இராமாயணம் - மாரீசன் அறிவுரை - அறம் நோனார் ஈண்டார்
சீதையை சூழ்ச்சியால் கவர வேண்டும் என்று கூறிய இராவணனுக்கு , மாரீசன் சில அறிவுரைகள் கூறுகிறான்.
ஒவ்வொருவனும் நினைக்கிறான்...தான் சிறந்தவன், பலசாலி, அறிவுள்ளவன், எந்த பிரச்சனை வந்தாலும் நான் சமாளித்துக் கொள்வேன் என்று.
இராவணன் பெரிய பலசாலி. அறிவுள்ளவன். பக்திமான். எல்லாம் தான். கம்பன் இராவணனை மிக உயர்வாகவே காட்டுகிறான்.
இப்பேற்பட்ட நான், ஒரு மானிட பெண் மேல் ஆசைப்பட்டது என்ன தவறு. நான் அவளை தூக்கி வந்து விட்டால், என்னை யார் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறான். அவன் பலம் அவனுக்கு அந்த ஆணவத்தைத் தந்தது.
மாரீசன் சொல்கிறான். அடேய் இராவணா , உன்னை விடவும் பலசாலிகள் இதற்கு முன்னால் இருந்திருக்கிறார்கள். நீ தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா ? அற வழியில் நில்லாதவர்கள் எவ்வளவோ பேர். அவர்கள் பேர் கூட வரலாற்றில் இல்லை. நீயும் அந்த வழியில் சென்று விடாதே என்று பதறுகிறான்.
இரணியனிடம் , பிரகலாதன் இதையே கூறினான். கேட்டார் யார் ?
"இறந்தவர்கள் இறந்தவர்களாக இருக்கட்டும். நீ அவர்கள் வழியில் செல்ல வேண்டாம். அந்தத் தவறை செய்தால் , நீ தப்பும் வழி இல்லை. உனக்கு முன் , உன்னை விட பெரிய பல சாலிகள் எவ்வளவோ பேர் இருந்தார்கள். அறத்தை பேணாதவர்கள் நிலைத்து நின்றவர் யாரும் இல்லை "
பாடல்
'மாண்டார், மாண்டார்; நீ இனி
மாள்வார் தொழில் செய்ய
வேண்டா, வேண்டா; செய்திடின்,
உய்வான் விதி உண்டோ?
ஆண்டார் ஆண்டார் எத்தனை
என்கேன்? அறம் நோனார்,
ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்?
எல்லாம் இலர் அன்றோ?
பொருள்
'மாண்டார், மாண்டார்; = இறந்தவர்கள்நீ இறந்தவர்கள்
இனி = இனி மேல்
மாள்வார் தொழில் = இறப்பவர்களின் தொழிலை
செய்ய வேண்டா, வேண்டா = செய்ய வேண்டாம், செய்ய வேண்டாம்
செய்திடின் = செய்தால்
உய்வான் = தப்பும்
விதி உண்டோ? = வழி இருக்கிறதா ?
ஆண்டார் ஆண்டார் எத்தனை = உனக்கு முன் ஆண்டவர்கள் எத்தனை பேர்
என்கேன்? = என்று கேட்கிறேன்
அறம் நோனார் = அறத்தை நோன்பாக கொள்ளாதவர்கள்
ஈண்டார்; ஈண்டு ஆர் = இங்கு யார், இங்கு யார்
நின்றவர்? = நிலைத்து நின்றவர்
எல்லாம் இலர் அன்றோ? = ஒருவரும் இல்லை அன்றோ ?
மாண்டார் , மாண்டார் : அதற்கு என்ன அர்த்தம். இறந்தவர்கள் இறந்தவர்கள் என்றால் என்ன அர்த்தம் ?
என்ன செய்தாலும், இந்த உடல் ஒரு நாள் மாளத்தான் போகிறது. இறப்பு என்பது உடம்புக்கு உண்டு. அற வழியில் நின்றாலும், நிற்கவிட்டாலும் உடல் இறந்தே தீரும்.
அற வழியில் நின்றால், உடல் இறக்கும். புகழ் இறக்காது . நிலைத்து வாழும். அற வழியில் நில்லாதார் உடல் இறக்கும் போது , அவர்கள் புகழும் இறந்து போகும். உடனே இல்லாவிட்டாலும், சிறிது காலத்தில் மறைந்து போகும்.
வாழ்தல் என்பதே புகழோடு வாழ்தல் என்று தான் பெரியவர்கள் கொள்வார்கள்.
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
இசை என்றால் புகழ். புகழ் இல்லாமால் வாழ்பவர்கள், வாழாதவர்களே என்கிறார் வள்ளுவர்.
அது ஒரு அர்த்தம்.
இன்னொரு அர்த்தம். பையனோ பெண்ணோ வீட்டில் பெரிய சுமையை தூக்க நினைக்கும் போது , அருகில் உள்ள பெற்றோர்கள் பதறுவார்கள்.
"பாத்து பாத்து ..மெல்லமா " என்று.
எதுக்கு இரண்டு தடவை சொல்ல வேண்டும். பதற்றம். ஒரு வேளை பிள்ளை அந்த சுமையை தூக்கி , அது கீழே விழுந்து பிள்ளைக்கு அடி கிடி பட்டுவிடுமோ என்ற பதற்றம்.
தவறு நடந்து விடக் கூடாதே என்ற பதற்றம், பயம்.
மாரீசனுக்குத் தெரிகிறது. இராவணன் செய்ய நினைப்பது தவறு என்று. மாண்டார், மாண்டார்....ஆண்டார், ஆண்டார் என்று சொன்னதையே திரும்பிச் சொல்லி தன் பதற்றத்தை காட்டுகிறான். செஞ்சு தொலைச்சுருவானோ என்ற பயத்தில்.
இராவணன் மேல் உள்ள பாசம், அவன் செய்ய நினைக்கும் செயலில் உள்ள பாவம் அவனை புலம்ப வைக்கிறது.
"மாள்வார் தொழில்" ..புகழ் அடைய விரும்பாதவர் செயல். மாள்தல் என்றால் புகழ் அழிதல்.
நிறைய பேர் நினைக்கிறார்கள். பாவம் செய்து விட்டால், ஏதாவது பிரயாச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று. தான தர்மம் செய்து, கோவிலுக்குப் போய் , புனித நீர் ஆடி பாவத்தை தொலைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.
அறத்தை கொன்றவர்களுக்கு அதில் இருந்து தப்பும் வழியே இல்லை என்கிறான் மாரீசன்.
"செய்திடின், உய்வான் விதி உண்டோ? " என்று கேட்கிறான்.
தவம் செய்து, தான தர்மம் செய்து பாவத்தை போக்கிக் கொள்ள முடியாது என்கிறான்.
"அறம் நோனார், ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்? "
அறத்தை, நோன்பு நோற்பது போல பக்தியோடு கடை பிடிக்க வேண்டும். ஏதோ , ஏனோ தானோ என்று கடை பிடிக்கக் கூடாது.
அறத்தை நோன்பாக நோற்கவில்லையென்றால் , புகழ் நிற்காது.
மாரீசன் இராவணனுக்குச் சொன்னதாக, கம்பர் நமக்குச் சொல்கிறார்.
கேட்போம்.
http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_2.html
அற வழியில் செல்லாவிட்டால் உள்ள அபாயத்தை அழுத்தம் திருத்தமாக மாரீசன் வாயிலாக கம்பர் எடுத்து உரைத்து விட்டார். சின்ன பாட்டு ஆழ்ந்த கருத்து. நீங்கள் சொல்லும் பாங்கு வேறு அதை ஒளிர செய்கிறது
ReplyDeleteஇந்தப் பாடலில், முக்கியமான சொற்களை இரண்டு முறை சொல்வது இனிமையாக இருக்கிறது. நன்றி.
ReplyDelete