திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க
பாடல்
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து
பொருள்
வலியார்முன் = தன்னை விட வலியார் முன்
தன்னை நினைக்க = தன்னை நினைத்துக் கொள்க
தான் = ஒருவன்
தன்னின் = தன்னை விட
மெலியார்மேல் = மெலியவர்களின் முன்
செல்லும் இடத்து = செல்லும் போது
எளிமையான குறள் .
தன்னை விட வலியவர்கள் முன் தான் எப்படி அஞ்சி ஒடுங்கி இருப்போம் என்று நினைத்துக் கொள்ள வேண்டும், எப்போது என்றால், தன்னை விட மெலியவர்கள் மேல் ஒருவன் செல்லும் போது .
சரி. அதனால் என்ன ? இதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது ?
சில உதாரணங்கள் பார்ப்போம்.
புலால் உணவு உண்ணலாமா ? இந்த விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. உண்ணலாம் என்று ஒரு பக்கமும், தவறு என்று இன்னொரு பக்கமும் வாதம் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு முடிவும் வந்தபாடில்லை.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
ஒரு கடை வீதி வழியாக செல்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாமிச கடைகள் இருக்கின்றன.
அங்கே, சிறு பிள்ளைகளின் தலையை வெட்டி விற்பதற்கு வைத்திருக்கிறார்கள். இன்னும் சில கடைகளில் ஆண் மற்றும் பெண்ணின் உடலை , தலை இல்லாத உடலை தோலை உரித்து விட்டு, கம்பியில் தொங்க விட்டிருக்கிறார்கள். கீழே , கிலோ இன்ன விலை என்று எழுதி இருக்கிறது.
நினைத்துப் பாருங்கள். அந்த ஒரு நிலை எப்படி இருக்கும் ?
அப்படி நடக்காது. மனிதர்களை கொல்வதை சட்டம் அனுமதிக்காது.
ஒரு வேளை வேற்று கிரகத்தில் இருந்து சில ஜீவராசிகள் வந்து, அவை நம்மை விட பலமடங்கு புத்திசாலியாகவும், பல சாலியாகவும் இருந்து , இந்த பூமியை அவர்கள் அடிமை படுத்தி ஆளுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு மனித கறி பிடித்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மனிதர்களை பிடித்து , தோல் உரித்து , வெட்டி சமைத்து உண்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.
அவர்களுக்குள் விவாதம் நடக்கலாம். மனித கறி தின்பது நல்லதா கெட்டதா என்று.
மனித கறியில் சில சத்துக்கள் இருக்கத்தானே வேண்டும். அவர்களுக்கு அது தேவையாக இருக்கிறது.
அவர்கள் மனிதரைகளை கொன்று தின்பது சரிதானா ?
அவர்கள் ஒரு நாள் நம்மை பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எந்த நேரமும் நம்மை வெட்டி சமைக்கலாம் என்ற நிலையில் நாம் இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்.
எப்படி இருக்கும் ?
அப்படி ஒரு நிலை இல்லை. நம்மை விட வலியவர்கள் இல்லை என்பதால் நாம் நம்மை விட வலிமை குறைந்த விலங்குகளை பாடாய் படுத்துகிறோம்.
அப்படி ஒரு வேற்று கிரக வாசிதான் இல்லையே . நாம் ஏன் பயப்பட வேண்டும் என்ற கேள்வி வரலாம் ?
அதனால் தான் வள்ளுவர் சொல்லுகிறார்
"வலியார்முன் தன்னை நினைக்க" என்று.
நினைத்துப் பாருங்கள். அது நடக்க வேண்டும் என்று இல்லை. மனதில் நினைத்துப் பாருங்கள். கற்பனை செய்து பாருங்கள்.
இப்போது மீண்டும் , புலால் உண்ணலாமா என்று வாதம் பண்ணுவதன் முன்னம், ஒரு நிமிடம் நீங்கள் ஒரு கம்பியில் கட்டி தொங்க விட்டிருப்பதாக "நினைத்து" பாருங்கள். பின் விவாதம் பண்ணுங்கள்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
காரில் சென்று கொண்டிருக்கிறோம். நிறுத்தத்தில் ஒரு பிச்சைக் காரன் பிச்சை கேட்கிறான். "வந்துருவானுக ...பிச்சை எடுக்கிறதுக்கு..." என்று எரிச்சலும், கோபமும் வருகிறது அல்லவா. அவன் நம்மை விட மெலிந்தவன். நாம் பிச்சை எடுக்க போக மாட்டோம். ஆனால், நமக்கும் ஒரு தேவை வரும். யார் வீட்டு வாசலிலாவது போய் நிற்க வேண்டி வரும். அவர்கள் நம்மை பார்த்து கோபமும் எரிச்சலும் பட்டு ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டால் நம் மனம் என்ன பாடு படும். எவ்வளவு வருந்துவோம்.
அதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அலுவலகத்தில் கீழே உள்ளவன் ஒரு தவறு செய்தால், சொன்ன வேலையை நேரத்தில் முடிக்கவில்லை என்றால் அவன் மீது கோபம் வருகிறது. வாய்க்கு வந்தபடி திட்டுகிறோம். அவனை இழிவு படுத்துகிறோம். அவமானப் படுத்துகிறோம். யோசிக்க வேண்டும். நம் மேலதிகாரி , நம்மை அப்படி செய்தால் நமக்கு எப்படி இருக்க வேண்டும்.
சில வீடுகளில், வேலைக்காரியை மனிதர்களாகவே மதிப்பதில்லை. நாம் அவ்வாறு நடத்தப்பட்டால் எப்படி நமக்கு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும்.
இது மனிதர்களுக்கு மட்டும் சொல்லப் பட்டது அல்ல.
சில வல்லரசுகள் , ஏனைய குட்டி நாடுகளை நசுக்குகின்றன. தன்னை விட பெரிய வல்லரசு வந்து தன்னை அப்படி நசுக்கினால் எப்படி இருக்கும் என்று "நினைத்துப்" பார்க வேண்டும்.
இப்படி நம்மை விட வலியவர்கள் மேல் நாம் எப்படி அஞ்சி ஒடுங்கி நிற்போம் என்று நினைத்துப் பார்த்தாலே, நம்மை விட மெலியவர்கள் மேல் அன்பும் அருளும் பிறக்கும்.
மெலியவர்கள் பிள்ளைகளாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், கீழே வேலை செய்யும் ஊழியராக இருக்கலாம், வாயில்லா பிராணிகளாக இருக்கலாம், நம்மிடம் கடன் வாங்கி விட்டு திருப்பித் தர முடியாத சிக்கலில் இருக்கும் ஒருவனாக இருக்கலாம் ... சின்ன நாடாக இருக்கலாம்...எதுவாக அல்லது யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.
அவர்கள் மேல் அன்பும் அருளும் கொண்டு நடப்போம்.
குட்டி குறள் தானே. எளிமையான அர்த்தம் தானே...:)
http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_13.html
Wonderful. Thought provoking.
ReplyDelete