Pages

Sunday, August 21, 2016

இராமாயணம் - வாலி வதம் - பொறித்த நாமத்தை

இராமாயணம் - வாலி வதம்  - பொறித்த நாமத்தை 


Self Realization என்பது பெரிய விஷயம்.

உன்னையே நீ அறிவாய் என்றார் சாக்கரடீஸ்.

தன்னைத் தான் அறிவது என்பதுதான் வாழ்க்கையின் நோக்கமாகக் கூட இருக்குமோ ?

வாழ்க்கை தூண்டிக் கொண்டே இருக்கிறது. அறிந்து கொள் , அறிந்து கொள் என்று. நாம் தான் அறிய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறோம்.

ஒவ்வொரு முறை நாம் கற்றுக் கொள்ளத் தவறும் போதும் வாழ்க்கை இன்னும் அதிக அழுத்தமாக சொல்லித் தர முயல்கிறது.

சில பேர் சீக்கிரம் அதை பற்றிக் கொள்கிறார்கள்.

சிலருக்கு நேரம் ஆகிறது.

வாலி, தான் வலிமை, திறமை, பூஜை, புனஸ்காரம் என்று இருந்து கொண்டிருந்தான்.

தன்னை வெல்ல யாரும் இல்லை என்று நினைத்திருந்தான்.

இராமன் மறைந்து இருந்து ஏவிய அம்பு அவன் மார்பில் பாய்ந்தது.

மிகப் பெரிய அடி. நினைத்துப் பார்க்க முடியாத அடி . வலி.

திகைத்துப் போனான் வாலி.

அவன் மார்பில் தைத்த அம்பை வாலினாலும் கையினாலும் பிடித்து இழுத்து அதில் யார் பெயர் எழுதி இருக்கிறது என்று பார்க்க எத்தனிக்கிறான்.

பாடல்

பறித்த வாளியைப் பரு வலித்
    தடக்கையால் பற்றி,
‘இறுப்பென் ‘என்று கொண்டு எழுந்தனன்,
    மேருவை இறுப்போன்;
‘முறிப்பென் என்னினும் முறிவது
    அன்றாம் ‘என மொழியாப்,
பொறித்த நாமத்தை அறிகுவான்
    நோக்கினன், புகழோன்.


பொருள் 

பறித்த வாளியைப் = மாரிபில் இருந்து பிடுங்கிய அம்பை

 பரு = பருத்த, பெரிய

வலித் = வலிமையான

தடக்கையால் = பெரிய கைகளால்

 பற்றி = இறுகப் பிடித்து


‘இறுப்பென் ‘ = உடைப்பேன்

என்று  = என்று

கொண்டு எழுந்தனன் = எழுந்தான்.

மேருவை = மேரு மலையை

இறுப்போன் = உடைப்பவன், முறிப்பவன்

‘முறிப்பென் என்னினும் = அந்த அம்பை முறித்துப் போடுவேன் என்று நினைத்தாலும்

முறிவது அன்றாம் ‘ = முறிக்க முடியாதது

என மொழியாப் = என்று சொல்லும் படி

பொறித்த = அதில் எழுதி உள்ள

நாமத்தை = நாமத்தை, பெயரை

அறிகுவான் நோக்கினன் = அறியவேண்டி நோக்கினான்

புகழோன் = புகழ் உடைய வாலி

நமக்கு வாழ்வில் வரும் துன்பங்கள் நம்மிடம் சொல்லி விட்டா வருகின்றன ? இன்ன தேதியில், இன்னார் மூலம், இப்படி இப்படி வரும் என்று  சொல்லி விட்டா வருகின்றன.

வாலி மேல் இராமன் மறைந்து இருந்து அம்பு எய்தான் என்பது ஒரு குறியீடு.

துன்பம் வரும் வழி நாம் அறிவதே இல்லை.

துன்பத்தை இறைவன் நமக்குத் தருகிறான் என்றால் , சொல்லி விட்டுத் தருவதில்லை.

இராமன் நேரில் வந்து வாலியிடம் சொல்லி இருந்தால் , ஒரு வேளை வாலி இராமன் சொல்வதைக் கேட்டு அரசை சுக்ரீவனிடம் கொடுத்து விட்டு இராமன் பின்னால் கிளம்பி இருப்பான்.

 ஆனால், வாலி தன்னைத் தான் அறிந்திருக்க மாட்டான்.

இராமனே தான் தான் பரம் பொருள் என்று சொல்லி இருந்தாலும், முதலில் நம்பி  இருந்தாலும், பின்னால் சந்தேகப் பட்டிருப்பான் .  "பரம் பொருள்னு சொல்றான்...கட்டிய மனைவியை பறி கொடுத்து விட்டு காடு மேடெல்லாம் அலைகிறானே ...ஒரு வேளை உண்மையிலேயே இவன் பரம் பொருள் இல்லையோ " என்ற சந்தேகம் வந்திருக்கலாம்.

துன்பம் வரும் போதுதான் நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம்.

பற்றை விட்டால் தான், பரமனை அறிய முடியும்.

வாலியோ ஒவ்வொரு நாளும் மற்றவர்களிடம் உள்ள வலிமை எல்லாம் தனக்கு வேண்டும் என்று மேலும் மேலும் சேர்த்துக் கொண்டிருக்கிறான்.

என்று இவன் பற்றை விடுவது, என்று இவன் உண்மையை அறிவது ?

அம்பைப் பறித்த வாலி கண்டது என்ன ?


http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_21.html



1 comment:

  1. வாலி தன்னைத் தானே அறிவது என்றால் என்ன? அவன் தன்னை வெல்ல ஆள் இல்லை என்று கொண்ட எண்ணத்தை மாற்றி, தன்னையும் கொல்ல முடியும் என்று அறிவதா?

    அப்படி வைத்துக் கொண்டால், மறைந்திருந்து கொள்வதனால் வாலியின் எண்ணம் எப்படி மாறும்? "சும்மா ஒளிந்திருந்து அம்பு எய்து விட்டான் ஒரு பயந்தாங்கொள்ளி" என்ற எண்ணம்தானே வாலிக்கு இருக்கும்? அதனால் அவன் என்ன பாடத்தைக் கற்றுக் கொண்டான்?

    ReplyDelete