கம்பன் சொல்லாத இராமாயணம் - புலவியினும் வணங்காத
ஒரு படைப்பு என்பது படைப்பாளியோடு முடிந்து போவது அல்ல. அதை இரசிக்கும் இரசிகனும் அந்த படைப்பில் ஈடு படுகிறான். அவன் அனுபவமும், அவனின் ஈடுபாடும் சேர்ந்துதான் ஒரு படைப்பை முழுமை செய்கிறது.
ஒரு கதையோ, காவியமோ, பாடலோ, படைப்பாளியோடு நின்றுவிட்டால், அதில் சுவாரசியம் இல்லை. அப்படி இருந்தால் அது ஒரு அறிவியல் கோட்பாடு, கணித சமன்பாடு போல ஆகி விடும். வாசிப்பவனின் மூளைக்கு வேலை இல்லை. பித்தாகிரஸ் கோட்பாடு, நியூட்டனின் விதிகள் என்றால் அது தான். அதில் ஒன்றை கூட்டவோ குறைக்கவோ முடியாது.
இலக்கியம் என்பது அப்படி அல்ல.
படைப்பவனின் அறிவின் எல்லைக்கு தக்கவாறு அது விரிய வேண்டும். படிப்பவன் புது புது அர்த்தங்களை அதில் காண வேண்டும்.
படைப்பாளி ஒரு நோக்கில் தன் படைப்பை நகர்த்திக் கொண்டு சொல்லுவான். படைப்பின் அத்தனை நுணுக்கங்களையும் அதில் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. வாசகனின் அறிவுக்கும், அனுபவத்துக்கும் கொஞ்சம் இடம் தர வேண்டும். கவிஞன் சொல்லாமல் விட்டதை இரசிகன் இட்டு பூர்த்தி செய்யும் போது தானும் ஒரு படைப்பாளி என்ற இன்பத்தை இரசிகன் பெறுகிறான். எல்லாவற்றையும் ஒரு கவிஞனே செய்து விட்டால் , இரசிகனுக்கு வேலை இல்லை.
கம்ப இராமாயணத்தில் , காப்பிய போக்கில் , கம்பன் செல்லும் போது பல செய்திகளை சொல்லாமல் விட்டு விடுகிறான். நாம் சிந்தித்து அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கலாம்.
அது ஒரு சுவாரசியம்.
கணவன் மனைவிக்கு நடுவில் ஆயிரம் சண்டை சச்சரவு வரலாம். நீ சரியா , நான் சரியா என்ற கேள்வி நித்தம் எழுந்து கொண்டுதான் இருக்கும். யாரவது ஒருவர் விட்டு கொடுத்துதான் போக வேண்டும். இரண்டு பேரும் நான் சொல்வதுதான் சரி என்று முரண்டிக் கொண்டிருந்தால் , இல்லறம் சிறக்காது. முறிந்து போகும்.
சரி. யார் விட்டு கொடுப்பது ? எப்போது விட்டு கொடுப்பது ? எப்படி விட்டு கொடுப்பது ?
கம்பன் விடை சொல்கிறான். நேரடியாக சொல்லவில்லை. மறைமுகமாக சொல்கிறான். நாம் தான் அதை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.
கணவன்தான் விட்டு கொடுக்க வேண்டும் என்கிறான் கம்பன். மனைவிக்காக விட்டு கொடுக்காதவன் , அரக்கன் போன்றவன் என்பது கம்பனின் முடிவு. எவ்வளவு படித்து இருந்தாலும், எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், படுக்கை அறையில் மனைவியிடம் தான் பெரிய ஆள் என்று நினைக்காமல், அவளின் அன்புக்கு அடிபணிய வேண்டும். அவளின் ஆளுமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று கம்பன் கூறுகிறான்.
அங்கேயும் முறுக்கிக் கொண்டு இருப்பவன் , அரக்க குணம் கொண்டவன் என்கிறான்.
ஆண் நெகிழ வேண்டும். அன்பில் கரைய வேண்டும். அது அவனை பண்படுத்தி , அன்புள்ளவனாக, நல்லவனாக மாற்றும்.
இராவணன் பெரிய பலசாலி. படித்தவன். வேதம் அறிந்தவன். இசையில் சிறந்த ஞானம் உள்ளவன். வீரன். எல்லாம் தான். இருந்தும் அவன் மனம் ஏன் இன்னொருவன் மனைவி மேல் போனது ? அந்த செயல் தான் அவனது வீழ்ச்சிக்கு காரணமானது. இவ்வளவு தெரிந்த அவன் ஏன் அப்படிதவறு செய்தான் ?
மனைவியிடம் ஒரு போதும் பணிந்து போவதில்லை. அந்த முரட்டு குணம், அவனை முறித்துப் போட்டது.
பாடல்
புலியின் அதள் உடையானும், பொன்னாடை புனைந்தானும், பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு யாவர், இனி நாட்டல் ஆவார்?
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் தோள், சேயரிக் கண் வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ.
பொருள்
புலியின் அதள் உடையானும் = புலியின் தோலை உடுத்திய சிவனும்
பொன்னாடை புனைந்தானும் = பட்டு ஆடை அணிந்த திருமாலும்
பூவினானும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்
நலியும் வலத்தார் அல்லர் = இவனை நலிவு படுத்த முடியாது
தேவரின் இங்கு யாவர் = அவர்களாலேயே முடியாது என்றால் வேறு எந்த தேவர்களால்
இனி நாட்டல் ஆவார்? = இதை நடத்த முடியும்
மெலியும் இடை = நாளும் மெலிந்து கொண்டே இருக்கும் இடை
தடிக்கும் முலை = நாளும் பெரிதாகிக் கொண்டே இருக்கும் தனங்கள்
வேய் இளந் தோள் = மூங்கில் போன்ற இளமையான தோள்கள் ,
சேயரிக் கண் = சிவந்த கண்கள்
வென்றி மாதர் = பெண்கள்
வலிய நெடும் புலவியினும் = வலிமையான நீண்ட கூடலிலும்
வணங்காத = தலை வணங்காத
மகுட நிரை = மகுடங்கள் நிறைத்த
வயங்க = ஒளி வீசும்
மன்னோ.= மன்னவன்
மனைவியிடம் தனிமையில் இருக்கும் போதும் தலை வணங்கா தன்மையன். அந்த ஆணவம், அந்த இறுமாப்பு, அந்த வளைந்து கொடுக்காத தன்மை அவனை வீழ்த்தியது.
வள்ளியிடம் தனித்து இருக்கிறான் முருகன். அவள் மேல் காதல் பிறக்கிறது. பாவம், எனக்காக இவள் எவ்வளவு துன்பப் படுகிறாள் என்று கருணை பிறக்கிறது. அவளுடைய பாதங்களை மெல்ல வருடினானாம் முருகன்.
பாகு கனி மொழி, மாது குற மகள் , பாதம் வருடிய மணவாளா
என்பார் அருணகிரிநாதர்.
முருகன் பெரிய ஆளாக இருக்கலாம். மனைவியோடு இருக்கும் போது , அவளை தூக்கிப் பிடிக்க வேண்டும்.
அது தாம்பத்ய இரகசியம்.
இது , கம்பன் சொல்லாமல் சொன்ன பாடம்.
இப்படி நிறைய இருக்கிறது.
மேலும் பார்ப்போமா ?
இராவணன் புலவியிலும் வணங்காதவன் என்பது இந்தப் பாடலிலிருந்து வருகிறது. ஆனால் அதுதான் அவன் வீழ்ச்சிக்குக் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்?
ReplyDelete