திருக்குறள் - உதவியின் அளவு
பாடல்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
பொருள்
தினைத்துணை = தினை அளவு
நன்றி = நல்லது
செயினும் = செய்தாலும்
பனைத்துணையாக் = பனை அளவாகக்
கொள்வர் = கருதுவார்கள்
பயன்தெரி வார் = அந்த உதவியின் பயனை அடைந்தவர்கள்
ஒரு சிறு உதவி செய்தால் கூட, அதை பெரிதாக நினைப்பார்கள் அந்த உதவி அடைந்தவர்கள் என்பது பொருள்.
அவ்வளவுதானா ? அல்லது இதற்கு மேலும் இருக்கிறதா ?
சிந்திப்போம்.
பெரிய அளவு என்று சொல்வதற்கு ஏன் பனையை சொல்கிறார் வள்ளுவர் ? பனை மரத்தை விட தென்னை மரம் உயரமாக வளரக் கூடியது. பனை மரத்தை விட உயரமானவை வேறு எவ்வளவோ இருக்கின்றன. கோபுரம் என்று சொல்லி இருக்கலாம், வான் அளவு என்று சொல்லி இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டு ஏன் பனை மரத்தை சொல்கிறார் ?
தென்னை மரம் போன்றவை உயரமாக வளரும். அதிக பலன் தரும். அதன் தேங்காய், இளநீர், தென்னை மட்டை போன்றவை நமக்கு நிறைய பயன் பாடு உள்ளவை தான். பனை மரத்தில் இருந்து நுங்கு கிடைக்கும். பனை மட்டை அவ்வளவு சிறப்பானது அல்ல. மேலும் பனை மரம் தென்னை மரத்தைப் போல பழுத்த மட்டைகளை ஒவ்வொரு வருடம் உதிர்ப்பது இல்லை.
பின் ஏன் பனை மரம் ?
காரணம் இருக்கிறது.
தென்னை மரத்துக்கு நிறைய நீர் விட வேண்டும். பலன் அதிகம் என்றாலும் அதற்கு நிறைய நீர் தேவை. நீர் அதிகம் உள்ள கடற்கரை அல்லது கழிவு நீர் போகும் இடம் என்ற இடங்களில் தான் தென்னை வளரும். அது மட்டும் அல்ல, அதற்கு தென்னங்கன்றுகளை நட்டு, அதை மண்ணோடு இன்னொரு இடத்துக்கு மாற்றி, அந்த இடத்தில் குழி தோண்டி, உப்பிட்டு, உரம் இட்டு நிறைய வேலை செய்ய வேண்டும்.
பனை அப்படி இல்லை. பனங் கொட்டையை சும்மா அப்படி தூக்கிப் போட்டு, கொஞ்சம் மண்ணை போட்டு மூடினால் போதும். எந்த கரடு முரடான இடத்திலும் வளரும். வெகு சொற்பமான மழை போதும். மிகக் குறைந்த உதவியில் அதிகம் பலன் தருவது பனை.
கொஞ்சம் உதவி செய்தாலும் அதிக பலன் தருவது பனை. எனவேதான் பனை அளவு என்றார்.
மேலும்,
ஒரு குவளை நீர் என்ன மதிப்பு இருக்கும் ? ஒரு பாட்டில் மினரல் நீர் இருப்பது முப்பது ரூபாய் இருக்கும். அவ்வளவுதானே ?
ஒரு பாலைவனத்தில் நீங்கள் சிக்கி கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வெயில் சுட்டு பொசுக்குகிறது. கால் சுடுகிறது. நாக்கு வறள்கிறது. கொஞ்சம் தண்ணீர் வேண்டும். அந்த சமயத்தில் ஒரு குவளை நீருக்கு நீங்கள் எவ்வளவு பணம் தருவீர்கள் ? உங்கள் சொத்து முழுவதையும் தரச் சொன்னாலும் தந்து விடுவீர்கள் அல்லவா ?
உதவி என்பது உதவியின் அளவைப் பொறுத்தது அல்ல. அந்த பயனை பெற்றவர்களைப் பொறுத்தது.
எனவே தான் வள்ளுவர் "பயன் தெரிவார்" என்றார்.
அது மட்டும் அல்ல, சில உதவிகள் அந்த நேரத்துக்கான உதவியாக இருக்கும். சில உதவிகள் காலம் பூராவும் கூடவே வரும்.
ஒரு ஏழை மாணவனுக்கு பள்ளிக் கூட கட்டணம் காட்டினால் அவன் தொடர்ந்து படிக்க முடியும். அவன் படித்து , பெரிய ஆளாகி விடலாம். அவன் மூலம் இந்த உலகம் பல பலன்களை பெறலாம். அன்று அவனுக்கு கட்டிய கட்டணம் தொடர்ந்து பல நல்ல பலன்களை தருகிறது. காட்டியது என்னவோ ஒரு வருட கட்டணம் தான். பலன் வாழ் நாள் பூராவும் வரும்.
ஒரு ஏழை பெண்ணுக்கு திருமணம் நடத்த உதவி செய்தல், சாகும் நிலையில் உள்ள ஒருவருக்கு இரத்தம் தந்து அவர் உயிரை காப்பாற்றுதல் போன்ற உதவிகள், ஒரு முறை செய்தாலும், அதன் தொடர் பலன்கள் வந்து கொண்டே இருக்கும்.
"பயன் தெரிவார்" பயனை தெரிந்து கொண்டவர்கள் சின்ன உதவியைக் கூட பெரிதாக நினைப்பார்கள்.
நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு சிறியதாக இருக்கலாம். அந்த
உதவியின் பயனை பெற்றவர்கள் அதை பெரிதாக நினைப்பார்கள். எனவே, சின்ன உதவி தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். யாருக்குத் தெரியும், சூப்பிப் போட்டா பனங் கொட்டை பெரிய மரமாக வளர்ந்து பலன் தருவது போல, உங்களுடைய சின்ன உதவி எங்கேனும் பெரிய அளவில் பயன் தரும்.
சின்ன சின்ன உதவி என்றாலும் பரவாயில்லை. தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.
செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?
அருமையான விளக்கம்... ������நன்றி.... Keep it up
ReplyDelete