Pages

Friday, October 26, 2018

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் கண் பாசம் வைத்தவன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் கண் பாசம் வைத்தவன் 


அன்பு, பாசம்...இதெல்லாம் மிக அற்புதமானவை. நம் மேல் எவ்வளவு பேர் அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் நம் மேல் அன்பு வைக்க நாம் என்ன சாதித்து விட்டோம். என்ன செய்து விட்டோம். ஒரு வேளை நம் மனைவி, கணவன், பிள்ளைகள் எல்லாம் நம் மேல் அன்பு வைப்பதற்கு வேண்டுமானால் ஒரு காரணம் நாம் கண்டு பிடிக்க முடியும்.

இறைவன் இந்த உயிர்கள் மேல் வைத்திருக்கும் அன்புக்கு எதை காரணமாக சொல்ல முடியும். அந்த அன்பை பெறுவதற்கு நாம் என்ன செய்து விட்டோம்.

"என்னத்த பெரிய அன்பு செய்து விட்டான் அந்த இறைவன். எவ்வளவோ துன்பப் படுகிறேன். பணம் பத்தவில்லை. உடல் நிலை சரியில்லை....வேலை முதுகை முறிக்கிறது ..." என்று நாம் ஆயிரம் சாக்குச் சொல்லலாம்.

அவை எல்லாம் நிஜமா ?

நமக்கு நல்லதே நடக்கவில்லையா ?

யோசித்துப் பாருங்கள். பெற்றோர், கணவன்/மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், நட்பு, செல்வம், ஆரோக்கியம், ஆயுள்...என்று எவ்வளவோ நல்லது நமக்கு கிடைத்து இருக்கிறது.

அதுவும் இல்லையா ...விடுங்கள்...இந்த இனிமையான பூமி, காலை நேரம், அவ்வப்போது பெய்யும் மழை, சுவையான காய் கறிகள், பழங்கள், மணம் வீசும் பூக்கள், மனம் வருடும் இசை,  உயிர் உரசும் குழந்தையின் , பேரக் குழந்தையின் ஸ்பரிசம், இப்படி ஆயிரம் ஆயிரம் இன்பங்கள் அள்ளித் தெளித்து இருக்கிறது இந்த உலகில்.  இவை எல்லாம் நாம் காசு போட்டு வாங்கியதில்லை. வாங்கவும் முடியாது.

இத்தனையும் அருள் கொடை.

உங்களை சுற்றிப் பாருங்கள். அவ்வளவு இன்பம் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் இறைவன் நம் மேல் கொண்ட பாசத்தினால் தந்த அருள் கொடை.


நம்மாழ்வார் சொல்கிறார்,

"வானில் உள்ளவர்களுக்கு எல்லாம் அந்த திருவேங்கடத்தானே தலைவன் அப்படின்னு நான் சொன்னால் அதில் அவனுக்கு என்ன பெருமை இருக்க முடியும் ? நான் அவன் பெருமையை பற்றிக் கூற. மிகவும் கடையவன் நான். சிறந்தது என்று சொல்லக் கூடியது என்று ஒன்றும் இல்லை என்னிடம். ஆனால், அந்த திருவேங்கடத்தான் என் மேல் போய் பாசம் வைத்திருக்கிறானே" என்று வியக்கிறார்.



பாடல்

ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,
நீச னென் நிறை வொன்றுமி லேன்,என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.

பொருள்


ஈசன் = தலைவன்

வானவர்க்கு = வானில் உள்ளவர்களுக்கு

கென்பனென் றால் = என்பன் என்றால். என்று நான் சொன்னால்

அது = அது

தேச மோ = பெருமையோ

திரு வேங்கடத் தானுக்கு? = திரு வேங்கட மலையில் உள்ளவனுக்கு ?

நீச னென் = தாழ்மையாவன்

நிறை வொன்றுமி லேன் = சிறப்பு என்று சொல்லக் கூடியது என்று ஒன்றும் இல்லாதவன்

என்கண் = என் மேல்

பாசம் வைத்த = பாசம் வைத்த

பரஞ்சுடர்ச் சோதிக்கே = உயர்ந்த ஜோதி வடிவானவனுக்கு

என் மேல் பாசம் வைத்து, எனக்கு என்னவெல்லாம் அவன் செய்து தந்திருக்கிறான். எனக்கு அவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இருந்தும் என் மேல் பாசம் வைத்திருக்கிறானே என்று எண்ணி எண்ணி உருக்குகிறார்.


https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_26.html


2 comments: