இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - பாதுகம் செந்தனிக் கோல் முறை செலுத்த
இந்தப் படலத்தின் இறுதிப் பாடல் இது.
இராமன் அரசை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். தேவர்கள் "இராமன் கானகம் போவதும், பரதன் அரசை ஆள்வதும் கடமை " என்று கூறி விட்டார்கள். பரதன் , இராமனின் இரண்டு பாதுகைகளை வாங்கிக் கொண்டு செல்கிறான்.
சில அருமையான பாடல்கள் உள்ளன. அவற்றைத் தாண்டி, இறுதி கட்டத்துக்கு வருவோம்.
நந்தியம்பதி என்ற இடத்தில் , இராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து, அதற்கு முடி சூட்டி, தன் புலன்களை எல்லாம் அடக்கி , அழுத கண்ணீரோடு அரசாட்சி செய்கிறான் பரதன்.
பாடல்
நந்தி அம் பதி இடை நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்தச் சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.
பொருள்
நந்தி அம் பதி இடை = நந்தியம்பதி என்ற இடத்தில்
நாதன் = இராமன்
பாதுகம் = பாதுகைகளை
செந் = செம்மையான
தனிக் = தனிச் சிறப்பான
கோல் = செங்கோல் (அரசாட்சி)
முறை செலுத்தச் = வழியில் செலுத்த
சிந்தையான் = சிந்தனை கொண்ட பரதன்
இந்தியங்களை அவித்து = இந்திரியங்களை அவித்து
இருத்தல் மேயினான் = இருக்கத் தொடங்கினான்
அந்தியும் = இரவும்
பகலும் = பகலும்
நீர் = கண்ணீர்
அறாத = வற்றாத
கண்ணினான் = கண்களை கொண்டவன்
கல்லும் உருகும் கவி நயம் ஒரு புறம் இருக்க, மிக மிக ஆழ்ந்த கருத்துகளை கொண்ட பாடல் இது.
முதலாவது, ஏன் நந்தியம்பதி ? அந்த பாதுகைகளை அயோத்திக்கு கொண்டு போய் , அங்குள்ள சிம்மாசனத்தில் வைக்கக் கூடாதா ?
வைக்கலாம். ஆனால், இராமன் இல்லாத அயோத்திக்குள் போவதற்கு கூட பரதனுக்கு மனம் இல்லை.
சில சமயம் பிள்ளைகள் திருமணம் ஆகியோ, அல்லது மேற் படிப்புக்கோ, வேலைக்கோ வீட்டை விட்டு போய் விடுவார்கள். அவர்கள் போன பின், அவர்கள் இருந்த அறையை பார்க்கவே மனதுக்கு வருத்தமாக இருக்கும். பிள்ளை எப்படி இருக்கிறானோ / ளோ என்று. அந்த அறைக்கு போகவே மனம் வராது.
அது போல, இராமன் இருந்த அயோத்தியில், அவன் இல்லாமல் இருக்க பரதனுக்கு மனம் இல்லை. எனவே, ஊருக்கு வெளியே , நந்தியம்பதி என்ற இடத்தில் இருந்து விட்டான்.
இரண்டு, "இந்திரியங்களை அவித்து ". அதாவது புலன்களை அடக்கி அரசு செலுத்தினான். பதவி என்றாலே சுகம் அனுபவிக்கத்தான் என்று ஆகிவிட்ட இந்நாளில் , சக்கரவத்தி பதவியில் சுகம் எதையும் அனுபவிக்காமல் இருந்தான் பரதன் என்கிறார் கம்பர். பதவி என்பது வேலை செய்யவே தவிர சுகம் அனுபவிக்க அல்ல. ஒரு சக்கரவர்த்திக்கு எவ்வளவு சுகம், வசதி கிடைக்கும்? சின்ன கம்பெனியில் வேலை செய்பவர்கள் கூட, கார் கதவை ஓட்டுநர் திறக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். தனது சுகத்தை நினைக்காமல் மக்களின் சுகத்தை நினைத்து ஒவ்வொருவரும் பணியாற்றினால் இந்த நாடும் உலகும் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள். எந்த பதவியில் இருப்பவர்களுக்கும் இந்த பாடல் ஒரு வழிகாட்டி. பிரிண்ட் பண்ணி அலுவலகத்தில் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது, பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் ? கொஞ்சம் நெருடலாக இல்லை ? இராமன் படத்தை வைத்து , அதற்கு பட்டாபிஷேகம் செய்திருக்கலாமே ?
பதவி வேண்டாம் என்று எல்லாவற்றையும் துறந்தவனின் பாதுகைகளை சக்கரவர்த்தி பட்டம் ! எல்லாம் துறந்தவனுக்கு, எல்லாம் கிடைக்கும். வேண்டும் வேண்டும் என்று மேலும் மேலும் ஆசைப் படுபவன் பிச்சைக்காரனாகவே இருப்பான். ஒன்றும் வேண்டாம் என்று மர உரி உடுத்து கானகம் போனவன் பாதுகைகளை மணி மகுடம்.
நான்காவது, அரசை யார் செலுத்துகிறார்கள் ? இராமனா ? அவன் தான் கானகம் போய் விட்டானே. பாதுகைகளா ? அவற்றிற்கு என்ன தெரியும் ? பரதனா ? அவன் இராமனின் பொறுப்பாளனாக இருக்கிறான். (representative ). பின் யார் தான் அரசை செலுத்துகிறார்கள் ?
யார் செலுத்துகிறார்கள் என்பதல்ல முக்கியம். அரசு என்பது ஒரு தனி மனிதன் செலுத்த வேண்டிய ஒன்று அல்ல. பாதுகை என்பது ஒரு அடையாளம். ஒரு சின்னம். தர்மம், அறம் , தர்மம் இவற்றின் வழியில் அரசு செலுத்தப் பட வேண்டும். பிரதம மாதிரி, முதல் மந்திரி என்பதெல்லாம் ஒரு குறியீடு. அவர்கள்தான் ஆட்சியை செலுத்த வேண்டும் என்றல்ல.
ஐந்தாவது, பரதனுக்கு தனி மனித சோகம் உண்டு. அண்ணனை பிரிந்த சோகம். இருந்தும் அது அரசை பாதிக்க விடாமல் . "செந் தனிக் கோல் முறை செலுத்தச்" என்பான் கம்பன். நமது சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து விட்டு கடமையை செய்ய வேண்டும்.
இந்தப் படலத்தின் மணிமகுடமான பாடல் இது.
காலம் கருதி சில பாடல்களை விட்டு விட்டேன். மூல தேடி பிடித்து , அவற்றையும் படியுங்கள்.
இதுவரை பொறுமையாக அனைத்து பாடல்களையும் படித்து வந்த உங்களுக்கு ஒரு ஒரு நன்றி.
உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி.
ReplyDeleteA big big THANKS that come from the bottom of my heart. Mruga bless you.
ReplyDeletesubramanian
இந்தப் பாடல்கள் என்ற செல்வக் குவியல் கொடுத்த உனக்கு மிக நன்றி.
ReplyDeleteReading this for the seventh time now. Thanks, thanks, and thank you.
ReplyDeleteஅற்புதம்
ReplyDelete