Pages

Friday, July 14, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எம்மையும் தருவன

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எம்மையும் தருவன 


கானகம் வந்த இராமனை பின் தொடர்ந்து வந்த பரதன் ஆட்சியை மீண்டும் ஏற்றுக் கொள்ளுபடி வேண்டுகிறான். இராமன் மறுக்கிறான். வசிட்டன் சொல்லிப் பார்க்கிறான். அப்பவும் இராமன் ஏற்றுக் கொள்ளவில்லை. பின் தேவர்கள் வந்து இராமன் கானகம் செல்வதும், பரதன் நாடு ஆள்வதும் அவர்கள் கடமை என்று சொன்ன பின்  இராமன் பரதனிடம்   கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் , நாட்டை ஆளும்படி.

பரதனும் சரி என்று ஏற்றுக் கொள்கிறான். ஆனால் "பதினான்கு ஆண்டுகளில் நீ திரும்பி வராவிட்டால் உயிர் விடுவேன் " என்று கூறுகிறான்.

அதற்கு இராமன் சம்மதிக்கிறான்.

இறுதியில் பரதன் , வேறு ஒன்று செய்வதற்கு இல்லை என்று அறிந்த பின் "உன் திருவடிகளை தா" என்று இராமனிடம் கேட்கிறான். இராமனும் அவற்றை கொடுக்கிறான்.


பாடல்

விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று
இன்மையின், ‘அரிது’ என எண்ணி, ஏங்குவான்,
‘செம்மையின் திருவடித்தலம் தந்தீக’ என,
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.


பொருள்

விம்மினன் பரதனும் = பரதனும் மனம் விம்மி

வேறு செய்வது ஒன்று = வேறு ஒன்று செய்வது

இன்மையின் = இல்லாததால்

‘அரிது ‘என எண்ணி ஏங்குவான் = ஒன்றும் செய்ய

முடியவில்லையே என்று எண்ணி ஏங்கி

செம்மையின் = செம்மையான

திருவடித் தலம் = திருவடி இருக்கின்ற தலம், அதாவது பாதுகை

தந்தீக ‘என = தந்து ஈக. தானமாக கொடு என்று வேண்டினான்

எம்மையும் தருவன = எம்மையும் தருவன

இரண்டும் நல்கினான். = இரண்டையும் தந்தான்

''எம்மையும்" என்றால் என்ன ?

எம்மையே எமக்குத் தரும் என்று கொள்ளலாம்.

"தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை"

என்று பின்னொரு இடத்தில் கம்பன் கூறுவான்.

இம்மைக்கும், மறுமைக்கும் எல்லாவற்றையும், எப்போதும்  தரும் என்ற பொருளில், "எம்மையே " என்றான்.

"நல்லன எல்லாம் தரும் அபிராமி கடைக் கண்களே " என்பார் அபிராமி பட்டர்.


இறைவன் உயர்ந்தவன்.

அவனைத் தாங்கும் அவன் பாதங்கள் அதை விட உயர்ந்தது.

பாதங்களையும் சேர்த்துத் தாங்கும் பாதுகை அதை விட உயர்ந்தது.

இராமனின் திருவடிகளை கொண்டு போய் பரதன் என்ன செய்யப் போகிறான் ?

இந்த படலம் முடிவதற்கு இன்னும் ஒரு சில பாடல்களே இருக்கின்றன.

சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_14.html


No comments:

Post a Comment