Pages

Wednesday, May 15, 2019

கம்ப இராமாயணம் - அன்னார் தருவரேல் கொள்வேன்

கம்ப இராமாயணம் - அன்னார் தருவரேல் கொள்வேன் 


தன்னை மணந்து கொள்ளும்படி சூர்ப்பனகை இராமனிடம் வேண்டுகிறாள்.

இராமன் ஏதேதோ சொல்லி தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். அவன் மறுத்துச் சொல்லும் ஒவ்வொன்றிற்கும் சூர்ப்பனகை சரியான பதில் தருகிறாள்.

இறுதியில் இராமன் சொல்கிறான்

"உனக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். ஒருவனோ உலகாளும் இராவணன். இன்னொருவனோ செல்வத்திற்கு அதிபதி குபேரன். இந்த இரண்டு பேரில் ஒருவர் வந்து உன்னை எனக்குத் தந்தால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன். இல்லை என்றால் வேறு இடம் பார்"

என்கிறான்.

இது இராம பக்தர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். இராமன் எப்படி இப்படிச் சொல்லலாம்? ஒருவேளை இராவணன் வந்து , "இந்தா என் தங்கையை ஏற்றுக் கொள்" என்று சொன்னால், இராமன் ஏற்றுக் கொள்வானா? அவன் சொன்ன சொல் தவறாதவனாயிற்றே ? இராவணனோ, குபேரனோ ஏன் சூர்பனகையை இராமனுக்கு கட்டி வைக்க மாட்டார்கள். சக்கரவர்த்தி திருமகன். நல்லவன்.

பாடல்

ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு 
     தலைவன், ஊங்கில் 
ஒருவனோ குபேரன், நின்னோடு 
     உடன்பிறந்தவர்கள்; அன்னார் 
தருவரேல், கொள்வென்; அன்றேல், 
     தமியை வேறு இடத்துச் சார; 
வெருவுவென்;-நங்கை!' என்றான்;மீட்டு 
     அவள் இனைய சொன்னாள்:

பொருள்


ஒருவனோ = உன் அண்ணன்களில் ஒருவனோ

உலகம் மூன்றிற்கு = மூன்று உலகிற்கும்

ஓங்கு ஒரு தலைவன், = சிறந்த ஒரு தலைவன்

ஊங்கில் = உன்னிப்பாக கவனித்தால்

ஒருவனோ  = மற்றொருவனோ

குபேரன் = குபேரன்

நின்னோடு = உன்னோடு

உடன்பிறந்தவர்கள் = உடன் பிறந்தவர்கள்

அன்னார்  = அவர்கள்

தருவரேல் = உன்னை எனக்குத் தந்தால்

கொள்வென் = ஏற்றுக் கொள்வேன்

அன்றேல்,  = இல்லை என்றால்

தமியை = பெண்ணே

வேறு இடத்துச் = வேறு இடத்தில்

சார;  = சேர

வெருவுவென் = நான் அஞ்சுவேன்

நங்கை!' = நல்ல பெண்ணே

என்றான்; = என்றான்

மீட்டு = மீண்டும்

அவள் = சூர்ப்பனகை

இனைய சொன்னாள்:= இதைச் சொன்னாள்


"நீயாக தனியா வந்து என்னை கல்யாணம் பண்ணிக் கொள் என்றால் என்னால் அது முடியாது. உன் அண்ணன்கள் வந்து உன்னை தாரை வார்த்துக் கொடுத்தால்  ஏற்றுக் கொள்வேன் "

என்று வெளிப்படையாக சொல்கிறான். 

அப்படி சொன்னது சரியா ?

இராமனுக்கு அபப்டி ஒரு எண்ணம் இருந்ததா ?

இருந்தால் தவறு ஒன்றும் இல்லை. முறைப்படி பெண் கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறேன்  என்கிறான். அவள், அரக்கி என்று தெரிந்த பின்னும். 

"இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தியாலும் தொடேன் என்ற செவ்வரம்" கொஞ்சம் பழுது படும். இருந்தாலும், தவறு ஒன்றும் இல்லை. இராமனின் தந்தை தயரதன் அறுபதினாயிரம் மனைவிகளை கொண்டவன். இராமன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால் பெரிய தவறு ஒன்றும் இல்லை. 

அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றால், இராமன் அப்படி சொல்லி இருக்கலாமா?

கேள்வியை இராம பக்தர்களிடம் விட்டு விடுகிறேன்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/05/blog-post_15.html


2 comments:

  1. அவதார ரகசியத்தை மனதில் கொண்டு அதை கைகூட சூர்ப்பனகையை சீண்டி விட்டு அவமானப்படுத்தி ராவணனிடம் அனுப்பி வைப்பதத்திற்காக ராமன் செய்து இருப்பாரோ என எண்ண கம்பர் காவியத்தில் இடமில்லை. இருந்தும் மாறுபட்ட நிலையை ஏன் மேற் கொள்ளுகிறான் ராமன் என புலப்படவில்லை. விளையாடும் ஸ்வபாவமும் அவனிடம் இல்லை. நீங்கள் தான் விளக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ஆசையால் மதியிழந்து போயிருக்கும் அவளிடம் மறுப்பதைவிட அவள் அண்ணன்களை அழைத்து ந்ல்ல விதமாய் புத்தி சொல்லி அனுப்பிவைக்கும் எண்ணமாய் இருக்கலாம்.

    ReplyDelete