Pages

Thursday, February 1, 2018

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - வைதால் அன்ன வாளிகள்

இராமாயணம் - மாரீசன் அறிவுரை - வைதால் அன்ன வாளிகள் 


சீதையை சூழ்ச்சியால் கவர்வோம் என்ற இராவணனின் எண்ணத்தை மறுத்து மாரீசன் சில அறிவுரைகள் கூறுகிறான்.

"நான் சொல்வதை மீறி வேறு ஏதாவது செய்தால், உனக்கு தீ வினையும், பழியும் வந்து சேரும். இராமனின் பாணங்கள் உன் சந்ததியையே அழித்து விடும் " என்கிறான்.

பாடல்

'செய்தாயேனும், தீவினையோடும் 
     பழி அல்லால் 
எய்தாது, எய்தாது; எய்தின், இராமன், 
     உலகு ஈன்றான், 
வைதால் அன்ன வாளிகள் கொண்டு, 
     உன் வழியோடும் 
கொய்தான் அன்றே, கொற்றம் 
     முடித்து, உன் குழு எல்லாம்?

பொருள்


'செய்தாயேனும்,  = நான்தீ சொல்வதற்கு மாறாக நீ செய்தால்

வினையோடும் = வினையுடன்

பழி அல்லால் = பழியைத் தவிர

எய்தாது எய்தாது = வேறு கிடைக்காது ;

எய்தின் = ஒரு வேளை நீ சீதையை தூக்கிக் கொண்டு வந்து விட்டால்

இராமன் = இராமன்

உலகு ஈன்றான் = உலகைப் படைத்தவன்
,
வைதால் அன்ன = சாபம் போன்ற வாளிகள் (அம்புகள்)

கொண்டு = அவற்றின் மூலம்

உன் வழியோடும் = உன் சந்ததிகளோடு

கொய்தான் அன்றே   = கொய்து எடுத்து விடுவான்

கொற்றம் முடித்து = உன் அரசாட்சியை முடித்து

உன் குழு எல்லாம் = உன் குழு எல்லாம்


அவன் பழி பாவத்துக்கு அஞ்ச மாட்டான் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.அது என்ன பழி, பாவம் ?

பழி என்பது இந்த பிறவியில் நம்மை வருந்துவது.

பாவம் என்பது தொடர்ந்து மறு பிறப்பிலும் வருவது.

இராவணா, நீ செய்யப் போகும் காரியம்  "தீவினையோடும்
பழி " இரண்டையும் தரும் என்கிறான். தீவினையும் வரும், பழியும் வரும். என்பது பொருள்.

இராமனின் அம்புகள் உன்னையும், உன் அரசையும், உன் குலத்தையும் அழித்து விடும் என்று சொல்ல வந்த கம்பன் அதற்கு ஒரு உதாரணம் தேடுகிறான்.

"வைதால் அன்ன " . வைதல் என்றால் திட்டுதல். இங்கே சாபம் என்ற பொருளில் வருகிறது. முனிவர்களின் சாபம் எவ்வளவு கடுமையானதோ அவ்வளவு கடுமையானது இராமனின் அம்புகள். பற்றாமல் போகாது.

"கொய்தான் அன்றே " அன்றே கொய்து விட்டான். அது எப்படி , இனிமேல் தானே நடக்கப் போகிறது. கொய்தான் என்று இறந்த காலத்தில் சொல்லமுடியும் ?

கொய்வான் என்று அல்லவா சொல்ல வேண்டும்.

கொஞ்சம் இலக்கணம் படிப்போம்.

எதை எப்படி சொல்ல வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது.  இலக்கணம் இப்படித்தான் சொல்ல வேண்டும் சொல்கிறது. சில சமயம், இலக்கணத்தை மீறி, பொருளின் சுவை கருதி, சிலவற்றை சொல்வது உண்டு. பெரிய கவிஞர்கள் , ஞானிகள் அவ்வாறு சொல்லும் போது , அதற்கு வழு அமைதி என்று பெயர்.

வழு என்றால் குற்றம். அமைதி என்றால் , அந்த வழுவை ஏற்றுக் கொள்ளுவது.

திருவாசகத்தில் "மெய்யா, விமலா விடைப்பாகா " என்று மணிவாசகர் கூறுவார். விடை (எருது)யை மேய்ப்பவன் இடையன். யானையை செலுத்துபவன் பாகன் என்று அழைக்கப்படுவான். ஆனால் , மணிவாசகர், விடை பாகா  என்கிறார்.

அது வழு, அமைதி.

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து என்று சொல்லும் போது , அரையில் அசைத்து என்று சொல்ல வேண்டும்.  அரை என்றால் இடுப்பு. (உடம்பில் பாதியில் உள்ளது. அரை, பாதி). அரைக்கு அசைத்து என்று சொன்னது வழு அமைதி.

அது போல, கொய்தான் என்பது வழு அமைதி.

அது மட்டும் அல்ல. கொய்வான் என்று சொன்னால், கொய்வானா மாட்டானா என்ற சந்தேகம் வரலாம். கொய்தான் என்று இறந்த காலத்தில் கூறுவதால், அது ஏற்கனவே நடந்த மாதிரி அவ்வளவு உறுதியானது என்று பொருள்.

மாரீசன் சொல்கிறான், தவறான வழியில் சென்றால், அழியப் போவது நீ மட்டும் அல்ல, உன் குலமும் , முன் சந்ததியும், உன் அரசும், உன் நட்பும் உறவும் அழியும் என்கிறான்.

உனக்கு அழிவு இந்த பிறவியில் மட்டும் அல்ல, அடுத்து வரும் பிறவியிலும் தொடரும் என்கிறான்.

தவறு செய்பவன், அதன் விளைவு தனக்கு மட்டும் தான் வரும், வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பான். அது தவறு, தவறு செய்பவன் அந்த தவறின் மூலம் தன் பிள்ளைகள், மனைவி, பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லோருக்கும் துன்பத்தை வரவழைப்பான்.

இராவணன் வாழ்வில் அப்படியே நடந்தது. பிள்ளையை இழந்தான். உடன் பிறந்த சகோதர்களை இழந்தான். மாமன், மைத்துனனை இழந்தான். அரசை இழந்தான்.

என்னை யார் என்ன செய்ய முடியும் என்று இராவணன் நினைத்திருப்பான்.

அறம் தவறியதால் , இராவணனுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் நிலை  என்ன ஆகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

சொல்லித் தாருங்கள் , தெரியாதவர்களுக்கு. பிள்ளைகளுக்கு. நல்ல செய்தியை  நாலு பேருக்கு தெரியும்படி சொல்லுங்கள்.

குற்றங்கள் குறையும். நாடு அமைதியுறும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/02/blog-post.html

1 comment:

  1. அழகாக மனதில் பதியும்படி சொல்லி உள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete