Pages

Thursday, July 4, 2019

கம்ப இராமாயணம் - மெய் வெயர்க்கும்

கம்ப இராமாயணம் - மெய் வெயர்க்கும் 


இலக்குவனால் மூக்கும், காதும், முலைக் கண்களும் அறுபட்ட சூர்ப்பனகை வலியில் , அவமானத்தில் துடிக்கிறாள்.

நேரில் பார்த்தது போல கம்பன் அவள் துயரத்தை பாட்டில் வடிக்கிறான்.

"துணியை எடுத்து இரத்தம் வழியும் தன் மூக்கில் ஒற்றி எடுப்பாள். கொல்லன் உலை தீ போல பெரு மூச்சு விடுவாள். ஐயோ, என்ன செய்வது என்று தெரியவில்லையே என்று கைகளால் தரையில் ஓங்கி அடிப்பாள். தன்னுடைய அறுபட்ட மார்பகங்களை கையால் ஏந்தி பார்த்து பதறுவாள். பயத்தில் உடல் எல்லாம் வியர்ப்பாள். என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடுவாள். பின், இரத்தம் வழிய தரையில் சோர்ந்து விழுவாள்"

என்கிறான் கம்பன்.

பாவங்களில் பெரிய பாவம் எது என்று பட்டியல் போட்ட பரிமேல் அழகர், பசுவின் மடியை அறுப்பது பெரிய பாவம் என்று குறிப்பிடுகிறார். பசுவின் மடியை அறுப்பது பெரும் பாவம் என்றால்....ஒரு பெண்ணின் மார்பை அறுப்பதோ?

பாடல்

ஒற்றும் மூக்கினை; உலை உறு
    தீ என உயிர்க்கும்;
எற்றும் கையினை நிலத்தினில்;
    இணைத் தடங் கொங்கை
பற்றும்; பார்க்கும்; மெய் வெயர்க்கும்;
    தன் பரு வலிக் காலால்
சுற்றும் ஓடும்; போய்ச் சோரி
    நீர் சொரிதரச் சோரும்.

பொருள்

ஒற்றும் மூக்கினை = மூக்கில் வழியும் இரத்தத்தை ஒத்தி எடுப்பாள். இரத்தம் நிற்காதா என்று

உலை உறு = கொல்லன் உலைக் களத்தில்

தீ என உயிர்க்கும்; = தீ போல மூச்சு விடுவாள்

எற்றும் கையினை நிலத்தினில் = கைகளை போட்டு நிலத்தில் அடிப்பாள். ஏன்? மார்பில் அடித்துக் கொள்ள முடியாதே

இணைத் = இணையான

தடங் = பெரிய

கொங்கை = மார்பகங்களை

பற்றும் =கையில் ஏந்திப்

பார்க்கும் = பார்ப்பாள்

மெய் வெயர்க்கும்; = உடல் வியர்ப்பாள்

தன் பரு வலிக் காலால் = தன்னுடைய பருத்த வலிய கால்களால்

சுற்றும் ஓடும் = சுற்றி சுற்றி ஓடுவாள்

போய்ச் = பின் ஓரிடத்தில் நின்று

சோரி  = இரத்தம்

நீர் சொரிதரச் = அருவி நீர் போல சொரிந்து விழா

சோரும். = சோர்ந்து விழுவாள்

அவலத்தின் உச்சம்.

இதுவா அவதார நோக்கம் ?

தவறு செய்தவன் இராவணன் என்றே வைத்துக் கொண்டாலும், தண்டனை அவன் தங்கைக்கா?

உலகியல் கண்ணோட்டத்தில், அன்று இருந்த அறம் சார்ந்த சட்ட திட்டங்கள் படி, இராவணன் இதுவரை தவறு ஒன்றும் செய்யவில்லை. மாற்றான் மனைவியை கவர்ந்து செல்லவில்லையே இன்னும். அவனே தவறு செய்யாத போது, அவன் தங்கைக்கு எதற்கு தண்டனை.

சூர்ப்பனகை தவறு செய்யவில்லை...செய்ய நினைத்தாள்.  அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா ?

இலக்குவன் குடும்பத்தில் யாருமே தவறு செய்யவில்லையா?

அரச நீதியை, மரபை மாற்றி குழி தோண்டி புதைக்கவில்லையா ? அப்படிச் செய்தார்களா இல்லையா என்று நாம் சந்தேகம் கொள்ள வேண்டாம். இலக்குவனே , தன் வாயாலேயே சொல்லி இருக்கிறான்.

அவர்களுக்கு இலக்குவன் தந்த தண்டனை என்ன?  அவர்களுக்கும் இதே தண்டனை தந்திருந்தால் , ஏதோ ஒரு ஞாயம் இருக்கிறது என்று சொல்லலாம்.

நினைத்துப் பாருங்கள் ஒரு நிமிடம்...அறுபட்ட முலையை கையில் ஏந்தி, அதில் இருந்து இரத்தம் வழிவதை பார்க்கும் ஒரு பெண்ணின் அவல நிலையை...


நெஞ்சம் பதறவில்லை ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_4.html



2 comments:

  1. ஆமாம், பதறுகிறது!

    ReplyDelete
  2. சூர்ப்பனகையின் மேல் பச்சாதாபம் வரும் வகையில் அழகாக எழுதுகிறீர்கள்.தவறு நடக்கும் வரையில் காத்திருக்க வேண்டுமா? நம்மை கொல்ல ஒரு அயோக்கியன் வரும்போது முன்கூட்டியே நாம் அவனை அடிப்பது குற்றமா? ராமனிடம் விடாது தர்க்கம் பண்ணி இருக்கிறாள்.அவன் உள்ளே சென்றவுடன் சீதையை அபகரிக்க செல்கிறாள்..அரக்கியின் எண்ணம் சரியாக இல்லையே.. லக்குமணன் அதை தடுக்க அவளை தண்டித்தான்.இவ்வளவு தண்டனை தேவையா என்பது வேண்டுமானால் பிரசினையாக இருக்கலாம்.
    அவதார நோக்கம். தசமுகனை கொல்ல வேண்டும்.அதற்கு ஏதுவாக இவள் மூக்கறுபட்டால் நேரே அவனிடம் ஓடுவாள்,அவன் சண்டைக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதால் தான் இந்த நடவடிக்கையோ?

    ReplyDelete