கம்ப இராமாயணம் - பாவியேனையும் பார்க்கும் கொலோ?
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டிய சூர்ப்பனகையின் வேண்டுகோளை நிராகரித்து விட்டு, இராமன் பர்ணசாலைக்குள் சீதையோடு போய் விட்டான்.
வெளியே நின்ற சூர்ப்பனகை புலம்புகிறாள்.
"நீல மலரோ, மீனோ என்று சொல்லும் படி இருக்கும் சீதை , இலக்குமி போல இருக்கிறாள். அவளைப் பார்த்த இராமனின் கண்கள் என்னையும் பார்க்குமா" என்று ஏங்குகிறாள். காதலில், காமத்தில், அவளின் உயிர் ஓய்கிறது, ஆனாலும் ஆசை ஓயவில்லை என்கிறான் கம்பன்.
பாடல்
‘காவியோ கயலோ எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள்;
பாவியேனையும் பார்க்கும் கொலோ? ‘எனும்
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள்.
பொருள்
‘காவியோ = நீல மலரோ
கயலோ = மீனோ
எனும் = என்று எண்ணும்படி இருக்கும்
கண் இணைத் = இரண்டு கண்கள் கொண்ட
தேவியோ = இராமனின் தேவியான சீதையோ
திருமங்கையின் = திருமகளைவிட
செவ்வியாள்; = சிறந்தவளாக இருக்கிறாள்
பாவியேனையும் = பாவியாகிய என்னையும்
பார்க்கும் கொலோ? ‘எனும் = பார்ப்பானா என்று
ஆவி ஓயினும் = உயிர் ஓய்ந்தாலும்
ஆசையின் ஓய்வு இலாள். = ஆசை ஓய்வு இல்லாதவளான சூர்ப்பனகை
பாட்டு என்னவோ, மேலோட்டமாக பார்த்தால், சாதாரணமாகத்தான் தெரியும்.
தான் பெரிய ஆள், மன்மதனும், மும்மூர்த்திகளும், தேவர்களும் என்னை அடைய தவம் கிடக்கிறார்கள் என்று தற்பெருமை பேசிய சூர்ப்பனகை, தான் பெரிய ஆள் இல்லை என்று உணர்கிறாள். காதல் என்று வந்து விட்டால், இந்த ஆணவம் போய் விடுகிறது. யாரை காதலிக்கிறோமோ, அவர்களே உலகம் என்று ஆகிப் போகிறது. நீ இல்லாமல் என் வாழ்வு பூரணமாகாது என்ற நிலைக்கு காதலர்கள் வந்து விடுகிறார்கள். நீ இல்லாமல் எனக்கு சந்தோஷம் இல்லை என்பது எதை காட்டுகிறது என்றால், நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. நீ இருந்தால் தான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும் என்று காதலிப்பவருக்கு அனைத்து முக்கியத்துவமும் போகிறது. தன்னைத் தானே தாழ்த்தி, காதலிப்பவரை வானளாவ உயர்த்திப் பிடிப்பது காதல்.
தற்பெருமை பேசிய சூர்ப்பனகை "பாவியேனையும் பார்க்கும் கொலோ?" என்று தன்னை ஒன்றும் இல்லாதவளாக உணரத் தலைப் படுகிறாள்.
எவ்வளவு பெரிய ஆணவக் காரனையும், காதல் நாய் குட்டிப் போல மென்மை படுத்தி விடுகிறது.
தெரியாமலா சொன்னான் பாரதி "ஆதலினால் காதல் செய்வீர்" என்று.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
அது என்ன "ஆவி ஓயினும் ".
ஆவி எப்படி ஓயும்? ஆவி என்ன ஓடி ஆடி வேலை செய்கிறதா, களைப்பு அடைய?
உடல் ஓயும். நமக்குத் தெரியும்.
உள்ளம் ஓயும். அதுவும் நமக்குத் தெரியும்.
உயிர் ஓயுமா?
ஓயும். அது நமக்குத் தெரிவதில்லை.
"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் " என்பார் மணிவாசகர். இளைத்தது யார்? உடலா? உள்ளமா ? இல்லை, இந்த உயிர் ஒவ்வொரு பிறவியாக எடுத்து களைத்து, சலித்துப், இளைத்துப் போய் விடுகிறது.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
உயிரும் இளைக்கும்.
பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன் யானும்; உன்றன்
பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே!
பிறந்து அலுத்தேன் நான் என்பார் பட்டினத்தார். உயிரும் அலுக்கும்.
உடலையும், உள்ளத்தையும் தாண்டி உயிரைப் பற்றும் காதல்.
புலம்புவது சூர்ப்பனகை.
பக்திப் பாடல்களைப் பார்த்தால் தெரியும், பாடுபவர்கள், "நான் ஒரு பாவி, நான் ஒரு அறிவிலி, நான் ஒரு முட்டாள், ஆண்டவா என்னை காப்பாற்று" என்று தன்னைத் தாழ்த்தி இறைவனை போற்றுவார்கள்.
"நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயவான தத்துவனே "
என்பது திருவாசகம்.
"நம்மையும் ஒரு பெருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்து"
என்பதும் மணிவாசகம்.
சூர்ப்பனகை சொல்லுகிறாள், "இந்த பாவியை அவன் பார்ப்பானா" என்று.
சிந்திக்கலாம்தானே?
https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_12.html
இவ்வளவும் நடந்த பின்னும், இராமன் ஏன் சூர்ப்பனகையுடன் சொற்களால் விளையாடினான் என்பதற்கு ஒரு நல்ல விளக்கம் இல்லையா?
ReplyDelete