Pages

Friday, October 26, 2018

கம்ப இராமாயணம் - இராமனின் அழகு

கம்ப இராமாயணம் - இராமனின் அழகு 


பெண்ணின் அழகை எளிதாக வர்ணித்து விடலாம். பெண் அழகின் வடிவம். ஓர் ஆண் மகனின் அழகை வர்ணிப்பது சற்று கடினமான செயல்தான்.

ஆனால், கம்பனுக்கு இராமனை வர்ணிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஏதோ தான் பெற்ற பிள்ளையை வர்ணிப்பது மாதிரி அனுபவித்து எழுதுவான்.

வைணவர்கள் சொல்லும் போதே, "ஆண்டவனை அனுபவித்தார்கள்" என்றே கூறுவார்கள்.

இராமன் அலங்காரம் செய்து கொண்டு திருமணத்திற்கு புறப்படுகிறான். அழகோ அழகு. அவனை வர்ணிக்க கம்பர் அன்றி யாரால் முடியும் ?

தேவர்களுக்கு , இமையவர்கள் என்று ஒரு பெயர் உண்டு. காரணம், அவர்கள் கண் இமைக்காது. இராமனின் அழகைப் பார்த்த மக்கள் எல்லோரும் தேவர்களாக மாறி விட்டார்களாம். அவர்கள் கண் அமைப்பது நின்று போனதால்.

பாடல்


அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக-
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே!

பொருள்


அமைவு அரு மேனியான் = அமைவதற்கு இல்லாத மேனியை உடையவன். இப்படி ஒரு மேனி அழகு யாருக்கும் அமையாது.

அழகின் ஆயதோ? = அந்த அழகினால் வந்ததோ ? அல்லது

கமை உறு மனத்தினால் = பொறுமையான மனத்தினால்

கருத வந்ததோ? = நினைத்ததால் வந்ததோ

சமைவு உற அறிந்திலம்; = சரியாகத் தெரியவில்லை

தக்கது ஆகுக = எது சரியோ, அதையே வைத்துக் கொள்ளலாம்

இமையவர் = இமைக்காத தேவர்கள்

ஆயினார் = ஆனார்கள்

இங்கு உளாருமே! = இங்கு உள்ள எல்லா மக்களும்.

மக்கள் ஏன் கண் அமைக்கவில்லை ?

ஒன்று இராமனின் அழகு காரணமாக இருக்கலாம். அல்லது அவனை பொறுமையாக அவன்  அழகை இரசிக்கும், அனுபவிக்கும் அந்த மக்களின் மனம் காரணமாக இருக்கலாம். எது எப்படியோ, எனக்குத் தெரியாது...எல்லோரும்  கண் இமைக்காத தேவர்களாகி விட்டார்கள் என்று கம்பர் முடிக்கிறார்.

கண் இமைப்பது என்பது இயல்பாக நிகழக் கூடிய ஒன்று. நாம் ஒன்றும் அதற்காக  வலிந்து வேலை  செய்ய வேண்டாம். அப்படி தானே நிகழும் ஒன்று கூட , இராமனின் அழகைப் பார்த்தவுடன் இமைப்பது மறந்து போனதாம்.

இலக்கியங்கள் , மனிதனின் கற்பனையின் எல்லைகளை விரிவாக்க வல்லவை. இலக்கியங்களை படிக்கும் போது மனம் விரியும். கற்பனை விரியும். அட, இப்படி கூட ஒன்றை சொல்லலாமா என்று வியப்பு மேலிடும்.

குறுகிக் கிடக்கும் மனம் விரிந்து படும்.

விரியாத மனதால் , எங்கும் விரிந்து கிடக்கும் அதை எப்படி புரிந்து கொள்ள முடியும்.

நல்ல இலக்கியங்களை தேடி படிக்க வேண்டும். மனம் சிறகடித்து விண்ணில் பறக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_74.html



2 comments:

  1. ராமனின் அழகில் லயித்து கண் இமையை கூட அசையாது மக்கள் இருப்பது பற்றிய விளக்கம் ரொம்ப ஒசத்தி.நன்றி!

    ReplyDelete
  2. பல மாதங்களுக்குப் பிறகு கம்ப ராமாயணத்துக்கு வந்ததற்கு நன்றி!

    ReplyDelete