நாலடியார் - பயனில் பொழுதாக் கழிப்பரே
படித்தவர்கள், அறிஞர்கள், பெரியவர்கள் இவர்களின் நட்பு கிடைப்பதே கடினம். அப்படியே கிடைத்தாலும் அந்த நட்பை சிறந்த வழியில் பயன் படுத்தாமல், "அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்கு நல்லா இருக்கும், அதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை " என்று தள்ளி வைத்து விட்டு, அருமையான காலத்தை வீணாக கழிப்பவர்கள் அறிவில்லாத மடையர்கள் என்று சொல்கிறது நாலடியார்.
பாடல்
பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.
பொருள்
பொன்னே கொடுத்தும் = பொன் (தங்கம்) கொடுத்தும்
புணர்தற் கரியாரைக் = புணர்தற்கு அரியாரை = கூட பழக முடியாதவர்களை
கொன்னே = ஒன்றும் கொடுக்காமல்
தலைக்கூடப் பெற்றிருந்தும் = ஒன்றாக இருக்க பெற்றாலும்
அன்னோ = ஐயோ
பயனில் = பயன் படாத
பொழுதாக் கழிப்பரே = பொழுதை கழிப்பார்கள்
நல்ல = நல்ல
நயமில் அறிவி னவர் = நன்மை இல்லாத அறிவற்றவர்கள்
பெரியவர்களின் நட்பு, செல்வத்தை விட உயர்ந்தது. பொன் கொடுத்தாலும் அந்த நட்பைப் பெற வேண்டும். சிலருக்கு அப்படி பட்ட வாய்ப்பு ஒரு செலவு இல்லாமலே கிடைத்திருக்கும். அதை சரியான படி பயன் படுத்தாமல் வீணாக பொழுதை கழிப்பார்கள் அறிவற்ற மூடர்கள்.
அறிவு இருக்கும். ஆனால் அது நன்மை தராத அறிவு. "நயமில் அறிவினவர்" என்கிறது நாலடியார்.
பணம் சேர்பதையே குறிக்கோளாக வைத்துக் கொள்ளக் கூடாது. சம்பாதித்த பணத்தை செல்வழித்தாவது உயர்ந்தவர்களின் நட்பைப் பெற வேண்டும். ஒரு வேளை அந்த மாதிரியான நட்பு எளிதில் கிடைத்தால், அதை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
பொழுதை வீணாக செல்வழிக்கக் கூடாது.
தேடுங்கள். நல்லவர்களை. படித்தவர்களை. அறிஞர்களை. சான்றோரை. அவர்கள் சொல்வதை கேட்டு நடங்கள். அது உங்களை மேலும் அறிவுள்ளவர்களாகச் செய்யும்.
http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_23.html
சரியாக சொன்னீர்கள். நன்றி
ReplyDelete