திருக்குறள் - மறத்திற்கும் அஃதே துணை
பிள்ளைகளை அடித்து வளர்க்கலாமா? பிள்ளைகளை திட்டலாமா?
ஆசிரியர் மாணவர்களை தண்டிக்கலாமா?
கணவன் மனைவி உறவில் ஒருவர் தவறு செய்தால் மற்றொருவர் அதை தட்டிக் கேட்கலாமா?
இதெல்லாம் கூடாது என்று ஒரு சாரார் கூறி வருகின்றனர். மேலை நாடுகளில் பிள்ளைகளை அடிப்பதோ, திட்டுவதோ சட்டப்படி குற்றம் என்று ஆகி விட்டது. அந்த கலாச்சாரம் மெல்ல இங்கும் பரவி வருகிறது. ஆசிரியர் , மாணவனை அடித்ததாலோ, சுடு சொல் கூறினாலோ அவர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆகி விட்டது.
கோபமும், அதனால் வரும் கண்டிப்பும், சுடு சொல்லும், தவறா?
சில சமயம், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு வரலாம். ஒருவரை ஒருவர் கோபித்து பேசலாம் ..."ஏண்டா உனக்கு அறிவு இருக்கா..இப்படி சொல்கிறாயே/செய்கிறாயே" என்று கடிந்து சொல்லலாம்.
வள்ளுவர் என்ன சொல்லுகிறார் என்று கேட்போம்
பாடல்
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
பொருள்
அறத்திற்கே = அறத்திற்கே
அன்பு = அன்பு
சார்பு என்ப = சார்ந்தது என்று கூறுவார்
அறியார் = அறியாதவர்கள்
மறத்திற்கும் = மறத்திற்கும்
அஃதே துணை = அதுவே (அந்த அன்பே) துணை
அறத்திற்கு மட்டும் அல்ல, மறத்திற்கும் அந்த அன்பே துணையாக நிற்கிறது.
இது ஒரு சிக்கலான குறள். இதற்கு பலர் பலவிதமான அர்த்தங்கள் கூறி இருக்கிறார்கள்.
நான் என் நோக்கில் எது சரி என்று கூற விழைகிறேன். ஏற்றுக் கொள்வதும், புறம் தள்ளுவதும் உங்கள் பாடு.
மறம் என்றால் என்ன? தீமை, கொடுமை, கடுமை என்று பொருள் கொள்ளலாம். இதில் தீமை என்பதை விட்டு விடுவோம்.
கடுமை, கண்டிப்பு என்று பொருள் கொண்டால், அந்த கடுமை , கண்டிப்பு இவற்றிற்கும் அன்பே காரணம் என்று ஆகும்.
ஒரு பெற்றோர் பிள்ளையை திட்டுகிறார்கள்/அடிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அதற்கு காரணம் அவர்கள் அந்த பிள்ளை மேல் வைத்த அன்புதானே? என் பிள்ளை தவறான வழியில் போய் கெட்டு போய் விடக் கூடாதே, அவன் நல்லவனாக வல்லவனாக வர வேண்டுமே என்ற நல்ல எண்ணம் தானே அந்த கண்டிப்புக்கு பின்னால் இருப்பது? அவன் மேல் கொண்ட பாசம் தானே அந்த கோபத்துக்கு காரணம்.
அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் அருள் நினைத்தே அழும் குழவி அதுபோல இருந்தேனே என்பார் குலசேகர ஆழ்வார்
தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே
மறத்திற்கும் அன்பே காரணம்.
கையை அல்லது காலை வெட்டினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர் கூறினால், அது அவர் அந்த நோயாளி மேல் வைத்த அன்பின்றி வேறு என்ன. நோயாளியின் காலை வெட்டி அவர் என்ன சுகம் காணப் போகிறார். காலை வெட்டுதல் என்ற கொடுமையான செயலுக்கும் அன்பே காரணம்.
நண்பன் ஒருவன் புகை பிடித்து / தண்ணி அடித்து / எந்நேரம் பார்த்தாலும் whatsapp பார்த்து கெட்டுப் போகிறான் என்றால், அவனை கண்டித்து திருத்துவதும் அன்பின்பால் பட்டதே என்கிறார் வள்ளுவர்.
எனவே, அன்பு என்றால் எப்போதும் கண்ணே மணியே என்று கொஞ்சிக் கொண்டே இருப்பது மட்டும் அல்ல. கோபத்திற்கும் கண்டிப்புக்கும் அன்பே காரணம்.
எல்லா கோபத்துக்கும் அன்பு காரணமாக இருக்க முடியாது. ஆனால், அன்பினால் கோபமும் வெளிப்படலாம்.
இந்த விளக்கம் சரியாக இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா?
https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_27.html
குழந்தை வேறு, நண்பர் வேறு.
ReplyDeleteகுழந்தைக்கு நம்மை "அட, சும்மா போயிட்டு வாய்யா" என்று சொல்லும் திறனும் வலுவும் இல்லை. அந்தக் குழந்தையை அடிப்பது எவ்வளவு நல்ல நோக்கத்துடன் இருந்தாலும், அது தவறே. அடிக்காமலே குழந்தைகளை நல்லபடி வளர்க்க முடியும் என்று எத்தனையோ சமுதாயங்கள் நிரூபித்துவிட்டன.