இராமாயணம் - தெய்வ குணம் - முதிர் தரும் கருணையின் முகம் ஒளிர
போன பிளாகில் பிறர் மனம் நோகும்படி பேசுவது ஒரு அரக்க குணம் என்று பார்த்தோம்.இராவணன் நல்லது சொன்னால் கூட மற்றவர்கள் பயப்படுவார்களாம். நல்லது பகரினும் நடுங்கும் நெஞ்சினர் என்பார் கம்பர்.
இனிமையாக எப்படி பேசுவது என்று வள்ளுவர் கூறுவதையும் முந்தைய பிளாகில் பார்த்தோம். முகத்தை நோக்கி , மலர்ந்த முகத்துடன், இனிய சொற்களை கூற வள்ளுவர் கூறுவதையும் பார்த்தோம்.
மாற்றாக, இராமன் எப்படி பேசுகிறான் என்று பார்ப்போம்.
இராமன், தெருவில் வருகிறான். நடந்து வருகிறான். எதிரில் யாரோ வயதான குடிமகன். இராமனுக்கு அவனை யார் என்றே தெரியாது.
அவன் அருகில் சென்று விசாரிக்கிறான்...கருணையோடு, மலர்ந்த முகத்தோடு ...
"உன் மனைவி நலமா ? உன் பிள்ளைகள் படிக்கிறார்களா ? நல்ல வலிமையுடன் இருக்கிறார்களா ?" என்று கேட்கிறான்.
பாடல்
எதிர் வரும் அவர்களை. எமையுடை இறைவன்.
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா.
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனயையும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?’ எனவே.
பொருள்
எதிர் வரும் = எதிரில் வரும்
அவர்களை. = பொது மக்களை
எமையுடை இறைவன் = எங்களை கொண்ட இறைவனாகிய இராமன்
முதிர் தரு கருணையின் = கனிந்த கருணையான
முகமலர் ஒளிரா = முகமாகிய மலர் ஒளிர
‘எது வினை? = வேலை எல்லாம் எப்படி போகிறது
இடர் இலை? = துன்பம் ஒன்றும் இல்லையே
இனிது நும் மனயையும்? = உன் மனைவி இன்பமாக இருக்கிறாளா ?
மதி தரு குமரரும் = அறிவுள்ள பிள்ளைகளும்
வலியர்கொல்?’ எனவே = வலிமையோடு இருக்கிறார்களா ?
என்று கேட்டான்.
இதில் பல நுட்பமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.
முதலாவது, முதிர் தரு கருணையின்....கருணையான முகத்ததோடு. முகத்தில் கருணை இருக்க வேண்டும். எப்போதும் கடு சிடு என்று இருக்கக் கூடாது.
இரண்டாவது,"முக மலர் ஒளிர" ...மலர் போல முகம் ஒளிர வேண்டும்.
ஒளிர்தல் என்பது மிக பெரிய விஷயம். இராமன் கானகம் போகிறான்.அவன் உடலில் இருந்து வெளி வரும் ஒளியில் சூரியனின் ஒளியே மங்கிப் போய் விட்டதாம்.
வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்
வெய்யோன் ஒளி = சூரியனின் ஒளி
தன் மேனியின் விரிசோதி = இராமனின் மேனியில் இருந்து வரும் ஒளியில் மறைய
திருவாசகத்தில் சிவனை ஒளி வடிவமாக பல இடங்களில் கூறுகிறார்.
மூன்றாவது, ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று இராமன் அறிந்து அதைப் பற்றி விசாரிக்கிறான்.
மனைவி இன்பமாக இருக்கிறாளா ? வீட்டில் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் எல்லாமே மகிழ்ச்சியாக இருக்கும். அவள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் மற்றவை மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை.
மதி தரும் மைந்தர் - பிள்ளைகள் படித்து அறிவாளிகளாக இருக்க வேண்டும். இளமையில் படிக்காத மகன் வீட்டுக்கு அட்டமத்துச் சனி என்பார் ஒளவையார்
காலையிலே பல்கலைநூல் கல்லாதத் தலைமகன்
ஆலையெரி போன்ற அயலானும்– சால
மனைக்கட் டழிக்கு மனையாளும் இம்மூவர்
தனக்கட் டமத்துச் சனி
படித்தால் மட்டும் போதாது , வலிமை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். மனத்திலும், உடலிலும் வலிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அறிவு மட்டும் போதாது. வல்லமையும் வேண்டும்.
முன்ன பின்ன தெரியாத ஒருவரிடம் எவ்வளவு அன்போடு அக்கறையோடு விசாரிக்கிறான்.
நம் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிடம் நாம் எப்போதாவது அப்படி கேட்டது உண்டா ? நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள காவல்காரரை (secuirty ) நாம் அப்படி விசாரித்தது உண்டா ?
யாரிடமும் அன்போடு, இனிமையாக பேசுவோம். அது ஒரு தெய்வீக குணம்.
எளிதானதுதானே ?
நல்ல பாடம். அருமையான விளக்கம்.ராமாயணத்திலிருந்து கற்றுக்கொள்ள விஷயங்கள் அநேகம்.
ReplyDelete