Pages

Saturday, March 24, 2018

திருக்குறள் - துன்பத்திற்கு துன்பம்

திருக்குறள் - துன்பத்திற்கு துன்பம் 


துன்பம் இல்லாத ஆள்  யார். பிரச்சனை இல்லாத வாழ்க்கை எது? எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை, ஒரு தடங்கல், ஒரு குறை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பணப் பிரச்சனை, மனப் பிரச்சனை, ஆரோக்கியம், அலுவலகம், பிள்ளைகள், உறவு, நட்பு, என்று எங்கோ ஒரு பிரச்சனை தலை தூக்கிக் கொண்டு தான் இருக்கிறது.

சிலர் துன்பம் வந்தால் துவண்டு விடுவார்கள். சிலர், எனக்கு ஏன் மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று அலுத்துக் கொள்வார்கள், சிலர் கொஞ்சம் போராடுவார்கள் அப்புறம் "இதற்கு மேல் நம்மால் முடியாது " என்று கையை உயர்த்தி விடுவார்கள்.

துன்பம் வந்தால் என்ன செய்வது ? எப்படித்தான் போராடுவது ?

வள்ளுவர் சொல்கிறார்

பாடல்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்

பொருள்

இடும்பைக்கு = துன்பத்திற்கு

இடும்பை படுப்பர் = துன்பம் தருவார்கள்

இடும்பைக்கு = துன்பத்துக்கு

இடும்பை படாஅ தவர் = துன்பப் படாதவர்கள்

7 வார்த்தையில், 4 வார்த்தை இடும்பை.

இதற்கு என்ன அர்த்தம்.

துன்பம் வந்தபோது அதைக் கண்டு துன்பப் படாதவர்கள், அந்த துன்பத்துக்கே  துன்பம் தருவார்கள்.


புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கே. என்னதான் சொல்ல வருகிறார் வள்ளுவர் ?

துன்பம் என்று வந்து விட்டால், "ஆஹா, துன்பமே வந்து விட்டாயா...உனக்காகத்தான் காத்துக் கொண்டு இருந்தேன். உன்னை என்ன செய்கிறேன் பார் " என்று  அந்த துன்பத்தை போட்டு துவட்டி எடுக்க வேண்டும்.

எப்படியெல்லாம் அந்த துன்பத்தை வருத்த முடியுமோ அப்படியெல்லாம் அதை வருத்த வேண்டும்.

சில உதாரணம் பார்ப்போம்.

பரீட்சை வருகிறது. அதை விட பெரிய துன்பம் என்ன இருக்க முடியும் மாணவர்களுக்கு ? அந்த துன்பத்தை எப்படி எதிர் கொள்வது ? "ஹேய் பரிட்சையே உன்னை என்ன செய்கிறேன் பார். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பது. ஒரு அடி . Tuition க்கு போவது. இன்னொரு  அடி. முந்தைய வருட வினாத் தாள்களை எடுத்து அவற்றை செய்து பார்ப்பது. மற்றுமொரு அடி. நண்பர்களோடு படித்தவற்றை விவாதிப்பது" என்று பல விதங்களில் அந்த துன்பத்துக்கு அடி கொடுப்பது. அந்த துன்பம், "ஐயோ இவன் கிட்ட வந்து மாட்டிக் கொண்டோமே " என்று அடிபட்டு ஓடி விடும்.

வேலை கிடைக்கவில்லை. "வேலையின்மையே , என்னிடமா உன் வேலையை காட்டுகிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார் என்று, வேலை தேடித் தரும் நிறுவனங்களில் (head hunting agency) எல்லாம் பதிவு செய்வது, தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் எல்லோரிடமும் சொல்லி வைப்பது, செய்தித் தாள், வார, மாத பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களுக்கு பதில் போடுவது, online  portal களில் பதிவு செய்வது " என்று முடிந்த வழிகளில் எல்லாம் அந்த வேலையின்மை என்று  துன்பத்தை வாட்டி வதைக்க வேண்டும். அப்போது அது துன்பப் பட்டு விடும்.

ஆரோக்கிய குறைவு. கணவன் மனைவி உறவில் விரிசல். அலுவலகத்தில் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை எது என்றாலும் இது தான் வழி.

துன்பத்தை கண்டு ஓட க் கூடாது. துன்பமே வா, உனக்காச்சு எனக்காச்சு என்று அந்த துன்பத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

அந்த போராட்டமே ஒரு விளையாட்டாகப் போய் விடும்.

பணம் இல்லையா. எத்தனை வழிகளில் பணம் புரட்ட முடியும் என்று யோசிக்க வேண்டும். அத்தனை வழியிலும் முயற்சி செய்ய வேண்டும்.

அந்த முயற்சியில் , துன்பம் மறந்து போகும். முடிவில் துன்பம் , துன்பப் பட்டு ஓடி விடும்.

துன்பத்தைக் கண்டு , பயந்து, ஒடுங்கி நின்றால் அது நம்மை மேலும் பயமுறுத்தும். நாம் அதை விட பெரிய உருவம் எடுத்தால், அது நம்மை கண்டு பயந்து ஓடி விடும்.

உங்கள் துன்பங்களை , அடித்து விரட்டுங்கள். அவை வலியால் , உங்கள் பக்கமே தலை வைத்து படுக்கக் கூட அஞ்சி ஓடி விடும்.

என்ன சரிதானே ?

 
http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_24.html

3 comments:

  1. இதுவரை அறியாத குறள், ஆனால் அருமையானது. நன்றி.

    ReplyDelete
  2. உண்மையே...

    ஆனால் மனம் தான் விரும்பிய வழியில் விரும்பிதை பெற்றுவிட நினைப்பதும் அது நிகழாததால் மனம் சோர்ந்து போவதுமே துன்பம்

    துன்பத்தை ஏற்க்க மறுப்பதும் மனித மனநிலை...

    அதுவே துன்பம் நம்மை விட்டு அகலாமல் நின்றுவிடுகிறது.

    ReplyDelete
  3. அருமையான விளக்கம். இப்படியொரு தெளிவான புரியும்படியான விளக்கத்தை எங்கேயும் கண்டதில்லை.

    ReplyDelete