Pages

Friday, July 5, 2019

கம்ப இராமாயணம் - குருதிச் சேற்று வெள்ளத்துள் திரிபவள்

கம்ப இராமாயணம் - குருதிச்  சேற்று வெள்ளத்துள் திரிபவள்


இலக்குவனால் மூக்கும், காதும், முலைகளும் துண்டிக்கப்பட்ட சூர்ப்பனகையின் துன்பத்தை மேலும் கம்பன் விவரிக்கிறான்.

அவளால் ஒரு இடத்தில் நிற்கவோ உட்காரவோ முடியவில்லை. அங்கும் இங்கும் நடக்கிறாள். குதிக்கிறாள், வலி தாங்க முடியாமல். உடம்பில் இருந்து இரத்தம் ஊற்று போல் குபுக் குபுக் என்று வந்து கொண்டே இருக்கிறது. அப்படி வந்ததால் அந்த இடம் எல்லாம் சேறாகிப் போனது. அந்த இரத்தச் சேற்றில் அவள் நடக்கிறாள். வலி தாங்காமல் அரற்றுகிறாள். அவளின் அவல ஓலம், தேவர்களை நடுங்க வைத்தது. யமனும் அஞ்சினான் அவள் அலறல் கேட்டு. தன் குலத்தில் உள்ளவர்கள் பெயரை எல்லாம் ஒவ்வொன்றாக கூப்பிட்டு அலறுகிறாள்.....

பாடல்

ஊற்றும் மிக்க நீர் அருவியின் 
     ஒழுகிய குருதிச் 
சேற்று வெள்ளத்துள் திரிபவள், 
     தேவரும் இரிய, 
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் 
     பெயர் எலாம் கூறி, 
ஆற்றுகிற்கிலள்; பற்பல பன்னி 
     நின்று, அழைத்தாள்.

பொருள்

ஊற்றும் = கொட்டும்

மிக்க =மிகுந்த

நீர் அருவியின் = நீர் அருவி போல

ஒழுகிய = ஒழுகிய

குருதிச்  = இரத்த

சேற்று வெள்ளத்துள் = சேற்று வெள்ளத்தில்

திரிபவள்,  = நோக்கம் எதுவும் இன்றி அங்கும் இங்கும் அலைதல்

தேவரும் = தேவர்களும்

இரிய = பயந்து ஓட

கூற்றும் = யமனும்

உட்கும் = பயந்து தலை குனிந்து நிற்க

தன் குலத்தினோர் = தன்னுடைய குலத்தில் உள்ளோர்

பெயர் எலாம் கூறி,  = அனைத்து பெயர்களையும் கூறி

ஆற்றுகிற்கிலள்; = கூப்பிடுகிறாள்

பற்பல பன்னி  = மீண்டும் மீண்டும் பல செயல்களை செய்து

நின்று, அழைத்தாள். = நின்று அழைத்தாள்


"பற்பல பன்னி  நின்று, அழைத்தாள்" என்ற வரியில் வரும் "பன்னி " என்ற சொல், பன்னுதல் என்பதில் இருந்து வந்தது.

பன்னுதல் என்றால் மீண்டும் மீண்டும் சொல்லுதல், (செய்தல்) என்று பொருள்.

இராம, இலக்குவ, பரத , சத்துருகனர்கள் பிறந்த போது அனைவருக்கும் வசிட்டன் பெயரிட்டான்.

பரதனுக்கு மட்டும் "பரதன்" என்ற பெயரை பன்னினான் என்கிறான் கம்பன். மீண்டும் மீண்டும் சொன்னானாம் வசிட்டன்.

"பரதன் எனப் பெயர் பன்னினன் அன்றே." என்பான் கம்பன். பரதன் மேல் அவ்வளவு வாஞ்சை வசிட்டனுக்கு.

கரம் தலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரதம் மறைப் பொருள் மெய்ந் நெறி கண்ட
வரதன் உதித்திடும் மற்றைய ஒளியைப்
‘பரதன் ‘எனப் பெயர் பன்னினன் அன்றே.


அது ஒரு புறம் இருக்கட்டும்.

சில சமயம், காப்பியம் என்ன சொல்கிறது என்பதை விட காப்பியம் என்ன சொல்லாமல் விட்டது என்பதில் மிகுந்த சுவாரசியம் இருக்கும்.


இராமனும், சீதையும் இருந்த குடிசைக்கு பக்கத்தில் இருந்த சோலைக்கு சீதை சென்றாள். அவளை பின் தொடர்ந்து சூர்ப்பனகை சென்றாள். சூர்பனகையை  இலக்குவன் அங்கு வைத்துதான் மூக்கையும், காதையும், முலையையும்  வெட்டினான்.  அங்குதான் சூர்ப்பனகை அலறினாள். அவள் அலறிய அலறல் தேவ லோகம் வரை கேட்டது என்றான் கம்பன்.

உடனே நீங்கள் என்ன நினைப்பீர்கள் ? அருகில் தானே இராமன் இருந்தான். சந்தியா வந்தனத்தை  முடித்து விட்டு ஓடி வந்திருப்பான். என்னவோ பெரிய அலறல் கேட்கிறதே  என்று வந்திருப்பான். என்ன நடந்தது என்று விசாரித்திருப்பான்.

ஏதாவது சொல்லி இருப்பான்.

எங்கேயோ அடிபட்ட மாரீசனின் குரல் குடிசையில் இருக்கும் இலக்குவனுக்கும், சீதைக்கும் கேட்டது என்றால், அருகில் இருந்த சோலையில்  இருந்து வந்த சூர்ப்பனகையின் அலறல் இராமனுக்கு கேட்டிருக்காதா என்ன?

கேட்டிருக்கும் தானே.

இராமன் என்ன செய்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்? என்ன சொல்லி இருக்க வேண்டும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_5.html

4 comments:

  1. அழகான விளக்கம் .. எளிய நடை .. எடுத்துக்காட்டுகள் அற்புதம் ... கம்பன் இன்னும் சாகவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்

    ReplyDelete
  2. இராமன் தன் தவத்தில் அப்படி ஆழ்ந்திருந்தாலும், அப்புறமாவது இலக்குவனைக் கடிந்தானா? சூர்ப்பனகையிடம் மன்னிப்புக் கெட்டானா?

    இராமனும் சேர்ந்துதான் சூர்ப்பனகையைக் கிண்டி விட்டான்? அவன் தனக்காகவும் மன்னிப்புக் கேட்டானா?

    ReplyDelete
  3. அவதார நோக்கம் என்று சொல்லிவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

    ReplyDelete
  4. எனக்கு புலப்படவில்லை.அடுத்த பதிவில் உங்கள் விளக்கத்தை எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete