இராமாயணம் - வீடணன் சரணாகதி
வீடணன் படித்தவன்.அறிஞன். ரொம்ப படித்தவர்களுக்கு சரணாகதி என்பது அவ்வளவு எளிது அல்ல. அறிவு தடுக்கும். அறிவு ஆயிரம் கேள்வி கேட்கும். ஆயிரம் சந்தேகம் எழுப்பும். எல்லாவற்றையும் விட்டு விட்டு நீயே சரண் என்று போக முடியுமா ?
வீடணன் போனான். அவன் பெரிய மேதை. மிக்க படித்தவன்.
போவதற்கு முன்னால் , இராவணனுக்கு அறிவுரை சொல்லுகிறான்.
பாடல்
'இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச,
வசையும் கீழ்மையும் மீக்கொள, கிளையொடும் மடியாது,
அசைவு இல் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி; இதன்மேல்
விசையம் இல்' எனச் சொல்லினன்-அறிஞரின் மிக்கான்.
பொருள்
'இசையும் = புகழும்
செல்வமும் = செல்வமும்
உயர் குலத்து = உயர்ந்த குலத்து
இயற்கையும் = தன்மையும்
எஞ்ச = இருக்க
வசையும் = வசைச் சொற்களும்
கீழ்மையும் = கீழான செயல்களும்
மீக்கொள,= மேலோங்கி நிற்க
கிளையொடும் = உறவினர்களோடும்
மடியாது = இறந்து போகாமல்
அசைவு இல் கற்பின் = உறுதியான கற்பு உடைய
அவ் அணங்கை = அந்தப் பெண்ணை, சீதையை
விட்டருளுதி;= விட்டு அருளுதி
இதன்மேல் = இதைவிட
விசையம் இல்' = உயர்ந்தது ஒன்றும் இல்லை
எனச் சொல்லினன் = என்று சொல்லினான்
அறிஞரின் மிக்கான் = அறிவுள்ளவர்களில் சிறந்தவனான வீடணன்
உன்னுடைய புகழும், செல்வமும், உயர் குடி பிறப்பும் எல்லாம் போய் விடும். சீதையை விட்டு விடு என்கிறான்.
வீடணனுக்கு கம்பன் ஒரு அடை மொழி தருகிறான் - அறிஞரின் மிக்கான் என்று. அறிவுள்ளவர்களில் தலை சிறந்தவன் என்று.
அவன் மேலும் என்ன சொல்லுகிறான் என்று பார்ப்போம்.
No comments:
Post a Comment