Pages

Monday, March 26, 2018

திருக்குறள் - இடுக்கண் இடர்பாடு உடைத்து

திருக்குறள் - இடுக்கண் இடர்பாடு உடைத்து 


துன்பம் இல்லாமல் இருந்தால் நல்லது.

ஆனால், அப்படி ஒரு வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை. நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், ஏதோ நமக்கு மட்டும்தான் துன்பம்  வருகிறது.மற்றவர்கள் எல்லோரும் மிக மகழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று. அது தவறு. எல்லோருக்கும் ஏதோ ஒரு துன்பம் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் பார்க்கும் போது வேண்டுமானால் அவர்களுக்கு துன்பம் இல்லாமல் இருக்கலாம். முன்பு இருந்திருக்கலாம். இனி வரலாம். எனவே துன்பமே இல்லாத வாழ்க்கை என்பது இல்லவே இல்லை.

சரி, துன்பம் வருவதை தவிர்க்க முடியாது. வந்து விட்டால் என்ன செய்வது என்பதுதான் கேள்வி.

துவண்டு போகலாம். சலித்துக் கொள்ளலாம். அங்கலாய்க்கலாம். எல்லோரிடமும் சொல்லி கொஞ்சம் பரிதாபம் சேர்க்கலாம்.

இது எல்லாவற்றையும் விட இன்னொரு வழி சொல்கிறார் வள்ளுவர்.

துன்பத்திற்கே துன்பம் தரலாம்.

எப்படி ?

ஒரு பொதி மாடு இருக்கிறது. அதை வண்டியில் பூட்டி விடுகிறார்கள்.


வண்டியை இழுத்துக் கொண்டு போக வேண்டும். துன்பம் தான். பேசாமல் ஒரு இடத்தில் இருந்து வைக்கோலை தின்று கொண்டு, மரத்தடியில்  தூங்கிக் கொண்டிருந்தால் சுகம் தான்.

என்ன செய்வது ? வண்டியில் பூட்டி விட்டார்கள்.

ஐயோ, என்னை வண்டியில் பூட்டி விட்டார்களே, என்ன செய்வேன் என்று அந்த மாடு அழுது கொண்டு நிற்பதில்லை. அப்படியே நின்றாலும், யாரும் அதை விடப் போவது இல்லை. சாட்டையால் இரண்டு அடி கொடுத்து அதை நகர வைப்பார்கள்.

எனவே, அந்த மாடு , அந்த வண்டியை இழுத்துக் கொண்டு போகும்.

போகிற வழி எல்லாம், நல்ல இராஜ பாட்டை மாதிரி இருக்குமா ? சாலை சில இடங்களில்  வழ வழப்பாக இருக்கும். வண்டியை இழுப்பது எளிதாக இருக்கும். சில இடங்களில் குண்டும் குழியுமாக இருக்கும். இழுக்க சிரமப் பட வேண்டும். சில சமயம் சேறும் சகதியுமாக இருக்கும். சக்கரம் சிக்கிக் கொள்ளும்.

ஐயோ, சாலை இப்படி இருக்கிறதே என்று மாடு நின்று விடுவதில்லை. இழுத்துக் கொண்டு போகும்.

அப்படி போகும் போது பார்த்தால் தெரியும், அந்த வண்டி நிலை குலையும். இந்தப் பக்கம்  சரியும். அந்தப் பக்கம் சரியும். கட்டு நெகிழும். சக்கரம் தேயும்.

கடைசியில் கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடும்.

சேர்ந்தபின், அதை வண்டியில் இருந்து கழட்டி விடுவார்கள்.

எப்படி எருது தன் மேல் பூட்டப்பட்ட வண்டியை எல்லா இடங்களிலும் இழுத்துக் கொண்டு போய் , சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்கிறதோ, அது போல  துன்பம் வந்த காலத்து அதைக் கண்டு கலங்காமல் வினையாற்றுபவனை கண்டு துன்பமே துன்பப் பட்டு ஓடி விடும்.

பாடல்

மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற 
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.


பொருள்

மடுத்தவாய் = தடை ஏற்படும் இடங்களில்

எல்லாம்  = எல்லாம்

பகடன்னான்  = எருது போன்றவன்

உற்ற = தனக்கு ஏற்பட்ட

இடுக்கண் = துன்பம்

இடர்ப்பாடு உடைத்து = துன்பம் உடையது

துன்பத்தைக் கண்டு அஞ்சக் கூடாது. நாம் பாட்டுக்கு நம் வேலையை, கடமையை செய்து கொண்டே போக வேண்டும். அப்படிச் செய்தால், துன்பம் தானே விலகும்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_26.html

1 comment:

  1. "எருமை மாடு மேலே மழை பெய்த மாதிரி" என்று சொல்வது நினைவுக்கு வருகிறது! மழை பெய்தால் என்ன என்று போய்க்கொண்டே இருக்கவேண்டுமாம். நன்றி.

    ReplyDelete