Pages

Tuesday, March 26, 2019

கம்ப இராமாயணம் - வெய்யது ஓர் காரணம்

கம்ப இராமாயணம் - வெய்யது ஓர் காரணம் 


 கொடுமையான சூர்ப்பனகை இராகவன் இருக்கும் இடம் வந்தாள். இது ஒரு பெரிய விஷயம் என்று மெனக்கெட்டு கம்பன் ஒரு பாடல் எழுதுகிறான். காரணம் இல்லாமலா இருக்கும் ?

பாடல்

வெய்யது ஓர் காரணம் 
     உண்மை மேயினாள்,
வைகலும் தமியள் அவ் 
     வனத்து வைகுவாள், 
நொய்தின் இவ் உலகு எலாம் 
     நுழையும் நோன்மையாள்,- 
எய்தினள், இராகவன் 
     இருந்த சூழல்வாய்.

பொருள்


வெய்யது = கொடுமையான

ஓர் காரணம்  = ஒரு காரணம்

உண்மை மேயினாள் = உள்ளத்தில் கொண்டு சென்றாள்

வைகலும் = தினமும்

தமியள் = தனி ஆளாய்

அவ்  வனத்து = அந்த வனத்தில் , அந்த காட்டில்

வைகுவாள் = வாழ்வாள்

நொய்தின் = விரைவாக

இவ் உலகு எலாம் = இந்த உலகத்தின் அனைத்து இடங்களுக்கும்

நுழையும் நோன்மையாள்,-  = செல்லும் வலிமை பொருந்தியவன்

எய்தினள் = அடைந்தாள்

இராகவன் = இராமன்

இருந்த சூழல்வாய். = இருந்த இடத்துக்கு

வெய்யது - வெப்பம் நிறைந்தது, கொடுமையானது, சூடானது.

இராமன் காட்டுக்கு வருகிறான். மேல் உடை ஒன்றும் இல்லை. சூரியன் வெயில் அவன் மேல்   படுகிறது.  மேலாடை இல்லாமல் வெயிலில் போனால் எப்படி இருக்கும்.  கம்பன் பதறுகிறான். ஐயோ, இராமனுக்கு சுடுமே என்று.  கம்பனுக்கு  சூரியன் மேல் கோபம் வருகிறது.  சூரியனுக்கு ஆயிரம் பேர் இருக்கலாம்.  கம்பன், கோபத்தில், "வெய்யோன்" என்று சூரியனை சொல்லுகிறான்.

வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
     அழியா அழகு உடையான்.


இராமனின் மேனி ஒளியில், அந்த சூரியனின் ஒளி மழுங்கி விட்டதாம்.

வெய்யோன்.

"வெய்யது ஓர் காரணம்". அது என்ன காரணம்?

சூர்ப்பனகையின் கணவன் பெயர் வித்யுதசிவன். அவனை  இராவணன் கொன்று விட்டான். சூர்பனகைக்கு கோபம். இருக்காதா. எப்படியும் இந்த இராவணனை  பழி வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.


இங்கே ஒரு கணம் நிதானிப்போம்.

தங்கையின் கணவன் என்றும் பாராமல் அவனைக் கொன்றான் இராவணன்.

அண்ணன் என்றும் பாராமல் அவனை பழி வாங்க துடிக்கிறாள் சூர்ப்பனகை.

கோபம் - மன்னிக்காத குணம் - பழி வாங்கும் எண்ணம் - உறவுகளை மதிக்காத குணம்  ....இவை எல்லாம் தான் அரக்க குணம்.

அந்த அரக்க குணம் எப்படி அவர்கள் குலத்தையே அழித்தது என்று நமக்குத் தெரியும்.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி
இனம் எனும் ஏமப் புணையை சுடும்

என்பார் வள்ளுவர். சினம் என்பது அதைக் கொண்டவனை மட்டும் அல்ல, அவன் குடுமத்தை மட்டும் அல்ல, அவன் இனைத்தையே அழிக்கும் என்றார் வள்ளுவர்.

வள்ளுவன் வகுத்துத் தந்த அறத்தை உள்வாங்கி தன் காப்பியத்தில் சேர்கிறான் கம்பன்.

இராவணனின் சினம், சூர்ப்பனகையின் சினம் அரக்க குலத்தையே அழித்தது.

நமக்குள்ளும் அந்த அரக்க குணம் இருக்கலாம். கண்டு பிடித்து களைய வேண்டும்.

"உண்மை மேயினாள்" =  உள்ளத்தில் கொண்டு சென்றாள். தமிழில் உண்மை, வாய்மை,மெய்மை என்று மூன்று சொல் உண்டு. பார்க்க எல்லாம் ஒன்று போல் இருக்கும்.

மனிதன் மூன்று நிலைகளில் செயல்படுகிறான். மனம், மொழி, மெய் என்ற மூன்று  நிலைகளில் செயல்படுகிறான். மனோ, வாக்கு, காயம் என்பார்கள் வடமொழியில்.

மனம் (உள்ளம்) - உள்ளத்தில் இருந்து வருவது உண்மை
அது வாய் வழியாக வெளிப்படுவது வாய்மை
அதுவே செயல் வழியாக வெளிப்பதுவது மெய்மை

"உண்மை மேயினாள் " என்றால் உள்ளத்தில் கொண்டு சென்றாள் என்று அர்த்தம்.

ஒவ்வொரு வார்த்தையையும் கம்பன் தெரிந்து எடுத்துக் போடுகிறான்.

சூர்ப்பனகை ஏன் இப்படி ஒரு கொடிய அரக்கியாக ஆனாள்? என்றும் நாம் சிந்திக்கலாம்.

அது பற்றி மற்றொரு நாள் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_26.html

2 comments:

  1. உங்களுடைய பதிவை படிக்க படிக்க கம்பனின் கவித்திறனும் சொல்லாண்மையும் தெளிவாக புலப்படுகிறது.மிக இனிமையாக உள்ளது உங்கள் விளக்கம்.

    ReplyDelete
  2. ஏதோ தொடர்கதை படிப்பது போல இருக்கிறது இந்த BLOG .

    ReplyDelete