திருக்குறள் - பணத்தை எப்படி செலவழிக்கலாம் ?
நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எப்படி எல்லாம் செலவழிக்கலாம்?
நமக்கு வேண்டிய பொருள்கள் வாங்கலாம். பெரிய டிவி, பெரிய கார், ஒரு வீடு, நகை, கொஞ்சம் நிலம், என்று ஏதாவது வாங்கிப் போடலாம்.
பொருள்கள் நிறையவே இருக்கிறது என்றால், அனுபவங்களை வாங்கலாம். அயல்நாடுகளுக்கு ஊர் சுற்றப் போகலாம், வீட்டுக்கு இன்னும் ஒரு வேலை ஆளை வைக்கலாம், புது புது உணவு வகைகளை உண்டு மகிழலாம், இப்படி அனுபவங்களை சேகரிக்கலாம்.
இரண்டும் வேண்டாம் என்றால், பேசாமல் வங்கியிலோ, அல்லது shares, mutual பியூன்ட்ஸ், என்று பிற்காலத் தேவைகளுக்கு சேமித்து வைக்கலாம்.
அவ்வளவுதானே செய்ய முடியும்.
இவற்றை எல்லாம் விடுத்து, வள்ளுவர் ஒரு வழி சொல்கிறார். மிக மிக இன்பம் தரக் கூடிய வழியில் உங்கள் பணத்தை செலவிட ஒரு வழி சொல்கிறார்.
கொஞ்சம் தானம் செய்து பாருங்கள். அதில் வரும் இன்பம் அளப்பரியது என்கிறார் வள்ளுவர்.
தானம் செய்து நமக்கு பழக்கம் இல்லை. எனவே, அதில் உள்ள இன்பம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
"ஆமா, இதெல்லாம் ஒரு அறிவுரையா ? நமக்கே பணம் பத்தவில்லை. இதில் எங்கிருந்து தானம் செய்வது. தனக்கு மீறியதுதான் தானம் என்று சொல்லுவார்கள். இதெல்லாம் கேக்க நல்லா இருக்கும். நடை முறையில் சாத்தியம் இல்லை "
என்று நாம் நினைக்கலாம்.
நம்மிடம் பணம் இல்லை அல்லது போதாது என்று நினைக்கும் நாமே எவ்வளவு வெட்டி செலவு செய்கிறோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு ஒரு புதுத் துணி, அவளின் பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகம், வீட்டில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் போது பசித்தவர்களுக்கு அன்ன தானம், யாருக்கோ மருத்துவ செலவுக்கு முடிந்த அளவு நன்கொடை, அனாதை ஆசிரமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு வேளை வயிறார உணவு ....
இப்படி எவ்வளவோ செய்யலாம்.
ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் தானம் செய்தாலே போதும், உலகில் எவ்வளவு துன்பங்கள் மறைந்து விடும்.
நாம் தானம் செய்வதைப் பார்த்து, நம் பிள்ளைகள் படிக்கும்.
முன்பெல்லாம், வங்கி , stock exchange இதெல்லாம் கிடையாது. பணத்தை பெட்டியில் , குடத்தில் போட்டு புதைத்து வைப்பார்கள். வயதான காலத்தில் நினைவு தவறி விடும். வைத்த இடம் மறந்து போகும். சேமித்த பணம் எல்லாம் யாருக்கும் பயன் படாமல் போய் விடும்.
இப்போது தான் நிறைய வசதி வந்து விட்டதே. நாமினேஷன் வசதி எல்லாம் இருக்கிறதே என்று சொல்லலாம்.
ஆனால், பங்கு சந்தையில் போட்ட பணம் நட்டத்தில் முடியலாம். வீட்டில் போட்ட பணம் , சில சமயம் நட்டத்தில் முடியலாம். யார் கண்டது ?
எனவே, இருக்கிற போதே கொஞ்சம் தானம் செய்யுங்கள்.
அதில் மிகப் பெரிய இன்பம் இருக்கிறது.
பாடல்
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்
பொருள்
ஈத்துவக்கும் = ஈந்து உவக்கும். கொடுப்பதினால் வரும் சந்தோஷம்.
இன்பம் = இன்பம்
அறியார்கொல் = அறிய மாட்டார்களா ?
தாம்உடைமை = தங்களுடைய சொத்தை
வைத்து = யாருக்கும் கொடுக்காமல் தாங்களே வைத்துக் கொண்டு
இழக்கும் = பின் அவற்றை இழக்கும்
வன்க ணவர் = கொடியவர்கள்
யாருக்கும் தராமல், தானே அனுபவிப்பர்களை கொடியவர்கள் என்கிறார் வள்ளுவர்.
எவ்வளவு கஷ்டப் பட்டு ஏழு வார்த்தையில் வள்ளுவர் சொன்னதை, இரண்டே வார்த்தையில் கிழவி சொல்லி விட்டுப் போய் விட்டாள்.
ஈவது விலக்கேல்
என்று.
தானம் செய்வதை விட்டு விடாதே என்றாள். விடாமல் செய்து கொண்டே இரு.
அறம் செய்ய விரும்பு
என்று அதற்கு முன்னால் சொன்னாள். விருப்பம் வந்தால், அதை திருப்பி திருப்பி செய்வோம் அல்லவா.
சரி, தானம் கொடுப்பது என்றால் எவ்வளவு கொடுப்பது? பத்து பைசா பிச்சை காரனுக்கு போட்டால் போதுமா ? மிஞ்சிப் போன பழைய சாதத்தை வேலைக் காரிக்கு கொடுத்தால் போதுமா ?
எவ்வளவு தானம் செய்ய வேண்டும் என்றும் சொல்லி வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள்.
என்னதான் சொல்லவில்லை.
எவ்வளவு தானம் செய்ய வேண்டும் தெரியுமா ?......
https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_10.html
அரிதரிது மானிடர் ஆதல் அரிது - ஔவையார்.
ReplyDeleteபிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு - வள்ளுவம்.
இவ்விரண்டும் முரணல்லவோ.
அடியேனுக்கு சரியான விளக்கம் கொடுக்க முடியுமா ?
பிறவிப்பயன் தான் என்ன ?
email: srfmetals@gmail.com
9840302270-Prakash Ramanujam - Chennai
அருமையான பதிவு. வேறு விளக்கம் தேவை இல்லை!..
ReplyDeleteசில பதிவுகளை படிக்க தவறி விட்டேன்.ஓரிரு நாட்களில் படித்து முடிப்பேன்
இன்னும் தமிழ் உண்டென்றால் அது இணையத்தில் தான் என்பதை இது போன்ற பதிவுகள் நிரூபிக்கின்றன. வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎவ்வளவு தானம் செய்ய வேண்டும்???சொல்லுங்கள் ஐயா!
ReplyDelete1% of our income will suffice
Delete