விடுகிறது. அதை பக்தியோடு பெற்றுக் கொள்ள வேண்டும். பக்தியோடு அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும்.

அதில் குறை நிறை பார்க்கத் தோன்றாது. கொஞ்சம் கிடைத்தாலும் திருப்தி அடையத் தோன்றும்.

மேலும் வேண்டும், மேலும் வேண்டும் என்ற ஆசை தோன்றாது. ஒரு துளசி இலை கிடைத்தாலும் சந்தோஷம்தான். ஒரு மூட்டை துளசி இலை பிரசாதம் வேண்டும்  என்று மனம் நினைக்காது. ஒரு தேக்கரண்டி தீர்த்தம் கிடைத்தாலும்  சந்தோஷமாக பெற்றுக் கொள்ளத் தோன்றும். ஒரு அண்டா நிறைய தீர்த்தம் வேண்டும் என்று நினைக்கத் தோன்றாது.

கிடைத்தது எல்லாம் பிரசாதம் என்று நினையுங்கள். கிடைத்ததில் திருப்தி தோன்றும். பேராசை தோன்றாது. கிடைக்கவில்லை என்றால் துக்கம் வராது.

இது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், மனிதனுக்கு தேவைகள் இருக்கும் வரை, அவற்றை அடையும் ஆசை இருக்கும் வரை இறை நினைவு வராது.

இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும், பதவி உயர்வு வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் , ஊக்கத் தொகை (bonus ) வேண்டும், அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்று மனிதன் உலக சுகங்களின் பின்னால் அலைந்து கொண்டே இருப்பான்.

அதற்கு ஒரு முடிவே இல்லை. இதில் இறை நினைப்பு எங்கே வரப்போகிறது ?

நம்மாழ்வார் சொல்கிறார்...உண்ணும் உணவு, மெல்லும் வெற்றிலை, (அடைக் காய்), அன்றாடம் செய்யும் வேலை, உடம்பில் பூசும் சந்தனம் எல்லாம் அவன் தந்தது என்று நினைத்தால், அல்லும் பகலும் அனவரதமும் அவன் நினைப்பு இருக்கும். அது மட்டும் அல்ல, அப்படி நினைக்கும் போது மனம் தூய்மை ஆகிறது. "வெள்ளுயிர் ஆக்க வல்ல "

வெள்ளுயிர் என்றால் வெண்மையான உயிர். தூய்மையான உயிர்.

அவன் தந்தான், நான் பெற்றுக் கொண்டேன் என்று நினைப்பு வரும்போது மனம் தூய்மை அடைகிறது.

என் வாழ்வும் வசதியும் என் மேல் அதிகாரி எனக்குத் தந்தது இல்லை, என் சக ஊழியனிடம் இருந்து நான் தட்டிப் பறித்தது இல்லை, மற்றவனுக்கு கிடைக்க நான் தடையாய்...அவரவர்களுக்கு களுக்கு வேண்டியதை அவன் தருகிறான்.

யாருக்கு எவ்வளவு , எப்போது தரவேண்டுமோ அப்போது பங்கிட்டுக் கொடுக்கிறான்.

பகுத்து கொடுப்பதால் அவன் பகவன்.

அகர முதல் எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு.

என் மேலதிகாரி எனக்கு ஊதிய உயர்வு தருவானோ, மாட்டானோ ?

எனக்குத் தராமல் மற்றவர்களுக்குத் தந்து விடுவானோ ?

என்றெல்லாம் நமக்கு ஒரு பயமும், பதற்றமும் இருக்கும். இந்த பயத்தில், பதற்றத்தில் மேலதிகாரி சொல்வதெல்லாம் கேட்க வேண்டும், தேவை இல்லாமல் அவனைப் புகழ வேண்டும்...

இவர்கள் யார் எனக்குத் தருவதற்கு. பெருமாள் தருகிறார். நான் பெறுகிறேன். இடையில் இவர்கள் யார் என்ற நிமிர்வு வருகிற போது வாழ்க்கையில் பயமும், பதற்றமும் போய் மிதக்கும் மேகம் போல மனம் இலேசாகிப் போகிறது.


பாடல்

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே

பொருள் 

நெய்யிடை =நெய் இடை இடையே இட்ட

நல்லதோர் சோறும் = நல்ல உணவும்

நியதமும் = தினமும்

அத்தாணிச் சேவகமும் = அத்தாணி என்றால் அரச மண்டபம். அரசவை. பெரிய வேலை என்று வைத்துக் கொள்ளலாம்.

கையடைக் காயும் = அடைக் காய் என்றால் பாக்கு. வெற்றிலை பாக்கும்.

கழுத்துக்குப்  பூணொடு = கழுத்தில் அணியும் சங்கிலியோடு

காதுக்குக் குண்டலமும் = காதில் அணியும் குண்டலமும்

மெய்யிட = மெய்யில் இட. உடம்பில் பூசிக் கொள்ள

நல்லதோர் சாந்தமும் = நல்ல மணமுள்ள சந்தனமும்

தந்து = தந்து

என்னை = என்னை

வெள்ளுயி ராக்கவல்ல = தூய்மையானவனாக ஆக்கும் வல்லமை படைத்த



பையுடை = படம் எடுத்து ஆடும் 

நாகப் = நாகப் பாம்புக்கு 

பகைக் = பகையான கருடனை 

கொடி யானுக்குப் = கொடியாகக் கொண்டவனுக்கு 

பல்லாண்டு கூறுவனே = பல்லாண்டு கூறுவேன் 

அவன் தராமல் வராது.

அவன் தடுக்காமல் நிற்காது.

வருவது வரட்டும் என்று இருங்கள். வாழ்கை இனிக்கும். 




Sunday, January 24, 2016

பிரபந்தம் - ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

பிரபந்தம் - ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே


பாடல்

தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி
பாய* சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்

"நெருப்பை விட சுடர் விட்டு பிரகாசிக்கும் சங்கு மற்றும் சக்கரத்தை உடலில் சின்னமாகக் கொண்டு வழி வழியாக அவனுக்கு ஆட் செய்கின்றோம். மாயங்களில் வல்லவனான பாணனை அவனுடைய ஆயிரம் தோள்களும் இரத்தம் சிந்த சக்கரத்தை விடுத்த அவனுக்கு பல்லாண்டு கூறுவோம் "

தீயிற்பொலிகின்ற = நெருப்பை விட பொலிவுடன் விளங்கும்

செஞ்சுடராழி = சிவந்த சக்கரம்

திகழ் திருச்சக்கரத்தின் = கரத்தில் திகழும் சக்கரத்தின்

கோயிற் = உடலில்

பொறியாலே = சின்னமாகத் தரித்துக் கொண்டு

ஒற்றுண்டு = ஒன்றாகக் கூடி

 நின்று = நின்று

 குடிகுடி ஆட்செய்கின்றோம் = தலை முறை தலை முறையாக  ஆட் செய்கின்றோம்

மாயப் = மாயங்களில் வல்லவனான

பொருபடைவாணனை = சண்டையிடும் படைகளைக் கொண்ட வாணன் என்ற அசுரனை

ஆயிரந்தோளும்= அவனுடைய ஆயிரம் தோள்களும்

பொழிகுருதி பாய = இரத்தம் பொழிந்து பாய

சுழற்றிய ஆழிவல்லானுக்குப் = சக்கரத்தை சுழற்றிய வல்லவனான பெருமாளுக்கு

 பல்லாண்டு கூறுதுமே. = பல்லாண்டு கூறுவோமே

சரி. இதன் மூலம் பெரியாழ்வார் என்ன சொல்ல வருகிறார். நாங்கள் அவனுக்கு  தொண்டு செய்கிறோம். அவன் அரக்கனை கொன்றான்.

அதனால் என்ன ? இதை அறிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்.  இதை ஏன் வேலை மெனக்கெட்டு ஆழ்வார் சொல்கிறார் ? இதில் ஆழ்ந்த அர்த்தம் எதாவது இருக்குமா ?

தேடுவோம் .

உலகில் எவ்வளவோ பேர் கை, கால், கண் போன்ற அவயங்கள் இல்லாமல் துன்பப் படுகிறார்கள்.  சிலருக்கு அவை இருந்து சரி வர செயல் படாமல் துன்பப் படுகிறார்கள்.

நமக்கு எல்லா அவயங்களும் நான்றாக இருக்கின்றன. நம் உடலில் உள்ள அவயங்கள் எல்லாம் நல்லபடி இயங்க நாம் செய்தது என்ன ? ஒன்றும் இல்லை.  நமக்கு வழங்கப் பட்டது அவ்வளவுதான்.

ஆரோக்கியமான உடல், சிறந்த மனம் , நல்ல வகையில் செயல் படும் அறிவு இவற்றை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்கிறோம் ?

சில பேர் தனக்கு தனக்கு என்று சுய நலமாக தங்களுக்கு வேண்டியதை செய்து கொள்கிறார்கள்.

சிலர் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள்.

சிலர், இவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கிறார்கள். அவனை எப்படி கெடுக்கலாம், அவன் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம், மற்றவனை எப்படி  அழிக்கலாம், என்று தீய வழியில் போகிறார்கள்.

அறிவை பெற்றதின் பயன் அவனை வணங்குவது.

வள்ளுவர் சொல்கிறார்

கற்றதனால் ஆய பயன் கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 

கல்வியினால் பயன் என்ன, அவன் திருவடிகளை தொழாவிட்டால் ?

வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், 
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச் 
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே 
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!

என்பார் திருநாவுக்கரசர்.

பெரியாழ்வார் சொல்கிறார் , சங்கையும் சக்கரத்தையும் தோளில் பொரித்துக் கொண்டு  அவனுக்கு தலை முறை தலை முறையாக தொண்டு செய்கிறோம் என்று.

பகவான் பானாசுரனுக்கு ஆயிரம் கைகள் கொடுத்தார். ஆயிரம் கைகளில் எவ்வளவு  நல்லது செய்து இருக்கலாம் ? செய்யவில்லை. மாறாக, அவற்றின் மூலம்  மற்றவர்களுக்கு துன்பம் செய்தான். பகவான் அவன் கரங்களை அறுத்து எறிந்தார்.  அவனைக் கொல்லவில்லை. பிறருக்குத் துன்பம் தந்த கைகளை  துண்டித்தார்.

பலன் தராத மரங்கள் எல்லாம் வெட்டி தீயில் இடப்படும் என்றார் இயேசு கிறிஸ்து .

சிந்தித்துப் பார்ப்போம்.

நமக்கு கிடைத்தது எத்தனை ? அவற்றின் மூலம் எத்தனை பேருக்கு நல்லது செய்து இருக்கிறோம் ?  எத்தனை உள்ளகளை மகிழச் செய்து இருக்கிறோம் என்று.

இது வரை செய்யாவிட்டால் என்ன ...இன்றிலிருந்து செய்யலாமே.

என்ன சரிதானே ?




திருக்குறள் - இகல்

திருக்குறள் - இகல் 



இகல் என்ப-எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்புஇன்மை பாரிக்கும் நோய்.

மனிதனுக்கு துன்பம் பெரும்பாலும் இரண்டு இடங்களில் இருந்து வருகிறது...ஒன்று உடலினால் ஏற்படும் துன்பம், இரண்டாவது மனிதனால் ஏற்படும் துன்பம்.

உடல் உபாதைகளை எளிதில் கண்டு கொள்ளலாம்...உடலுக்கு ஒரு வியாதி வரும் என்றால் அதன் விளைவுகள் அதைக் காட்டிக் கொடுத்து விடும்...உடல் சூடு அதிகம் ஆகும், தலை வலி, காய்ச்சல், பசி இன்மை, தூக்கம் இன்மை என்று பல விதங்களில் அந்த நோய் வெளிப்படும். அதைக் கொண்டு இது இன்ன நோய் என்று அறிந்து அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்யலாம்.

மனதில் வரும் நோயை கண்டு கொள்வதும் கடினம். குணப் படுத்துவதும் கடினம்.

பொறாமை, பேராசை, களவு எண்ணம், கோபம், பொருந்தாக் காமம் போன்ற  மனதில் தோன்றும் நோய்களை கண்டு கொள்வதும் கடினம், நீக்குவதும் கடினம்.

மாற்றான் மனைவி மேல் காமம் கொண்ட இராவணனுக்கு தான் செய்வது தவறு என்றே தெரியவில்லை. தெரிந்தால் அல்லவா திருத்திக் கொள்ள.

மேலும், மன நோய்களுக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. நம்மைச் சுற்றி உள்ளவர்கள் இந்த நோயை வளர்த்து விட்டு அதில் ஆதாயம் பார்ப்பார்கள்.

அதில் முதலாவதாக வருவது, பிரிவினை.

மக்களை பிரித்து வைத்தால், அவர்களை ஆள முடியும். நாட்டின் பெயரால், மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால் மக்களை பிரித்து ஒருவர் மேல் மற்றவருக்கு ஒரு வெறுப்பினை வளர்த்து விட்டு ஒவ்வொரு அரசியல் வாதியும், மத குருமார்களும் தங்கள் ஆதாயத்தை பார்த்துக் கொள்கிறார்கள். அப்பாவி மக்கள் அது தெரியாமல் வெறுப்பினை வளர்த்துக் கொண்டு நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.

தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால், எப்படி எல்லாம் மக்களை பிரித்துப் போட்டிருக்கிறார்கள்..

மொழியின் பெயரால், ஜாதியின் பெயரால், வட இந்தியா, தென் இந்தியா என்ற நில பாகுபாடால்...இப்படி பல வழிகளில் மக்கள் மத்தியில் வெறுப்பினை தூவி அரசியல் வாதிகள் குளிர் காய்கிறார்கள்.

நாடு அளவுக்கு ஏன் போக வேண்டும்.

சொந்தத்தில், வீட்டில், நட்பில், அலுவலகத்தில் - மற்றவர் கொண்ட வெறுப்பால் எவ்வளவு சிக்கல்கள் வருகின்றன. வெறுப்பு என்ற குணம் வந்தவுடன், யார் மேல் வெறுப்பு கொண்டோமோ அவர்களை விட்டு விலகிப் போய் விடுகிறோம். பின், விலகியதற்கு காரணம் கண்டு பிடிக்கிறோம். மேலும் வெறுப்பை கூட்டுகிறோம்.

வெறுப்பு என்பது இல்லாவிட்டால், யார் மீதும் பகை இல்லை.

நட்பு இருக்கிறதோ இல்லையோ, பகை இருக்காது.

இந்த வெறுப்பைப் பற்றி வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்....

இகல் என்று பெயர்.

இகல் என்றால் வெறுப்பு.

பாடல்

இகல் என்ப-எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்புஇன்மை பாரிக்கும் நோய்.

பொருள்

இகல் என்ப = இகல் என்பது என்ன என்றால்

எல்லா உயிர்க்கும் = அனைத்து உயிர்களுக்கும்

பகல் என்னும் = பிரிவினை என்னும் (பகுத்தல் என்பதில் இருந்து பகல்)

பண்புஇன்மை = பண்பற்ற செயல்

பாரிக்கும் நோய் = உலகில் நிலவும் நோய் (பார் = உலகம்)

வெறுப்பு வந்தால் பிரிவினை வரும். பிரிவினை வந்தால், சேர்ந்து வாழ்வதில் உள்ள சுகம் போகும். அதன் மூலம் வரும் வசதிகள், நன்மைகள் போகும்.

சிந்தித்துப் பாருங்கள்...யார் மேல் எல்லாம் உங்களுக்கு வெறுப்பு என்று. அந்த வெறுப்பு எங்கிருந்து வந்தது என்று. அந்த வெறுப்பினால் விளைந்தவைகள் என்ன என்ன என்று.

வெறுப்பை மாற்றுங்கள். வாழ்வு இனிக்கும்.

வள்ளுவர் சொல்கிறார்.



















Saturday, January 23, 2016

பிரபந்தம் - பந்தனை தீர பல்லாண்டு பாடுதமே

பிரபந்தம் - பந்தனை தீர பல்லாண்டு பாடுதமே 


எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே

ஒரு நாள் கொஞ்சம் அதிகமா வேலை செய்து விட்டால் உடம்பு அசந்து போகிறது. ஒரு நாள் கொஞ்சம் அதிகம் வெயிலில் நடந்து விட்டால் தலை வலி வந்து விடுகிறது. எங்காவது வரிசையில் கொஞ்ச நேரம் அதிகம் நின்று விட்டால் கால் வலிக்கிறது.

பெருமாள் எத்தனை காலம் அவன் பக்தர்களுக்காக எவ்வளவு வேலை செய்கிறான். அவனுக்கு அசதி வராதா ?

அதைப் பற்றி யோசிக்காமல் , பெருமாளே எனக்கு இதைச் செய்து கொடு, அதைச் செய்து கொடு என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம். எப்போதாவது அவனுக்கு கொஞ்சம் ஓய்வு தரவேண்டும் என்று நமக்குத் தோன்றியது உண்டா ? 

பெருமாளுக்கு அசதி வருமோ வராதோ தெரியாது. ஆனால் வருமே என்று நினைத்து பெரியாழ்வார் உருகுகிறார். அவன் உடல் அசதி தீர்ந்து அவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பல்லாண்டு பாடுகிறார். 

அது, அவரின் பக்தியின் உச்சம்.

"பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே"

பந்தம் என்றால் கட்டுதல், பிணைத்தல். இங்கே கட்டப் பட்டதால் வரும் வலி அல்லது  அசதி என்று கொள்வது சரியாக இருக்கும்.

எங்கே கட்டப்பட்டு கிடந்தான் ?


"அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை"

அந்தி நேரத்தில் சிங்க உருவாகி அரக்கனை அழித்தவனை

அவன் பக்தனான பிரகலாதனுக்காக தூணுக்குள் அடங்கி இருந்தான். இரணியன் தூணைப் பிளந்தவுடன் அதில் இருந்து வெளிப் பட்டு அவனைக் கொன்றான்.

பக்தனுக்காக கல் தூணுக்குள் அடைந்து கிடந்தான். 

கல்லுக்குள் அடைந்து கிடந்தால் உடம்பு வலிகுமா இல்லையா ?

பெருமாள் எவ்வளவு பெரிய ஆள் என்று நினைத்து வியந்திருக்கிறோமே தவிர கல் தூணுக்குள் அடைந்து கிடந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தோமா ?

அடுத்த முறை நரசிங்க பெருமாளை பார்க்கும் போது , பாவம் நமக்காக எவ்வளவு எல்லாம்  கஷ்டப் பட்டு இருக்கிறார் என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். 

இந்த பக்தி , எந்த பேரன்பு, பெரியாழ்வாருக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று ?

அவரே சொல்கிறார்.

இது இன்று நேற்று வந்தது அல்ல. "என் தந்தை, அவரின் தந்தை என்று போய்க் கொண்டே இருந்தால் எல்லோருக்கும் முதலாக ஒரு தந்தை இருப்பானே அவனில் இருந்து  தொடங்கி இன்று வரை அவனுக்காக நாங்கள் பக்தி செய்கிறோம் " என்கிறார். 

பெரியாழ்வார் என்ன சொல்கிறார் என்றால்...உங்கள் முன்னோர்கள் செய்த  புண்ணியம்  நீங்கள் இன்று அவன் மேல் பக்தி செய்யும் நிலை அடைந்து இருக்கிறீர்கள். அந்தத் தொடர்பை துண்டித்து விடாதீர்கள். அந்த பாரம்பரியத்தை  தொடர்ந்து கொண்டு செல்லுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் சொல்லித் தாருங்கள். 

அவர்களுக்கு பிரபந்தத்தையும், கீதையையும், இராமாயணத்தையும் சொல்லித் தாருங்கள். 

அது உங்கள் கடமை. உங்கள் முன்னோர்கள் , உங்கள் வரை இதை கொண்டு வந்து சேர்த்து  விட்டார்கள். இதை மேலே கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு  இருக்கிறது. 

பாடல் 

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே

பொருள் 

எந்தை = என் தந்தை

தந்தை தந்தை = தந்தையின் தந்தை

தம் மூத்தப்பன் = இவர்களின் மூத்த தந்தை

ஏழ்படி கால்தொடங்கி = எழேழு தலை முறையாக

வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் = வழி வழியாக அவனுக்கு ஆட்பட்டு தொண்டு செய்கிறோம்

திரு வோணத் திருவிழவில் = திருவோணத் திருவிழாவில்

அந்தியம் போதில் = அந்தி நேரத்தில்

அரியுரு வாகி = சிம்ம உருவாகி

அரியை யழித்தவனை = அரக்கனை (இரணியனை) அழித்தவனை

பந்தனை தீரப் = அனுக்கம் , உடல் அசதி தீர 

பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே = பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என்று  பாடுவோமே


Friday, January 22, 2016

பிரபந்தம் - பண்டைக் குலத்தை தவிர்த்து

பிரபந்தம் - பண்டைக் குலத்தை தவிர்த்து 


அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே

இறந்த காலம் , கழிந்த காலங்கள் மனிதனின் தோள் மேல் பெரிய பாரமாக எப்போதும் அழுத்திக் கொண்டே இருக்கிறது.

செய்த தவறுகள், செய்யாமல் விட்ட நல்லவைகள், சொன்ன பொய்கள், தெரிந்த செய்த துரோகங்கள், சுயநலத்துக்காக செய்த செயல்கள், அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் மனிதனை துரத்திக் கொண்டே இருக்கின்றன.

இது ஒரு புறம்.

இன்னொரு புறம், பிறந்த வீடு, ஜாதி, நாடு, மதம், பெற்றார், உற்றார் , குலம் , கோத்திரம் என்று ஆயிரம் விஷயங்கள் மனிதனை அழுத்திக் கொண்டிருக்கின்றன. என்னால் அதைச் செய்ய முடியவில்லை காரணம்  என் குடும்பச்  சூழ்நிலை. முன்னேறியவர்கள் பட்டியலில் இருந்ததால் எனக்கு எனக்கு இடம் கிடைக்கவில்லை, தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் என் எண்ணமும் செயலும் இப்படி இருக்கிறது என்று பிறந்து வளர்ந்த சூழ்நிலை நம்மை பாதிக்கிறது.

இது இன்னொரு புறம்.

மூன்றாவது என்னவென்றால், பிறந்தது முதலே நம் பெற்றோரும், சமுதாயமும்,  பள்ளிக் கூடமும் சில விஷயங்களை நம் தலையில் ஏற்றி விடுகின்றன. இறைவன் என்றால் யார், இதில் உயர்ந்த இறைவன் யார், தாழ்ந்த இறைவன் யார், சமயப் பெரியார்கள், நல்லது, கெட்டது , அறம் , மறம் , பாவம் , புண்ணியம் என்று வண்டி வண்டியாக மண்டையில் திணித்து விடுகிறார்கள். சிறு வயதில் மூளைச் சலவை செய்யப் பட்டதால் நாம் அவற்றை உண்மை என்றே நம்புகிறோம். அவற்றைத் தாண்டி நம்மால் வர முடிவதில்லை.  அதைத் தவிர மற்றவை எல்லாம் பொய் என்றே நினைக்கத் தலைப் படுகிறோம்.

உண்மையை அறிய வேண்டும் என்றால், பழையன எல்லாவற்றையும் கட்டி தூக்கி எறிந்து விட வேண்டும்.

இன்று புதிதாய் பிறந்தோம் என்று பாரதி சொன்ன மாதிரி, பழையன எல்லாவற்றையும் தூக்கி மூட்டை கட்டி வைத்து விட்டு, குழந்தையின் மனதோடு  உண்மையைத் தேட வேண்டும். 

"பண்டைக் குலத்தைத் தவிர்ந்து"

நீங்கள் யாராக இருந்தாலும் கவலை இல்லை. உங்கள் பழையனவற்றை விட்டு விட்டு வாருங்கள். இறைவன் முன் எல்லோரும் சமம். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை பணக்காரன், படித்தவன், முட்டாள் என்ற பேதமும் கிடையாது.


மனிதனுக்கு பணமும் செல்வமும் வந்தால் புத்தி மாறிப் போய் விடுகிறது. எவ்வளவோ கஷ்டப் பட்டு தவம் செய்கிறான். நிறைய வரங்களைப் பெறுகிறான். அவற்றின் மூலம் செல்வமும் பதவியும் கிடைக்கிறது. சந்தோஷமாக இருக்க   வேண்டியது தானே ? பணமும் செல்வாக்கும் வந்த உடன், மற்றவர்களை இம்சிக்கத் தொடங்குகிறான். பேராசை மேலும் மேலும் வேண்டும் என்கிறது. இறைவனை யார் என்று கேட்க்கும் அகங்காரம் வருகிறது. இறைவனை நிந்திக்கிறான். அவன் அடியார்களை நிந்திக்கத் தலைப் படுகிறான். அழிகிறான்.

"அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த"


அகில உலகங்களுக்கும் அதிபதியான அசுரரை, இராக்கதரை, கொலை தொழில் செய்வோரை எடுத்து களைந்த.

அதிகாரமும், செல்வமும் அகங்காரத்தை கொடுக்கும். அகங்காரம் அறிவை மயக்கும். எனவே, பணமும், அதிகாரமும் வரும்போது கவனமாக இருக்க வேண்டும்.

எடுத்துக் களைந்தவன் யார் ?

இருடி கேசன். 

அது என்ன இருடிகேசன் ?

ரிஷி+ கேசன். ரிஷி என்பது தமிழில் இருடி என்று வந்தது. ரிஷிகளுக்கு எல்லாம் தலைவன். ரிஷிகள், முனிவர்கள் அனைத்தையும் துறந்தவர்கள். அவர்களின் தலைவன்.

எனக்கு, உங்களுக்கு எல்லாம் ஒரு பெயர் இருக்கிறது. அந்தப் பெயரை இட்டு அழைத்தால் திரும்பிப் பார்ப்போம். இறைவனுக்கு என்ன பெயர் ? அவனுக்கு ஒரு பெயரும் இல்லை. அவனுக்கு ஒரு பெயரும் இல்லாவிட்டாலும், அவனை எப்படித் தான் அழைப்பது ? ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த பெயரில்  அழைக்கிறார்கள்.

"வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி:

வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி.

ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்

திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ! என்பார் மணிவாசகர்.

இப்போது முழு பாசுரத்தையும் பார்ப்போம்.


பாடல்

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே


சீர் பிரித்த பின் 

அண்டக் குலத்துக்கு அதி பதியாகி அசுரர் இராக்கதரை 
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த  இருடீ கேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என் மினோ 

பொருள்

அண்டக் குலத்துக்கு = அண்டங்களுக்கு எல்லாம்

அதி பதியாகி =அதிபதியாகி

அசுரர் = அசுரர்களை

இராக்கதரை  = இராகதர்களை

இண்டைக் குலத்தை = கொலைத் தொழிலில் ஈடு படுபவர்களை

எடுத்துக் களைந்த = களைந்து எடுத்த

இருடீ கேசன் தனக்கு = ரிஷிகளின் தலைவனுக்கு

தொண்டக் குலத்திலுள்ளீர் = தொண்டர்கள் குலத்தில் உள்ளவர்களே

வந்து = வந்து

அடி தொழுது = அடி தொழுது

ஆயிர நாமம்சொல்லி = ஆயிரம் நாமம் சொல்லி

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து = உங்கள் பழைய குலத்தினை மறந்து

பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என் மினோ = பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என்று கூறுங்கள்







Thursday, January 21, 2016

பிரபந்தம் - வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ

பிரபந்தம் - வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ


ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே



இறைவன் யார் ? அவன் எப்படி இருப்பான் ? எங்கே இருப்பான் ?

பார்த்து விட்டு வந்த யாராவது நம்மிடம் சொல்லி இருக்கிறார்களா ? நாம் நேரடியாக கேட்டு இருக்கிறோமா?

இல்லை.

இருந்தாலும், பெருமாள் இப்படி இருப்பார், இவ்வளவு உயரம், இன்ன நிறம், இத்தனை கை, இந்த மாதிரி பொருள் எல்லாம் கையில் வைத்து இருப்பார், இந்த மாதிரி உடை உடுத்து இருப்பார் என்று நாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம்.

இது சரியா ?

இறைவனை அறிந்து கொள்ள வேண்டும் என்றால், அவனை தேட வேண்டும். தேட வேண்டும் என்றால், அவனைப் பற்றி தெரியாது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவனை பற்றி எல்லாம் தெரியும் என்றால் பின் எதற்கு தேடுவது ?

நம்முடைய மனதில் உள்ள எண்ணங்களை, கற்பனைகளை, பிறர் சொன்ன செய்திகளை எல்லாம் உதறி விட்டு, சொந்தமாக தேடத் தொடங்குங்கள். இறை என்பது ஒரு அனுபவம். ஒவ்வொருவரும் தனித் தனியே அனுபவிக்க வேண்டிய ஒன்று. என் அனுபவம் உங்களுக்குப் புரியாது. உங்கள் அனுபவம் எனக்குத் தெரியாது.

இறைவன் ஒரு வரையறைக்குள் உட்பட்டவன் அல்ல. நம் சிற்றறிவால் அவனை அறிந்து கொள்ள முடியாது.

"சித்தமும் செல்லா சேச்சியன் காண்க" என்பார் மணிவாசகர்.

நம் சித்தத்துக்குள் அகப்படாது.

அப்படி என்றால் இறைவனை நாம் அறிந்து கொள்ளவே முடியாதா ? தெரிந்து கொள்ளவே முடியாதா என்றால் முடியும்.

அறிவுக்கு அப்பாற்பட்டு நிற்கும் அவன், நமக்காக இரங்கி இறங்கி வருவான். அவதாரம் என்றால் இறங்கி வருதல் என்று பொருள். அவன் இறங்கி வரும் போது நாம் அவனை அறிய முடியும்.

பெரியாழ்வார் அழைக்கிறார்


"வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ"

வரம்பு ஒழிந்து வந்து ஒல்லை கூடுமினோ.

வரம்பு என்றால் எல்லைக் கோடு . இது தான் என்று இறைவனை ஒரு கட்டத்துக்குள் அடைக்காதீர்கள். அவன் எல்லை அற்றவன். நீங்கள் அந்த எல்லைகளை கடந்து சீக்கிரமாக வாருங்கள்.

அது என்ன ஒல்லை ? ஒல்லை என்றால் சீக்கிரம் என்று அர்த்தம்.

இராமாயணத்தில், இராமன் மிதிலை நோக்கி வருகிறான். அப்போது மிதிலை நகரின் கோட்டையின் மேல் இருந்த கொடிகள் எல்லாம், "மிதிலை நகரமாகிய நான் செய்த மா தவத்தினால், தாமரை மலரில் இருக்கும் திருமகள் இங்கு வந்து இருக்கிறாள். அவளை கரம் பிடிக்க நீ சீக்கிரம் வா " என்று அழைப்பது போல அந்த கொடிகள் அசைந்தன என்பார் கம்பர்.

மை அறு மலரின் நீங்கி.
   யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்’ என்று.
   செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
   கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை. ‘ஒல்லை வா’ என்று
   அழைப்பது போன்றது அம்மா!


பெரியாழ்வாரும் சீக்கிரம் வாருங்கள் என்று அழைக்கிறார்.

ஏன் ? என்ன அவசரம் ?

மனிதனின் வாழ்நாள் மிகச் சிறியது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், கடவுளை பற்றி சிந்திக்க எல்லாம் எங்க நேரம் இருக்கு ? இருக்கிற வேலைய பாக்கவே நேரம் இல்லை என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள். சீக்கிரமாக   எங்கள் குழுவில் வந்து சேருங்கள் என்று அழைக்கிறார்.
பிள்ளையை பள்ளியில் சேர்க்க வேண்டும், பின் அதுக்கு கல்லூரியில் இடம் பார்க்க வேண்டும், பின் வேலை, பின் கல்யாணம், ஒரு பேரப் பிள்ளையை பார்க்க வேண்டும், அதற்குள் பெற்றோர்களுக்கு வயதாகி விடும், அவர்களை பார்க்க வேண்டும்...இப்படி தள்ளிக் கொண்டே போனால் நமக்கும் வயதாகி விடும்.

எனவே தள்ளிப் போடாமல் சீக்கிரம் வாருங்கள் என்று அழைப்பு  விடுகிறார்.

"ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்"

எல்லோருக்கும் ஒரு குறிப்பேடு இருக்கிறது. பிறக்கின்ற  தினம்,இறக்கின்ற தினம் என்று குறித்து வைத்திருக்கிறது  அதில்.அது நிலத்தில் விழு முன் வாருங்கள்.

ஒன்றாகச் சேர்ந்தாலும், நமக்கு என்ன என்ன இலாபம் என்று பார்க்காமல் எல்லோருக்கும் நன்மை கிட்ட வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

"கூடும் மனம் உடையீர்கள் "  என்கிறார்.

அவனுக்கு முக்தி கிடைத்து விடுமோ, அவனுக்கு பெருமாள் அருள் செய்து விடுவாரோ, நானும் தான் தினமும் பெருமாளை சேவிக்கிறேன், எனக்கு ஒண்ணும் இல்லை, அவனுக்கு மட்டும் பெருமாள் எல்லா சௌபாக்கியத்தையும் அள்ளி அள்ளி தருகிறார் என்று பொறாமை படக் கூடாது. எல்லோரும் ஒன்றாக இருக்கும் போது உள்ளம் குளிர வேண்டும்.

"கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்." என்று ஆண்டாள் கூறியபடி. மனத்தில் சூடு இருக்கக் கூடாது. குளிர்ந்து இருக்க வேண்டும்.


கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்த பின் என்ன செய்ய வேண்டும் ?

நாடும் நகரமும் நன்கு அறிய "நமோ நாராயாணா" என்று கூறி அவனை பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் என்கிறார்.

 பாடல்;

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே


பொருள்

ஏடு = இந்த உடல்

நிலத்தில் = நிலத்தில்

இடுவதன் முன்னம் = விழுவதற்கு முன்னால்

வந்து = இங்கே வந்து

எங்கள் குழாம்புகுந்து = எங்கள் குழுவில் சேர்ந்து

கூடு மனமுடை யீர்கள் = கூட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களே

வரம்பொழி வந்து = உங்கள் வாழ்க்கையில் எது எது எல்லைகள் என்று நீங்கள் வகுத்து வைத்து இருந்தீர்களோ அவற்றை எல்லாம் தாண்டி

ஒல்லைக் கூடுமினோ = சீக்கிரமாக வந்து கூடுங்கள்

நாடும் நகரமும் = நாடும் நகரமும்

நன்கறி ய = நன்றாக அறியும் படி

நமோ நாராய ணாயவென்று = நமோ நாராயாணா என்று

பாடு = பாடும்

மனமுடைப் பத்தருள் ளீர் = பாடும் பக்தர்களுக்கு நடுவே

வந்து = வந்து

பல்லாண்டு கூறுமினே = பல்லாண்டு கூறுங்கள்


Tuesday, January 19, 2016

பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின் - பாகம் 2

பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின் - பாகம் 2


பாடல்

வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே


பொருள்

வாழ்வதற்காக என்று இருப்பவர்களே, வந்து மண்ணும், மணமும் பெற்றுக் கொள்ளுங்கள். கூழுக்காக அலைந்து கொண்டிருப்பவர்களை எங்கள் கோஷ்டியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். ஏழேழு பிறவியாக ஒரு பழி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். அரக்கர்கள் வாழும் இலங்கை மேல் படை எடுத்துச் சென்று அதை பாழாக்கியவனுக்கு பல்லாண்டு கூறுவோம்.

இது அடுத்த பாசுரம்.

வாழாட் பட்டு = வாழ்வதற்காக ஆட்பட்டு

நின் றீருள்ளீ ரேல் = நின்று உள்ளீரேல்

வந்து = இங்கு வந்து

மண்ணும் மணமும்கொண்மின் = மண்ணும் மணமும் பெற்றுக் கொள்ளுங்கள்

கூழாட் பட்டு = கூழுக்கு ஆட்பட்டு

நின் றீர்களை = நிற்பவர்களை

எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் = எங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்

ஏழாட் காலும் = ஏழு பிறப்பிலும்

பழிப்பிலோம் நாங்கள் = பழி இல்லாமல் வாழ்பவர்கள் நாங்கள்

இராக்கதர் வாழ் இலங்கை = அரக்கர்கள் வாழும் இலங்கை

பாழா ளாகப் = பாழ் படும்படி

படைபொரு தானுக்குப் =      படை  எடுத்தவனுக்கு

பல்லாண்டு கூறுதமே = பல்லாண்டு கூறுவோம்

சரி, இந்த பாட்டில் அப்படி என்ன விசேஷம் ?

பெரியாழ்வாரின் பாடல்கள், அள்ள அள்ள குறையாத பொக்கிஷங்கள்.

வாருங்கள், சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

தாய் நமக்கு தந்தையை காட்டித் தருகிறாள். அவள் சொல்லித்தான் தந்தை யார் என்று நமக்குத் தெரிகிறது.

தந்தை, நம்மை ஆசாரியனிடம் கொண்டு சேர்க்கிறார். தந்தை சொல்லித்தான் ஆசாரியனை நமக்குத் தெரியும்.

அந்த ஆசாரியன் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பான். அவன் சொல்லித்தான் இறைவன் யார் என்று நமக்குத் தெரியும்.

பெரியாழ்வார் இறைவனை கண்டு கொண்டார். அவனுக்கும், திருமகளுக்கும், சங்கு சக்ரத்துக்கும் பல்லாண்டு பாடினார்.

அடுத்து என்ன செய்வது ?

தான் மட்டும் அறிந்தால் போதாது, இறைவனைத் தேடி அலையும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

தான் மட்டும் இறைவனை அடைந்தால் போதாது, அந்த பேரின்பத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்று அவரது தாயுள்ளம் விரும்புகிறது.


வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் பக்தர்களை நான்காகப் பிரிக்கிறார்கள்.

முதலாவது, உலகில் உள்ள பொருள் செல்வத்தைப் பெறுவதற்காக பக்தி பண்ணுபவர்கள். அவர்கள் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இரண்டாவது, ஆத்மாவை அறிய விரும்புபவர்கள். ஆத்ம அனுபவத்தை தேடுபவர்கள். அதற்காக இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள்.

மூன்றாவது, மோட்சம், வைகுண்டம் வேண்டி இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள். அவர்களுக்கு பணம் வேண்டாம், செல்வம் வேண்டாம், ஆத்ம அனுபவம் வேண்டாம்...முக்தி ஒன்றையே விரும்பி இறைவனிடம் பக்தி செலுத்துவார்கள்.

நான்காவது, இறைவனையே வேண்டும் என்று, அவனை அடைய வேண்டும் என்று பக்தி செலுத்துபவர்கள்.

(மேலும் சிந்திப்போம்)

அடியவர்களை ஆண்டவனிடம் சேர்பிப்பது ஆசாரியனின் கடமை. 

ஒவ்வொருவராக அழைக்கிறார் பெரியாழ்வார்.

முதலில், யார் வர வேண்டாம் என்று நிர்ணயம் பண்ணிக் கொள்கிறார். 

பணத்துக்காக  இறைவனை வேண்டுபவர்களை முதலிலேயே தள்ளி வைத்து விடுகிறார். உலக இன்பத்துக்காக அலைபவர்கள் ஒரு போதும் இறைவனை அடைய முடியாது  என்பதை குறிப்பால் உணர்த்த ...

"கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்"

கூழுக்காக அலைபவர்களை (கூழுக்கு ஆட் பட்டு ) எங்கள் குழுவில் புக விடமாட்டோம்   என்கிறார்.  இறைவனின் அடியவர்களின் கூட்டத்தில் சேர வேண்டும் என்றால்  முதல் தகுதி செல்வத்தின் மேல் உள்ள ஆசையை விட வேண்டும். 

அடுத்து மீதி உள்ள மூன்று  விதமான பக்தர்களில் யாரை அழைப்பது ?

எப்போதும் சிறந்தவர்களை முதலில் அழைக்க வேண்டும் என்ற மரபுப் படி , இறைவனையே  அடைய வேண்டும் என்று விரும்பும் பக்தர்களை முதலில் அழைக்கிறார். 

"வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்"

வாழ்வதற்காக ஆட்பட்டு நின்று உள்ளீரேல் (இருப்பீர்கள் ஆனால்) வந்து மண்ணும் மணமும் கொண்மின் என்கிறார். 

மண்ணும் மணமும் கொள்ளுங்கள் என்றால் - திருமண்ணும், துளசியும் கொள்ளுங்கள் என்று பொருள் சொல்கிறார்கள். 

இறைவனை அடைய விரும்பும் பக்தர்களுக்கு இன்னொரு தகுதி சொல்கிறார். 


ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள்

நாம் இந்த பிறவி மட்டும் பழி செயலில் ஈடு படாமல் இருந்தால் போதாது ....ஏழேழ் பிறவியும் பழி இல்லாமல் இருக்க வேண்டும். இப்போது யாராவது அவன்  அடியவர்களாக இருக்கிறார்கள் என்றால் அது இந்தப் பிறவியில் மட்டும்   நல்லவர்களாக இருந்ததால் வந்த நிலை அல்ல. முன்பு பல பிறவிகளில்  பழி இல்லாமல் வாழ்ந்ததால் இப்போது அவன் பக்தனாக ஆகும் வாய்ப்பு கிடைத்து  இருக்கிறது. 

அப்படி செல்வத்தில் நாட்டம் இல்லாமல்,  ஏழேழ் பிறவியில் பழி இல்லாமல்  வாழ்ந்து, அவனையே அடையும் உள்ளம் கொண்டவர்களே வாருங்கள், அவனுக்கு  பல்லாண்டு கூறுவோம் என்கிறார். 


தேவாரம் - தோடுடைய செவியன்

தேவாரம் - தோடுடைய செவியன்




தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


எல்லோருக்கும் தெரிந்த தேவாரம் தான்.

ஞான சம்பந்தருக்கு  உமை பால் தந்தாள். குளத்தில் இருந்து குளித்து வெளியில் வந்த சம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்டு யார் பால் தந்தது என்று கேட்டார். குழந்தை வானத்தைக் காட்டி

"தோட்டினை காதில் உள்ள அவன், எருதின் மேல் ஏறி , தூய்மையான வெண்ணிலவின் கீற்றை தலையில் சூடி, காட்டில் உள்ள உள்ள சாம்பலை உடலில் பூசி, என் உள்ளத்தை கவர்ந்த அவன் தந்தான்.  அவனை மலரால் நான் முன்பு அர்ச்சனை செய்தேன். எனக்கு அருள் புரிந்தான். சிறந்த பிரமாபுரம் என்ற ஊரில் இருக்கும் பெம்மான் இவன் "

.என்று பாடினார்.

பாடலும் பொருளும் எல்லோருக்கும் தெரிந்தது  தான்.

தெரியாத உட்பொருள் என்ன என்று பார்ப்போம்.

பாட்டை கொஞ்சம் உற்று பார்த்தால் ஏதோ சம்பந்த சம்பந்தமில்லாத வாரத்தை கோர்வைகள் போலத் தோன்றும்.

தோடுடைய செவியன்
விடை ஏரியவன்
மதி சூடியவன்
சாம்பலை பூசினவன்
உள்ளத்தை கவர்ந்தவன்
அருள் செய்தவன்
பிரம புரத்தில் இருப்பவன்

என்ன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் ஒரே வார்த்தை அடுக்காக இருக்கிறதே  என்று நினைப்போம்.

இறைவன் ஐந்து தொழில்களை செய்கிறான் என்கிறது சைவ சித்தாந்தம். அவையாவன

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்

 அது அப்படி இருக்கட்டும் ஒரு பக்கம்.

இந்த உலகம் எல்லாம் ஊழிக் காலத்தில் அழிந்து போகும். எது அழிந்தாலும் அறம் அழியாது. தர்மம் என்றும் நிலைத்து நிற்கும். உலகமே அழிந்தாலும் தர்மம் அழியாது.

உலகமே ஊழித் தீயால் அழிந்த போது தர்மத்தை எருதாகச் செய்து தனக்கு வாகனமாக்கிக் கொண்டார் சிவன். எருதின் இன்னொரு பெயர் விடை.

உலகில் உள்ள அத்தனை சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தர்மம் தான் விடை.

அப்படி உலகம் அழிந்த போது தர்மத்தை விடையாக (எருதாக) செய்ததால், அது படைப்புத் தொழில். "விடை ஏறி"

சந்திரன், தன் மாமனாரின் சாபத்தால் நாள் ஒரு கலையாக அழிந்து தேய்ந்து வந்தான். தன்னை காக்கும் படி வேண்டிய சந்திரனை , காப்பாற்றி தன் தலையில் சூடிக் கொண்டார். ஆதலால் அது காத்தல் தொழில். "தூவெண் மதி சூடி"

உலகம் ஊழித் தீயால் அழியும். மிஞ்சுவது சாம்பல் மட்டுமே. அந்த சாம்பலை மேலே பூசிக் கொண்டிருப்பவன் என்பதால் அது அழித்தல் தொழில். "காடுடைய சுடலை பொடி பூசி "

இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறான். இருந்தும் உயிர்களால் அவனை அறிய முடிவதில்லை. மாயை மறைக்கிறது. மனதுக்குள் மறைந்து நிற்பதால் அது மறைத்தல் தொழில். "என் உள்ளம் கவர் கள்வன்". கள்வன் மறைந்து தானே இருப்பான்.

வேண்டும் அடியவர்களுக்கு அவன் அருள் செய்வதால் அது அருள்தல் தொழில்.  "ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த"

இப்படி ஐந்து தொழில்களையும் இறைவன் செய்கின்றான் என்று குறிப்பாக உணர்த்தும் பாடல்.

மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாட்டின் ஆழம்  விளங்கும்.

தேவாரத்தின் ஒரு பாடலுக்கு இவ்வளவு பொருள்.

எவ்வளவு படிக்க இருக்கிறது.


Monday, January 18, 2016

இராமாயணம் - இராமனின் பிரிவு

இராமாயணம் - இராமனின் பிரிவு 


சீதையை பிரிந்த இராமனின் நிலையைப் பார்த்தோம். இராமன் சீதையின் அழகை, அவளின் அருகாமையை இழந்ததை நினைத்து வாடுகிறான். குறிப்பாக காமம் அவனை வாட்டுகிறது. மன்மத கணைகளுக்கு வருந்துகிறான்.

அதே சமயம், இலங்கையில் சீதை என்ன நினைக்கிறாள் ?

"யார் இராமனுக்கு உணவு தருவார்கள் ? அவருக்கு தானே போட்டு சாப்பிடத் தெரியாதே. யார் அவருக்கு உணவு பரிமாறுவார்கள் ? வீட்டுக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால் எப்படி அவர் சமாளிப்பார் ?  என் துன்பத்திற்கு ஒரு மருந்தும் இல்லையே" என்று வருந்துகிறாள்.

இராமனோடு தான் இன்புற்று இருக்க முடியவில்லையே என்று அவள் வருந்தவில்லை. அவன் எப்படி சாபிட்டானோ, வீட்டுக்கு யாராவது வந்தால் எப்படி அவர்களை உபசரிப்பானோ என்று வருந்துகிறாள்.

பாடல்

'அருந்தும் மெல் அடகு ஆர் இட
    அருந்தும்? ‘என்று அழுங்கும்;
‘விருந்து கண்டபோது என் உறுமோ? ‘
    என்று விம்மும்;
‘மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட
    நோய்க்கு? ‘என்று மயங்கும்;
இருந்த மா நிலம் செல் அரித்து
    எழவும் ஆண்டு எழாதாள்.

பொருள் 

‘அருந்தும் = உண்ணும்

மெல் அடகு =  இலை கறி உணவு

ஆர் இட = யார் பரிமாற

அருந்தும்? ‘ = சாப்பிடுவான் ?

என்று அழுங்கும்; = என்று வருந்துவாள்

‘விருந்து கண்டபோது என் உறுமோ?  = விருந்து வந்தால் என்ன செய்வானோ

என்று விம்மும்; = என்று நினைத்து விம்முவாள்

‘மருந்தும் உண்டுகொல் = மருந்து கூட இருக்கிறதா

யான்கொண்ட நோய்க்கு? = என் துன்பத்திற்கு

‘என்று மயங்கும்; = என்று மயங்குவாள்

இருந்த = அவள் அமர்ந்து இருந்த

மா நிலம்  =நிலம்

செல் அரித்து எழவும் = கரையான் புற்று எழுப்பி அரித்த போதும்

ஆண்டு எழாதாள். = இருந்த இடத்தை விட்டு எழாமல் அமர்ந்து இருந்தாள்

இதில் நாம் பார்க்க வேண்டியது இரண்டு விஷயங்கள்.

ஒன்று சீதையின் துயரம். அது தெளிவாகத் தெரிகிறது. கணவன் எப்படி சாப்பிடுவன், எப்படி விருந்தை உபசரிப்பான் என்று வருந்தியது தெளிவாகத் தெரிகிறது.

இரண்டாவது, பாடலின் உள்ளே கம்பன் காட்டும் இல்லறம். இல்லத்தின் அறம்.

ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ? 

ஏன் திருமணம் செய்து கொண்டாய் என்று திருமணம் செய்து கொண்ட யாரையாவது கேட்டால்   என்ன சொல்லுவார்கள் 

"கணவன் அல்லது மனைவியோடு சேர்ந்து இன்பம் அனுபவிக்க, வாரிசுகளை பெற்றுக் கொள்ள " என்று சொல்லுவார்கள். 

அதற்கா திருமணம். இன்பம் அனுபவிப்பதும், சந்ததிகளை பெற்றுக் கொள்வதும்  விலங்குகள் கூட செய்கின்றன. 

இல்லத்தின் அறம் பற்றி திருவள்ளுவன் சொன்னதை கம்பன் இங்கே சொல்கிறான்.

அது என்ன அறம் ?

மேலும் சிந்திப்போம். 


Sunday, January 17, 2016

பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின்

பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின்


பாடல்

வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே


பொருள்

வாழ்வதற்காக என்று இருப்பவர்களே, வந்து மண்ணும், மணமும் பெற்றுக் கொள்ளுங்கள். கூழுக்காக அலைந்து கொண்டிருப்பவர்களை எங்கள் கோஷ்டியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். ஏழேழு பிறவியாக ஒரு பழி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். அரக்கர்கள் வாழும் இலங்கை மேல் படை எடுத்துச் சென்று அதை பாழாக்கியவனுக்கு பல்லாண்டு கூறுவோம்.

இது அடுத்த பாசுரம்.

வாழாட் பட்டு = வாழ்வதற்காக ஆட்பட்டு

நின் றீருள்ளீ ரேல் = நின்று உள்ளீரேல்

வந்து = இங்கு வந்து

மண்ணும் மணமும்கொண்மின் = மண்ணும் மணமும் பெற்றுக் கொள்ளுங்கள்

கூழாட் பட்டு = கூழுக்கு ஆட்பட்டு

நின் றீர்களை = நிற்பவர்களை

எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் = எங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்

ஏழாட் காலும் = ஏழு பிறப்பிலும்

பழிப்பிலோம் நாங்கள் = பழி இல்லாமல் வாழ்பவர்கள் நாங்கள்

இராக்கதர் வாழ் இலங்கை = அரக்கர்கள் வாழும் இலங்கை

பாழா ளாகப் = பாழ் படும்படி

படைபொரு தானுக்குப் =      படை  எடுத்தவனுக்கு

பல்லாண்டு கூறுதமே = பல்லாண்டு கூறுவோம்

சரி, இந்த பாட்டில் அப்படி என்ன விசேஷம் ?

பெரியாழ்வாரின் பாடல்கள், அள்ள அள்ள குறையாத பொக்கிஷங்கள்.

வாருங்கள், சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

தாய் நமக்கு தந்தையை காட்டித் தருகிறாள். அவள் சொல்லித்தான் தந்தை யார் என்று நமக்குத் தெரிகிறது.

தந்தை, நம்மை ஆசாரியனிடம் கொண்டு சேர்க்கிறார். தந்தை சொல்லித்தான் ஆசாரியனை நமக்குத் தெரியும்.

அந்த ஆசாரியன் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பான். அவன் சொல்லித்தான் இறைவன் யார் என்று நமக்குத் தெரியும்.

பெரியாழ்வார் இறைவனை கண்டு கொண்டார். அவனுக்கும், திருமகளுக்கும், சங்கு சக்ரத்துக்கும் பல்லாண்டு பாடினார்.

அடுத்து என்ன செய்வது ?

தான் மட்டும் அறிந்தால் போதாது, இறைவனைத் தேடி அலையும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

தான் மட்டும் இறைவனை அடைந்தால் போதாது, அந்த பேரின்பத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்று அவரது தாயுள்ளம் விரும்புகிறது.


வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் பக்தர்களை நான்காகப் பிரிக்கிறார்கள்.

முதலாவது, உலகில் உள்ள பொருள் செல்வத்தைப் பெறுவதற்காக பக்தி பண்ணுபவர்கள். அவர்கள் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இரண்டாவது, ஆத்மாவை அறிய விரும்புபவர்கள். ஆத்ம அனுபவத்தை தேடுபவர்கள். அதற்காக இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள்.

மூன்றாவது, மோட்சம், வைகுண்டம் வேண்டி இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள். அவர்களுக்கு பணம் வேண்டாம், செல்வம் வேண்டாம், ஆத்ம அனுபவம் வேண்டாம்...முக்தி ஒன்றையே விரும்பி இறைவனிடம் பக்தி செலுத்துவார்கள்.

நான்காவது, இறைவனையே வேண்டும் என்று, அவனை அடைய வேண்டும் என்று பக்தி செலுத்துபவர்கள்.

(மேலும் சிந்திப்போம்)

இராமாயணம் - சீதையின் பிரிவு

இராமாயணம் - சீதையின் பிரிவு


கணவன் மனைவி பிரிவு எல்லோர் வாழ்விலும் நிகழ்வது தான். வேலை நிமித்தமாக கணவன் வெளியூர் போக வேண்டியது வரலாம், பிரசவத்துக்காக மனைவி அம்மா வீட்டுக்கு போக வேண்டி வரலாம், இப்படி ஏதோ ஒரு காரணத்தால் கணவன் மனைவி பிரிவு நிகழத்தான் செய்கிறது.

கணவனும் மனைவியும் ஏதோ காரணத்தால் பிரிந்தாலும், அவர்களுக்குள் உள்ள அன்பு பிரிந்து விடுவது இல்லை.

அவர்கள் பிரிந்து இருக்கும் போது , கணவன் , மனைவியைப் பற்றி என்ன நினைப்பான் ? மனைவி கணவனைப் பற்றி என்ன நினைப்பாள் ?

கணவனுக்கு, பொதுவாக, மனைவியின் அருக்காமை இழப்பு தான் பெரிதாகப் படுகிறது. அவளிடம் பெற்ற இன்பம் தான் பெரிய இழப்பாக படுகிறது. அவளின் உடல், அவளின் காதல், அவளின் பரிவு, இனிய குரல், அவள் ஸ்பரிசம் , அவள் வாசம், ...அவற்றின் இழப்புதான் கணவனுக்கு முன்னே வந்து நிற்கிறது.

மனைவிக்கு என்ன தோன்றுகிறது ? அவர் எப்படி சாப்பிட்டாரோ ? நேரத்துக்கு தூங்கினாரோ இல்லையோ?  மருந்தெல்லாம் வேளா வேளைக்கு சாப்பிட்டாரோ இல்லையோ என்று அவன் உடல் நிலை பற்றி கவலையாக இருக்கும்.

இது இன்று நேற்று நிகழும் கதை இல்லை. தொன்று தொட்டு வருவது.

சீதையை பிரிந்து இருக்கிறான் இராமன்.

இராமன் என்ன நினைக்கிறான், சீதை என்ன நினைக்கிறாள் என்று  பார்ப்போம்.

முதலில் இராமன்,


பிரிவுத் துயர் இராமனை  வாட்டுகிறது.

தேரின் மேலே உள்ள  பகுதி போன்ற இடுப்பை கொண்ட சீதையின் முகத்தைக் காணாமல் வாடினான். யார் முகத்தைப் பார்த்து அவன் ஆறுதல் அடைவான் ? நல்ல உணர்வுகள் எல்லாம் அழிந்து போய் விட்டது. மன்மதனுக்கு பல மலர்கனைகளை அள்ளித் தரும் கார்காலத்தை கண்டான். ;ஆனால், கொடுமையான பிரிவு துயருக்கு ஒரு கரை கண்டான் இல்லை.

பாடல்


தேரைக் கொண்ட பேர்
      அல்குலாள் திருமுகம் காணான்,
ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்?
      நல் உணர்வு அழிந்தான்;
மாரற்கு எண் இல் பல்
      ஆயிரம் மலர்க் கணை வகுத்த
காரைக் கண்டனன்; வெந் துயர்க்கு
      ஒரு கரை காணான்.

பொருள்

தேரைக் கொண்ட = தேர் தட்டு போன்ற

பேர் = சிறந்த

அல்குலாள் = இடுப்பை உடைய (அல்குல் என்பதற்கு சரியான அர்த்தம் என்ன என்று தமிழ் அகராதியில் காண்க)

திருமுகம் காணான் = (சீதையின்) அழகிய முகத்தை காணாதவன்

ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்? = வேறு யாரைப் பார்த்து உயிருக்கு நேர்ந்த துன்பத்தை ஆற்றுவான்

நல் உணர்வு அழிந்தான் = உணர்ச்சி அற்றுப் போனான்

மாரற்கு = மன்மதனுக்கு

எண் இல் = எண்ணிக்கை இல்லாத

பல் = பல

ஆயிரம் = ஆயிரம்

மலர்க் கணை  = மலர்கணைகளை

வகுத்த = எடுத்துக் கொடுத்த

காரைக் கண்டனன்; = கார் காலத்தை (மழைக் காலத்தை) கண்டான் (இராமன்)

வெந் துயர்க்கு = கொடுமையான துயரத்திற்கு

ஒரு கரை காணான் = ஒரு கரை காண மாட்டான்

கார் காலத்தில் மலர்கள் மலவர்து இயல்பு. அது கம்பனுக்கு எப்படி தோன்றுகிறது தெரியுமா ...

மன்மதனிடம் அந்த கார் காலம் சொல்கிறதாம் "இந்தா இந்த பூவெல்லாம் எடுத்து  அந்த இராமன் மேல மலர் அம்புகளாக தொடு " என்று ஒவ்வொரு பூவாக  எடுத்துக் கொடுப்பது போல அந்த மலர்கள் ஒவ்வொன்றாக மலர்ந்ததாம்.

அப்படிப்பட்ட கார்காலத்தைப் பார்த்தான், துன்பத்தின் கரையை  பார்க்கவில்லை.

சீதையை பிரிந்த இராமனுக்கு அவள் அழகுதான் கண்ணுக்கு முன் நிற்கிறது.

இராமனுக்கே அப்படி என்றால்....



Wednesday, January 6, 2016

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியோ மோடும் நின்னோடும்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியோ மோடும் நின்னோடும்


அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே



எனக்கு அப்புறம் என் பிள்ளையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கவலை எல்லா தாய்மார்களுக்கும் உண்டு.

அவனுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு எனக்குத்தான் தெரியும். நான் இல்லாட்டி என் பிள்ளை என்ன செய்வான் என்று தவிக்காத தாய் இல்லை.

மகன் வெளியூருக்கு படிக்கப் போய் இருக்கலாம், வேலை நிமித்தமாய் வெளி நாட்டுக்கோ, வெளியூருக்கோ போய் இருக்கலாம்....

...அங்க என் மகன் என்ன துன்பப் படுகிறானோ, வேளாவேளைக்கு சாப்பிட்டானோ, குளித்தானோ, தூங்கினானோ என்று மறுகிக் கொண்டிருப்பாள் தாய்.

அது போல,

பெருமாளே, நீயோ எப்போதும் இருப்பவன். நானோ சாதாரண மானிடன். என் ஆயுள் அற்பம். எனக்கப்புறம் உன்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று தவித்த பெரியாழ்வார் தனக்கும் சேர்த்து பல்லாண்டு பாடிக் கொள்கிறார்.

"அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு"

அடியவர்களாகிய நாங்களும், ஆண்டவனாகிய நீயும் பல்லாயிரம் ஆண்டுகள் பிரியாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மங்களாசாசனம் செய்கிறார்.

தனக்கு ஆயுள் வேண்டும் என்று இல்லை. தான் இருந்தால் பெருமாளை ஒரு குறைவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாமே என்றே ஆதங்கத்தில் வேண்டுகிறார்.

நான் மட்டும் அல்ல, என்னைப் போன்ற அனைத்து அடியார்களும் உன்னோடு எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் .

அப்புறம் , ஆழ்வார் சிந்தித்தார். என்ன தான் இருந்தாலும் தான் ஒரு ஆண். மேலும் ஒரு மானிடன். தான் எத்தனை சேவை செய்தாலும் அது ஒரு மனைவி கணவனுக்குச் செய்யும் சேவை போல வருமா என்று நினைத்து நிமிர்ந்து பார்த்தார்.

பெருமாளின் வலது மார்பில் பெரிய நாச்சியாரின் உருவம் தெரிந்தது.

"ஹா...இவள் தான் சரி"

என்று நினைத்து அவளுக்கும் ஒரு பல்லாண்டு பாடினார்....

"வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு"


பெருமாளுக்குத் துணையாக திருமகள் இருக்கிறாள். அவர்களுக்கு ஒரு துன்பமும் வராமல் பார்த்துக் கொள்ள அடியவர்களான நாங்கள் இருக்கிறோம்.

இதையும் மீறி பெருமாளுக்கு ஏதாவது அல்லது யாராவது துன்பம் தருவார்களே ஆனால்,  அவர்களிடம் இருந்து பெருமாளை காக்க சங்கத்தாழ்வானும் சக்கரத்தாழ்வானும் இருக்கிறார்கள். அவர்களும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று  வாழ்த்துகிறார்.

படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

பெருமாள்,  பெருமாளோடு சேர்ந்து உறையும் திருமகள், அவரின் அடியவர்கள், அவனுக்குத் துணை செய்யும் சங்கும் சக்கரமும் என பெருமாளோடு தொடர்புள்ள எல்லோரையும் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்துகிறார். 









நான்மணிக்கடிகை - பெரிய அறன் ஒக்கும்

நான்மணிக்கடிகை -  பெரிய அறன் ஒக்கும் 



திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு. 

திரு ஒக்கும் , தீது இல் ஒழுக்கம் பற்றி முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

அடுத்து, "பெரிய அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்" என்றால் என்ன என்று பார்ப்போம்.

அற நெறியில் வாழ வேண்டும், அறத்தை பின் பற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்லப் படுகிறது.

அற நெறி என்றால் என்ன ? அது எந்தப் புத்தகத்தில் இருக்கிறது ?

நம் பெரியவர்கள் அறத்தை இரண்டாகப் பிரித்தார்கள்

- இல் அறம் = இல்லறம்
- துறவு + அறம் = துறவறம்

துறவறம் தூய்மையானது. பற்று அற்றது. ஆசைகளை துறந்தது. ஆனால் அது எல்லோராலும் முடியாது .

எல்லாவற்றையும் விட்டு விட்டுப் போவது என்றால் நடக்கிற காரியமா ?

இல்லறத்தில் இருந்து அதை ஒழுங்காக நடத்திக் கொண்டு சென்றால் அதுவே தூய்மையான துறவறத்துக்கு ஒப்பானது.

பெரிய அறம் = துறவறம். அது பெரியது. ஏன் என்றால் அதை செய்வது கடினம்.

பெரிய அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகுதல் ...

ஆற்றின் ஒழுகுதல் என்றால் சிறப்பான முறையில் இல்லறத்தை நடத்திக் கொண்டு செல்வது.

அது எப்படி ஆற்றின் ஒழுகுதல் என்றால் வழியே செல்லுவது என்றுதானே அர்த்தம் ? ஆறு என்றால் வழி என்று தானே பொருள் என்று நீங்கள் கேட்கலாம்.

வள்ளுவர் சொல்கிறார்...

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.

இதற்கு பொருள் சொன்ன பரிமேலழகர் ....

இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் = ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவானாயின்;

புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன் = அவன் அதற்குப் புறமாகிய நெறியிற் போய்ப்பெறும் பயன் யாது?

இல்லறத்தில் இருந்து, அதை அற வழியில் செலுத்துபவனுக்கு , துறவறத்தில் என்ன கிடைக்கப் போகிறது ? ஒன்றும் இல்லை.

அது என்ன அற வழியில் இல்லறம் ? ஒரு குடும்பத்தை எப்படி நல்ல வழியில் செலுத்துவது ?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல் வாழ்கை பண்பும் பயனும் அது

என்பார் வள்ளுவர்.

பழிக்கு அஞ்சி, பகுத்து உண்டல் இல் வாழ்வின் அறம் .

இல்லறத்தில் அன்பு இருக்க வேண்டும்.

இல்லறத்தில் அறம் இருக்க வேண்டும்.

இல்லறத்தில் வாழ்பவன் யார் யாரை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று பெரிய பட்டியல் தருகிறார் வள்ளுவர்.  அதை பின் ஒரு நாள் பார்ப்போம்.

இப்போதைக்கு பெரிய அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல்....




Tuesday, January 5, 2016

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு - பாகம் 2

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு - பாகம் 2 




பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

மனிதன், இறைவனிடம் பொதுவாகவே ஏதாவது கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான்.

படிப்பைக் கொடு, செல்வத்தைக் கொடு, உடல் ஆரோக்யத்தைக் கொடு, மன நிம்மதியைக் கொடு, என் பிள்ளைக்கு வேலை, நல்ல இடத்தில் திருமணம், சிக்கல்களில் இருந்து விடுதலை, என்று ஏதாவது ஒன்றைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

பற்றுகளை விட்டு விட்டேன் என்று சொல்லும் துறவிகளும், ஞானிகளும் கூட முக்தி கொடு, பரமபதம் கொடு என்று கேட்கிறார்கள்.

அதுவும் இல்லாவிட்டால் , இங்கேயே, உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கும்  வரம் தா என்று வேண்டுகிறார்கள்.

காலம் காலமாக மனிதன் ஆண்டவனிடம்  எதையோ கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான். அவனின் தேவைகள் தீர்ந்தபாடில்லை.


இறைவா உன் கருணை  வேண்டும்,உன் அன்பு வேண்டும், உன் தயை வேண்டும் என்று உருகிக் கொண்டிருக்கிறான் மனிதன்.

இறைவன் பெரிய ஆள் தான். அவனால் எல்லாம் முடியும். மிக மிக சக்தி வாய்ந்தவன் தான்.

எதைக் கேட்டாலும் தருவான்...

அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு தாய்  இருக்கிறாள். அவளுடைய பையன் படித்து பட்டம் பெற்று பெரிய ஆளாகி விட்டான். அவனுக்கு கீழே ஒரு பெரிய நிறுவனமே இயங்குகிறது. அவன் ஆணையை நிறைவேற்ற ஆயிரம் பேர் காத்து இருக்கிறார்கள்.

இருந்தாலும், அவன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது , அந்தத் தாய்  " பாத்து போப்பா, ஜாக்கிரதையா போப்பா " என்று சொல்லி அனுப்பவாள் .

ஏன் ?

மகனுக்கு அறிவில்லையா ? அவனுக்கு எப்படி போக வேண்டும்  என்று  தெரியாதா ?

 தெரியும்.அது அந்தத்  தாய்க்கும்    தெரியும்.  இருந்தும்,அவள் மனதில் ஊற்றெடுக்கும் காதலால், அந்த பிள்ளையின்  மேல் உள்ள வாஞ்சையால் அவள் அப்படி சொல்கிறாள். அவனுக்கு ஒரு துன்பமும் நேர்ந்து விடக் கூடாதே என்ற கவலையில் சொல்கிறாள்.

 பக்தி இலக்கியத்தில் முதன் முதலாக , இறைவனிடம் ஒன்றும் கேட்காமல், ஒரு நன்றி கூட சொல்லாமல், "இறைவா நீ நல்லா இரு ...பல்லாண்டு காலம் நீ சௌக்கியமாக வாழ வேண்டும்  " என்று பெரியாழ்வார்  வாழ்த்துகிறார்.

இறைவனுக்கு என்ன ஆபத்து வந்து விடப் போகிறது ? வந்தாலும் அவனுக்குத் தன்னை காத்துக் கொள்ளத் தெரியாதா ?

தெரியும். அது ஆழ்வாருக்கும் தெரியும்.

இருந்தும்  பெருமாள் மேல் அவ்வளவு காதல்.

நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

ஒரு தாய், தன் பிள்ளையை வாழ்த்துவதைப் போல வாழ்த்துகிறார்.


இவர் வாழ்த்துவதைப் பார்த்து பெருமாளுக்கு ஒரே  சிரிப்பு.

எனக்கு என்ன ஆபத்து வந்து விடும் என்று நீர் என்னை வாழ்த்துகிரீர். என்னுடைய தோள்களைப் பாரும். பெரிய பெரிய மல்லர்களை வீழ்த்திய தோள்கள் என்று தன் தோள்களைக் காட்டுகிறான் அவன்.

 அதைப் பார்த்ததும் , ஆழ்வாருக்கு இன்னும் பயம் வந்து விட்டது....

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு


என்ன பயம் ?

=============== பாகம் 2 ===============================================

பிள்ளை வந்து அம்மாவிடம், "அம்மா இன்னிக்கு பள்ளிக் கூடத்ல எனக்கும் என்  நண்பர்களுக்கும் சண்டை வந்திருச்சு...எல்லாரையும் அடிச்சு தள்ளிட்டேன் ...அவங்க எல்லாம் கீழே விழுந்து நல்லா அடிபட்டுகிட்டாங்க "...என்று  மகன் தன் வீர தீர பிரதாபங்களை சொன்னால் அம்மா என்ன நினைப்பாள் ...

"ஐயோ, இந்த பிள்ளை இப்படி எல்லார் கிட்டேயும் சண்டை போடுறானே...இன்னிக்கு  இவன் ஜெய்ச்சிட்டான் ...நாளைக்கு அவனுக எல்லாம்  ஒண்ணா சேர்ந்து இவனோட சண்டை போட்டா இவன் என்ன ஆவானோ " என்று பதறுவாள்.

"அப்படி எல்லாம் சண்டை போடக் கூடாதுடா " என்று சொல்லுவாள்.

அவனோ "...அம்மா நீ ஒரு சரியான பயந்தாங்கோளி ...என் கிட்ட யார் சண்டைக்கு  வர முடியும் " என்று சொல்லிக் கொண்டே அவன் வெளியே விளையாடப் போகிறான்.

அம்மாவுக்கு கவலை....

அவனுக்கு ஒண்ணும் ஆகி விடக் கூடாதே என்று.

கையைக் காலை வச்சிக்கிட்டு சும்மா இருக்கணுமே என்று கவலைப் படுவாள்.

அதே போல பெரியாழ்வார்...கவலைப் பட்டு பெருமாளை வாழ்த்துகிறார் ...

பெருமாள் சொல்கிறார்

"என் தோள் வலிமையைப் பார், மல்லர்களை சாய்த்து வெற்றி பெற்றவன் ...என் கிட்ட   யார் மோத முடியும் " என்று ஆழ்வாருக்கு ஆறுதல் சொல்கிறான்.

ஆழ்வாருக்கு அதுவே பெரிய கவலையாகப்  போய் விட்டது.

தான் தான் பெரிய சண்டியர் என்று மல்லுக்கு சண்டைக்குப் போய்  எங்காவது அடி கிடி   பட்டுவிடப் போகிறது என்று கவலைப் பட்டு...

உன் வலிமையான தோள்களுக்கும் பல்லாண்டு

உன்னைத் தாங்கி நிற்கும் உன் திருவடிகளுக்கும் பல்லாண்டு

என்று பெருமாளுக்கு ஒரு துன்பமும் வந்து விடக் கூடாது, அவர் பல்லாண்டு வாழ வேண்டும்   என்று வாழ்த்துகிறார்.

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு


அது என்ன திருவடிகளுக்கு காப்பு ? பெருமாளின் கண் முக்கியம் இல்லையா ? காது முக்கியம் இல்லையா ? மார்பு முக்கியம் இல்லையா ? எல்லாவற்றையும் விட்டு விட்டு எடுத்த எடுப்பில் சிவந்த அடிகளுக்கு ஏன் காப்புச் சொல்கிறார் ?


பொதுவாகவே, நமது தமிழ் இலக்கிய மரபில் இறைவனை வாழ்த்துவது என்றால் அடியில் தொடங்கி முடியில் முடிக்க வேண்டும்.

இறைவியை போற்றுவது என்றால் முடியில் தொடங்கி அடியில் முடிக்க வேண்டும்.

பாதாதி கேசம்
கேசாதி பாதம்

என்று சொல்லுவார்கள்.

உதாரணமாக, அபிராமி அந்தாதி பாட தொடங்கிய பட்டர்...

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் என்று தலையில் இருந்து தொடங்குகிறார்.

இறைவனைப் பாட வந்த மாணிக்க வாசகர்

நமச்சிவாய வாழ்க நாதன்  தாள் வாழ்க 

என்று திருவடியில் இருந்து தொடங்கினார்.

இங்கும் நம்மாழ்வார் பெருமாளின் திருவடிகளை முதலாக வைத்து தொடங்குகிறார்.


Monday, January 4, 2016

இராமாயணம் - தன்னைத் தான் தொழும்

இராமாயணம் - தன்னைத் தான் தொழும் 



நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா ? ஏதோ நாம் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்கிறோம் என்று இருக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. எப்போதாவது நீங்கள் உங்களையே பெரிய மனிதன் என்று உணர்ந்து இருக்கிறீர்களா ?

ஒரு பெரிய மனிதரைக் கண்டால் பொதுவாக மக்கள் என்ன செய்வார்கள் ? அவரை விழுந்து வணங்குவார்கள். அவரிடம் ஆசீர்வாதம் கேட்பார்கள்.

ஒருவரை மற்றவர்கள் வணங்குகிறார்கள் என்றால் அவர் பெரிய மனிதர் தானே ?

இராமன் வரப் போகிறான் என்று அனுமன் கூறக் கேட்டான் பரதன். அதைக் கேட்டவுடன் பரதன் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

அவனுடைய மகிழ்ச்சியை கம்பன் படம் பிடிக்கிறான்

பாடல்

'வேதியர்தமைத் தொழும்; வேந்தரைத் தொழும்; 
தாதியர்தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்; 
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்குமால்;- 
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! 

பொருள்

'வேதியர்தமைத் தொழும்; = அவையில் இருந்த வேதியர்களைத் தொழுதான்

வேந்தரைத் தொழும்; = அங்குள்ள வேந்தர்களைத் தொழுதான்

தாதியர்தமைத் தொழும்; = வேலை செய்யும் பணிப் பெண்களைத் தொழுதான்

தன்னைத் தான் தொழும்; = தன்னையே தொழுது கொண்டான்

ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்;  = ஒரு உணர்வும் இல்லாமல் இருந்தான்

நிற்குமால்;- = நின்றான்

காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! = காதல் என்பது கள் போலத்தான்

இராமனை காணப் போவதால் , தான் எவ்வளவு பெரிய மனிதன் என்று உணர்ந்த பரதன்  தன்னைத் தானே தொழுது கொண்டான்.

பரதன் என்ற தனி மனிதனாக தான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று அவனுக்குத் தெரியும். இராமனை காணப் போகிறேன் என்பதால் தான் பெரிய ஆள் என்று நினைந்து தன்னைத்தானே வணங்கிக் கொண்டான். 

இன்னும் இராமனை காணவில்லை. பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் அந்த நினைவை தோற்றுவிக்கிறது. 

இராமனை பார்க்கப் போவதால், தான் வணங்கத்தக்கவன் என்று நினைந்து பரதன் தன்னைத் தானே   வணங்கிக் கொண்டான். 

தான் மட்டும் அல்ல, இராமனை யாரெல்லாம் காணப் போகிறார்களோ அவர்கள் எல்லோரும் வணங்கத் தக்கவர்களே என்று எண்ணி, அங்கிருந்த வேதியர்களையும், அரசர்களையும், பணிப் பெண்களையும் வணங்கினான்.

யாருக்குத் தெரியும்?...நாளையே நீங்களும் இராமனை காண நேரிடலாம் ? நாளும் இறைவனை காண வேண்டும் என்று தானே பிரார்த்தனை பண்ணுகிறீர்கள் ? அந்த பிரார்த்தனை கை கூடி வந்தால், நீங்களும் இறைவனை  காணும் பேறு பெறுவீர்கள். 

காண்பீர்களோ, இல்லையோ...காணும் சாத்தியம் இருப்பதால் நீங்களும் பெரியவர்கள் தான். 

கண்ணாடி முன் நின்று ஒரு முறை உங்களை நீங்களே வணங்கிக் கொள்ளுங்கள்.

அது மட்டும் அல்ல உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் வணங்கத் தக்கவர்கள்தான் .  

இது பக்தியின் உச்சம் !

அதைக் கம்பன் பக்தி என்று கூட சொல்லவில்லை. காதல் என்கிறான். கள் வெறி கொண்டது போல இருக்கும் காதல் என்கிறான். 

ஒரு கரைதல். ஒரு களிப்பு. ஒரு உன்மந்தம்....













Sunday, January 3, 2016

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு 



பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

மனிதன், இறைவனிடம் பொதுவாகவே ஏதாவது கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான்.

படிப்பைக் கொடு, செல்வத்தைக் கொடு, உடல் ஆரோக்யத்தைக் கொடு, மன நிம்மதியைக் கொடு, என் பிள்ளைக்கு வேலை, நல்ல இடத்தில் திருமணம், சிக்கல்களில் இருந்து விடுதலை, என்று ஏதாவது ஒன்றைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

பற்றுகளை விட்டு விட்டேன் என்று சொல்லும் துறவிகளும், ஞானிகளும் கூட முக்தி கொடு, பரமபதம் கொடு என்று கேட்கிறார்கள்.

அதுவும் இல்லாவிட்டால் , இங்கேயே, உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கும்  வரம் தா என்று வேண்டுகிறார்கள்.

காலம் காலமாக மனிதன் ஆண்டவனிடம்  எதையோ கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான். அவனின் தேவைகள் தீர்ந்தபாடில்லை.


இறைவா உன் கருணை  வேண்டும்,உன் அன்பு வேண்டும், உன் தயை வேண்டும் என்று உருகிக் கொண்டிருக்கிறான் மனிதன்.

இறைவன் பெரிய ஆள் தான். அவனால் எல்லாம் முடியும். மிக மிக சக்தி வாய்ந்தவன் தான்.

எதைக் கேட்டாலும் தருவான்...

அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு தாய்  இருக்கிறாள். அவளுடைய பையன் படித்து பட்டம் பெற்று பெரிய ஆளாகி விட்டான். அவனுக்கு கீழே ஒரு பெரிய நிறுவனமே இயங்குகிறது. அவன் ஆணையை நிறைவேற்ற ஆயிரம் பேர் காத்து இருக்கிறார்கள்.

இருந்தாலும், அவன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது , அந்தத் தாய்  " பாத்து போப்பா, ஜாக்கிரதையா போப்பா " என்று சொல்லி அனுப்பவாள் .

ஏன் ?

மகனுக்கு அறிவில்லையா ? அவனுக்கு எப்படி போக வேண்டும்  என்று  தெரியாதா ?

 தெரியும்.அது அந்தத்  தாய்க்கும்    தெரியும்.  இருந்தும்,அவள் மனதில் ஊற்றெடுக்கும் காதலால், அந்த பிள்ளையின்  மேல் உள்ள வாஞ்சையால் அவள் அப்படி சொல்கிறாள். அவனுக்கு ஒரு துன்பமும் நேர்ந்து விடக் கூடாதே என்ற கவலையில் சொல்கிறாள்.

 பக்தி இலக்கியத்தில் முதன் முதலாக , இறைவனிடம் ஒன்றும் கேட்காமல், ஒரு நன்றி கூட சொல்லாமல், "இறைவா நீ நல்லா இரு ...பல்லாண்டு காலம் நீ சௌக்கியமாக வாழ வேண்டும்  " என்று பெரியாழ்வார்  வாழ்த்துகிறார்.

இறைவனுக்கு என்ன ஆபத்து வந்து விடப் போகிறது ? வந்தாலும் அவனுக்குத் தன்னை காத்துக் கொள்ளத் தெரியாதா ?

தெரியும். அது ஆழ்வாருக்கும் தெரியும்.

இருந்தும்  பெருமாள் மேல் அவ்வளவு காதல்.

நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

ஒரு தாய், தன் பிள்ளையை வாழ்த்துவதைப் போல வாழ்த்துகிறார்.


இவர் வாழ்த்துவதைப் பார்த்து பெருமாளுக்கு ஒரே  சிரிப்பு.

எனக்கு என்ன ஆபத்து வந்து விடும் என்று நீர் என்னை வாழ்த்துகிரீர். என்னுடைய தோள்களைப் பாரும். பெரிய பெரிய மல்லர்களை வீழ்த்திய தோள்கள் என்று தன் தோள்களைக் காட்டுகிறான் அவன்.

 அதைப் பார்த்ததும் , ஆழ்வாருக்கு இன்னும் பயம் வந்து விட்டது....

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு


என்ன பயம் ?