திருக்குறள் - தோல்வியும் வெற்றிதான்
அவன் ஒரு பெரிய வீரன். அவன் பேரை கேட்டாலே எதிரிகள் நடுங்குவார்கள். பேர கேட்டாலே ச்சும்மா அதிருதுல என்பது மாதிரி.
அப்படிப் பட்ட வீரன், அவனுடைய காதலியை காணச் செல்கிறான். அவளுடைய நெற்றியை பார்க்கிறான். அவனுடைய வீரம் எல்லாம் எங்கோ போய் விட்டது. அவள் அழகின் முன், அவன் வீரம் மண்டியிட்டது.
பாடல்
ஒள்நுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.
பொருள்
ஒள்நுதற் கோஒ = ஒள் + நுதலுக்கோ = ஒளி பொருந்திய நெற்றிக்கோ
உடைந்ததே = உடைந்ததே
ஞாட்பினுள் = போர் களத்தில்
நண்ணாரும் = பகைவர்களும்
உட்கும் = அச்சம் கொள்ளும்
என் பீடு = என் பெருமை, அல்லது வலிமை
பாட்டும் பொருளும் நல்லாத்தான் இருக்கு.
பாட்டிலில் உள்ள சில வார்த்தைத் தெரிவுகளை பார்ப்போம்.
ஏன் நெற்றியைப் பார்த்து அவன் வீரம் உடைய வேண்டும் ?
கண்ணைப் பார்த்து என்று சொல்லி இருக்கலாம் ...
அல்லது சிறுத்த இடையைப் பார்த்து என்று சொல்லி இருக்கலாம்...
அல்லது சிவந்த பாதங்களை பார்த்து என்று சொல்லி இருக்கலாம்
அல்லது பெண்ணுக்கே உரிய வேறு பல சிறந்த அங்கங்களை காட்டிச் சொல்லி இருக்கலாம்...
நெற்றியை ஏன் சொல்ல வேண்டும் ?
காரணம் இருக்கிறது.
பெண்களுக்கு கருணை அதிகம்.
கருணை கண்ணில் இருந்து வெளிப்படும்.
கருணை அதிகமாக அதிகமாக கண்ணின் விசாலம் அதிகமாகும்.
அவளுக்கு விசாலாக்ஷி என்றும் பெயர்.
கண் பெரிதாகும் போது நெற்றி சுருங்கும்.
சின்னப் பெண் தான். இருந்தும் அவளின் மனதில் ஊற்றெடுக்கும் அந்த அன்பு, கருணை , பாசம் ...அவளது சின்ன நெற்றியில் தெரிகிறது.
அவனது வீரம் , மற்றவர்களை பயப்பட வைக்கும். எதிரிகளை கொல்லும் .
ஆனால், இவளது கருணை மிகுந்த பார்வையும், அதனால் சிறுத்த நெற்றியும் உயிர்களை வாழ வைக்கும்.
அதை நினைத்து அவன் வெட்கப் பட்டு, அதனால், அவன் பெருமை உடைந்தது.
மற்றவர்களை கொல்லுவது , அவர்கள் நம்மைக் கண்டால் மிரளும் படி முரட்டுத் தனமாய் இருப்பது எல்லாம் ஒரு பெரிய விஷயமா...இல்லவே இல்லை என்று அவன் உணர்ந்த தருணம். முரடனையும் , மென்மையானவனாய் மாற்றும் பெண்ணின் கருணை.
இந் நன்னுதல் அவள் நின் கேள் என்று சீதையை அறிமுகம் செய்வான் குகனிடம் இராமன்.
இந்த அழகிய நெற்றியை உடைய பெண் உன்னுடைய உறவினள் என்று கூறுகிறான். அங்கும் நெற்றியை குறித்து கம்பன் பேசுகிறான்.
"ஒள்நுதற் கோஒ" என்று ஒரு 'ஓ" வை ஏன் வள்ளுவர் போடுகிறார் ? அந்த அளபெடை எதற்கு ?
"ஓ" என்பது ஒரு ஆச்சரியக் குறி. அடடா, கருணையும் மக்களை அடிமை கொள்ளுமா ? இந்த சின்ன நெற்றிக்கு இவ்வளவு வலிமையா என்ற ஆச்சரியம். அதை எப்படி சொல்லுவது ? ஒரே ஒரு எழுத்தில் காட்டி விட்டுப் போகிறார் வள்ளுவர்.
ஆச்சரியம், திகைப்பு எல்லாம் அந்த ஒரு 'ஓ' வில் இருக்கிறது.
ஒரு முறை சொல்லிப் பாருங்கள் , புரியும்.
அது என்ன "நண்ணார் ".கேள்விப் படாத பெயராக இருக்கிறதே.
நண்ணுதல் என்றால் நெருங்கி வருதல் நண்பர் என்பது அதில் இருந்து வந்தது.
நண்ணார் என்றால் நெருங்காதவர். தள்ளியே இருப்பவர். பகைவர்.
ஒன்றே முக்கால் அடி தான். ஏழே ஏழு வார்த்தை தான்.
எவ்வளவு அர்த்தம்.
இப்படி 1330 பாடல் பாடி வைத்திருக்கிறார்.
நேரம் இருப்பின், படித்துப் பாருங்கள்.
கொட்டிக் கிடக்குது பொக்கிஷம்.
அருயையான விளக்கம்.சொக்கி போனேன் திருக்குறளை வெளியே கொணரந்தேன்.ஆனால் இவ்வளவு நுண்ணியமாக விளங்குமா எனக்கு என்பது சந்தேகம்தான்!
ReplyDelete