Pages

Friday, January 27, 2017

இராமாயணம் - பரதன் குகன் - முந்தையோர் முறையில் நின்றும் வழுவினன்

இராமாயணம் - பரதன் குகன் - முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன்


கானகம் சென்ற இராமனை மீண்டும் அழைத்து வர பரதன் கங்கை கரையை அடைந்தான். அவனை முதலில் தவறாக நினைத்த குகன் தன்னைத் திருத்திக் கொள்கிறான்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின், குகன் பரதனிடம் "நீ எதற்காக வந்தாய்" என்று கேட்கிறான்.

அதற்கு பரதன், "உலகம் முழுதும் ஆண்ட தசரதன் ஒரு தவறு செய்து விட்டான். அதை திருத்த இராமனை மீண்டும் அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றான்.

பாடல்

தழுவின புளிஞர் வேந்தன்
    தாமரைச் செங்கணானை
‘எழுவினும் உயர்ந்த தோளாய்!
    எய்தியது என்னை? ‘என்ன,
‘முழுது உலகு அளித்த தந்தை
    முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன், அதனை நீக்க
    மன்னனைக் கொணர்வான் ‘என்றான்.

பொருள்

தழுவின புளிஞர் வேந்தன் = தழுவிய வேடத் தலைவன்

தாமரைச் செங்கணானை = தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய பரதனை

‘எழுவினும் உயர்ந்த தோளாய்! = பெரிய தூண்/கம்பம் இவற்றை விட உயர்ந்த தோள்களை உடையவனே

எய்தியது என்னை? ‘என்ன = என்ன காரணத்திற்காக வந்திருக்கிறாய் என்று கேட்டான்

‘முழுது உலகு அளித்த தந்தை = முழு உலகத்தையும் ஆண்ட தந்தை ஆகிய தசரதன்

முந்தையோர் முறையில் = முன்னோர் சென்ற முறையில்

நின்றும் = இருந்து

வழுவினன் = தவறினான்

அதனை நீக்க = அதை சரி செய்ய

மன்னனைக் கொணர்வான் ‘என்றான் = மன்னனான இராமனை கூட்டிச் செல்ல வந்திருக்கிறேன் என்றான்

கம்பன் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து போடுகிறான்.

தவறு செய்தது அரசன் அல்ல. தந்தை.

அரசனின் ஆணை மதிக்கப்பட வேண்டும்...சரியோ தவறோ ...அரசாணைக்கு எல்லோரும்  அடி பணிய வேண்டும். இன்று பரதன் பணியவில்லை என்றால் நாளை பரதனின் ஆணையை யார் பணிவார்கள்.

ஆனால், தந்தை தவறு செய்யலாம். தந்தையின் செயல்கள் விமர்சினத்துக் உட்பட்டது .

அடுத்து, அரசனை கொணர்வான் வந்தேன் என்றான். அண்ணனை கொணர்வான் என்று சொல்லவில்லை. பரதன் மனதில் இராமன் தான் அரசன். யார் என்ன சொன்னாலும் அவனுக்கு கவலை இல்லை. இராமன் ஒருவன் தான்  அரசன்.


தந்தை நெறி தவறினான் என்று பகிரங்கமாக சொல்லுகிறான். இராமன் அப்படி பேசவில்லை. "அப்பா சொல்ல வேண்டுமா, நீ சொன்னால் போதாதா " என்று கைகேயின் வார்த்தை கேட்ட மாத்திரத்தில் கிளம்பி விட்டான்.

தந்தை செய்தது சரியா தவறா என்று அவன் வாதம் செய்யவில்லை.

அது இராமன் கண்ட அறம் .

ஆனால், பரதனுக்கு யார் சொன்னார்கள் என்பது பற்றி கவலை இல்லை. முறை என்று உண்டு. அறம் என்று ஒன்று உண்டு. யார் சொன்னாலும் அதை மீறக்  கூடாது என்று நினைக்கிறான்.


எது சரி ?

இராமன் எப்போதும் பெரியவர்கள் சொன்னதை கேட்டுத்தான் நடந்திருக்கிறான்...அறம் அல்ல என்று தெரிந்தாலும்.

பெண்ணைக் கொல்வது அறம் அல்ல என்று தெரிந்தாலும், விஸ்வாமித்ரன் சொன்னான் என்பதற்காக  அவளை கொல்கிறான்.

அப்போது இராமன் சொல்லவும் சொல்கிறான் "அறம் அல்லாதவற்றை நீ சொன்னால், நான் செய்வேன் " என்று வாக்கு மூலம் தருகிறான்.

அடுத்து, கைகேயி சொன்னால் என்பதற்காக மூத்த மகன் அரசாள வேண்டும் என்ற நெறியை கை விட்டு கானகம் போகிறான்.

அடுத்து, சபரி சொன்னால் என்பதற்காக ஆராயாமல் சுக்ரீவனோடு நட்பு பாராட்டுகிறான்.

ஆனால் , பரதன் அப்படி அல்ல. யார் என்ன சொன்னாலும், எது அறம் என்பதில் மிகத்  தெளிவாக இருக்கிறான்.

எது சரி ? இராமனின் வழியா ? பரதனின் வழியா ?

கம்பன் அதற்கும் ஒரு தீர்வு சொல்கிறான்.

அது என்ன தீர்வு ?



3 comments:

  1. எது சரி , எது தவறு என்கிற வினாவிற்கு பதிலை கூறி முடிக்காமல் அந்தரத்தில் விட்டு விட்டீர்கள் ! என்னவாக இருக்கும் என யோஜிக்க ஆரம்பித்தவுடன் நக்கீரனார்தான் ஞாபகத்திற்கு வந்தார்.நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று எல்லோருக்கும் பெரியவரான சிவ பெருமானிடமே அஞ்சாமல் கூறினார்.பெரியவர்கள் சொன்னால் அறத்தை கைவிடலாமா என்கிற எண்ணம் தோன்றியது. நீங்கள் அல்ல கம்பர் என்ன விளக்கம் கூறப்போகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறான்

    ReplyDelete
  2. நானும் காத்திருக்கிறேன்

    ReplyDelete