Pages

Wednesday, August 23, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மெய்யே, யான் அறியேன்

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - மெய்யே, யான் அறியேன் 


(முன்கதை சுருக்கத்திற்கு , இதற்கு முன்னால் உள்ள ப்ளாகுகளை வாசிக்கவும்).

மறையவன், என் மனைவியை கொன்ற வேடன் இவன் தான் என்று குற்றம் சுமத்தினான் . அரசன், அந்த வேடனைப் பார்த்து, "நீ என்ன சொல்கிறாய்" என்று கேட்டான்.

அதற்கு அவன், "ஐயா நான் கொல்லவும் இல்லை, கொன்றவரை காணவும் இல்லை, இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது " என்றான்.

பாடல்

ஐயே நானும் கொன்றவன் அல்லேன் கொன்றாரைக் 
கையேன் வேறும் கண்டிலன் என்றான் இவள் ஆகத்து 
எய்யேறு உண்ட வாறு என் என்றார் எதிர் நின்றார் 
மெய்யே ஐயா யான் அறியேன் இவ் விளைவு என்றான்.

பொருள்

ஐயே = ஐயனே

நானும் கொன்றவன் அல்லேன் = நான் கொல்லவில்லை

கொன்றாரைக் = யார் இவளைக் கொன்றார்களளோ

கையேன் = கீழ்மையான நான்

வேறும் கண்டிலன் = வேறு யாரையும் காணவும் இல்லை

என்றான் = என்றான்

இவள் ஆகத்து  = இவள் அகத்தில் (உடம்பில்)

எய்யேறு = எய்யப்பட்ட அம்பு

உண்ட வாறு = உள் நுழைந்தது

என் = எப்படி

என்றார் = என்று கேட்டார்

எதிர் நின்றார் = எதிரில் உள்ள அமைச்சர்கள்

மெய்யே ஐயா = உண்மையைச் சொல்கிறேன்

யான் அறியேன் = எனக்குத் தெரியாது

இவ் விளைவு என்றான் = இது எப்படி நடந்தது என்று .

கொன்றவன் இவன் என்று வேதியன் குற்றம் சுமத்துகிறான்.

நான் கொல்லவில்லை . கொன்றாரையும் காணவில்லை என்று வேடன் சொல்கிறான்.

அரசனும் , அமைச்சர்களும் விசாரித்து விட்டார்கள்.

வேறு எந்த சாட்சியும் இல்லை.

காட்டுக்குள் நடந்த சம்பவம்.

கொலை நடந்திருக்கிறது. யாரோ தானே செய்திருக்க வேண்டும் ? யார் செய்தது ?

கதையை எப்படி கொண்டு செல்கிறார்கள் என்று பாருங்கள்.


நமக்குத் தெரியும் வேடன் கொல்லவில்லை என்று.  ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள்  அவனை குற்றவாளியாக்குகிறது.  வேறு எந்த சாட்சியும் இல்லை.

மன்னன் என்ன செய்யப் போகிறான் என்று நமக்கு ஒரே ஆவலாக இருக்கிறது.

ஒரு வேளை வேடனுக்கு தண்டனை கொடுத்து விடுவானோ ?  அப்படியே கொடுத்தாலும், அரசன் மேல் குறை சொல்ல முடியாது.

சரி, வேடன் செய்யவில்லை என்று அவனை விட்டு விட்டால், பின் கொலை யார் தான் செய்தது ? வேதியனுக்கு என்ன பதில் சொல்வது ?

தான் நிரபராதி என்று நிரூபிக்க வேடனுக்கு  வேறு வழி ஒன்றும் இல்லை

ஒரு அப்பாவி சிக்கிக் கொண்டானே என்று நம் மனம் பதறுகிறது. அவன் மேல் பச்சாதாபப் படுகிறது.

மனைவியை இழந்து, கை குழந்தையோடு  நிற்கும் வேதியன் மேலும் பரிதாபம் வருகிறது.

மன்னன் தவறு செய்து விடக் கூடாதே என்று தவிப்பும் இருக்கிறது.

கதை ஒரு புள்ளியில் நிற்கிறது.  கொஞ்சம் அசந்தாலும் பிரண்டு விடும்.

எப்படி மேலே கதையைக் கொண்டு செல்வது ?

http://interestingtamilpoems.blogspot.in/2017/08/blog-post_23.html



No comments:

Post a Comment