Pages

Tuesday, May 14, 2019

கம்ப இராமாயணம் - நீக்கினேன், அப் பழிப்படு பிறவி

கம்ப இராமாயணம் - நீக்கினேன், அப் பழிப்படு பிறவி 


தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பனகை இராமனிடம் வேண்டுகிறாள். இராமனோ, "நீயோ அரக்க கணம். நான் மானிட கணம். நம்முள் கணப் பொருத்தம் இல்லையே "  என்றான்.

அதற்கு சூர்ப்பனகை, சொல்லுகிறாள் ,

"செய்த பக்தியின் பலனை நான் அறியவில்லை. என் பேதைமை. இராவணன் தங்கை என்று நான் சொன்னது பிழை. பாம்பணையில் துயிலும் குற்றம் அற்றவனைப் போல உள்ளவனே, தேவர்களை தொழுது என் பழி கொண்ட அந்தப் பிறவியை நான் நீக்கி விட்டேன்"


பாடல்

'பராவ அருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் 
     பயத்தை ஓராது, 
"இராவணன் தங்கை" என்றது ஏழைமைப் 
     பாலது' என்னா, 
'அரா-அணை அமலன் அன்னாய்! 
     அறிவித்தேன் முன்னம்; தேவர்ப் 
பராவினின் நீங்கினேன், அப் 
     பழிபடு பிறவி' என்றாள்.

பொருள்



'பராவ  = பரவுதல், சொல்லுதல், இங்கு துதித்தல் என்ற பொருளில் வந்தது

அருஞ் = அரிய

சிரத்தை = சிரத்தையோடு

ஆரும் பத்தியின் = செய்யும் பக்தியின்


பயத்தை ஓராது,  = பலனை நினைக்காமல்

"இராவணன் தங்கை" என்றது = "இராவணனின் தங்கை" என்று நான் கூறியது

ஏழைமைப் பாலது' என்னா,  = என்னுடைய அறியாமையே ஆகும்

'அரா-அணை  = பாம்பு அணையில்

அமலன் = குற்றம் இல்லாதவனே (மலம் = குற்றம். அ + மலன் = குற்றம் இல்லாதவன்)

துயிலும் =துயிலும்

அன்னாய்!  = போன்றவனே (திருமால் போன்றவனே)

அறிவித்தேன் முன்னம்; = முன்னாடியே சொன்னேனே

தேவர்ப் = தேவர்களை

பராவினின் = வணங்கி, துதித்து

நீங்கினேன் = நீக்கினேன்

அப் பழிபடு பிறவி' என்றாள். = பழிக்கத்தக்க பிறவி என்றாள்

இராமாயணத்தில், எதிர் பார்க்காத இடத்தில், எதிர் பார்க்காத பாத்திரங்கள் சில சமயம்  மிக உயர்ந்த கருத்துக்களை சொல்வதை நாம் காணலாம்.

கூனி சில அறங்களை சொல்லி இருக்கிறாள்.

இங்கே சூர்ப்பனகை சொல்கிறாள்.

நிறைய பேர் பக்தி செய்வார்கள். அதனால் என்ன பலன்,பயன் என்று அவர்களுக்குத் தெரியாது.  ஏதோ கோவிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், என்று இருப்பார்கள். அதனால் என்ன பலன் என்று கேட்டால் ஒன்றும்  தெரியாது.

பலன் இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யலாமா ? அப்படி யார் செய்வார்கள்?

அப்படி செய்பவர்கள் அரக்கர்கள். செய்த பக்தியின் பலன் அறியாதவர்கள்.

சூர்ப்பனகை சொல்கிறாள்,

"சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது"

சாவி கொடுத்த பொம்மை மாதிரி செய்யாமல், செய்யும் காரியத்தின் பலா பலன்களை அறிந்து செய்ய வேண்டும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நீ அந்தணர் குலம் , நான் அரச குலம் என்றதற்கு பதில் சொல்லி விட்டாள்

நீ அரக்க குலம் நான் மனித குலம் என்பதற்கும் பதில் சொல்லி விட்டாள்.

அடுத்து இராமன் என்ன செய்யப் போகிறான் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_14.html

No comments:

Post a Comment