Pages

Thursday, August 29, 2019

கந்தரநுபூதி - ஆறாறையும் நீத்து

கந்தரநுபூதி - ஆறாறையும் நீத்து 


இந்த  உலகம் எப்படி வந்தது ? யார் இதைப் படைத்தது? உயிர்களை இறைவன் படைத்தானா? முக்தி என்றால் என்ன? ஏன் உயிர்கள் வினையில் சிக்கித்  தவிக்கின்றன?  இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?  உயிர்களைப் பற்றும் ஆணவம் , கன்மம், மாயை போன்ற மலங்கள் எப்படி உயிரைப் பற்றுகின்றன ?

ஒரு வினையில் இருந்து மற்றொரு வினை வருகிறது என்றால், முதல் வினை எங்கிருந்து வருகிறது?

இப்படி ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. இவற்றிற்கு எல்லாம் பதில் இருக்கிறதா என்றால் இருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் இருக்கிறது.

அந்த பதில்கள் சைவ சித்தாந்தின் 36 தத்துவங்களுக்குள் அடங்கி இருக்கிறது.

எப்படி கேள்வியை மடக்கி மடக்கி கேட்டாலும், அதில் பதில் இருக்கிறது.

It is a manum opus. Great frame work of philosophy.

அதை விளக்குவது அல்ல இந்த ப்ளாக்கின் நோக்கம்.

அருணகிரிநாதர் சொல்கிறார், இந்த 36 தத்துவங்களையும் தாண்டி நான் செல்ல எனக்கு வழி சொல்ல மாட்டாயா என்று முருகளை வேண்டுகிறார்.

பாடல்


ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே!

சீர் பிரித்தபின்

ஆறு ஆறையும்  நீத்து அதன் மேல் நிலையை 
பேறா அடியேன் பெறுமாறு உளதோ 
சீறா வரு சூர் சிதைவித்து இமையோர் 
கூறா உலகம் குளிர் வித்தவனே 

பொருள்

ஆறு ஆறையும்  = 6 x 6 = 36 தத்துவங்கள்

 நீத்து = தாண்டி

அதன் = அந்த தத்துவங்களின்

மேல் நிலையை  = மேல் நிலையை

பேறா அடியேன் = பெறாத அடியேன்

பெறுமாறு உளதோ  = பெறுவதற்கு ஒரு வழி உள்ளதா

சீறா = சீறி

வரு = வரும்

சூர் = சூரர்களின் உடலை, உலகை

சிதைவித்து = அழித்து

இமையோர்  = வானவர்கள்

கூறா = முறையிட்டு, வேண்டி வந்த

உலகம் = உலகம்

குளிர் வித்தவனே  = குளிர்வித்தவனே

"முருகா , நீ எவ்வளவு பெரிய ஆளு. சூரபத்மனை அழித்து, அவனது படைகள், உலகங்கள் அனைத்தையும் அழித்து, தேவர்களுக்கு அவர்கள் உலகை தந்தவன். அவ்வளவு பெரிய ஆள். நான் ஒரு சின்ன ஆள். எனக்கு அந்த தத்துவங்களை தாண்டி  உள்ள இடத்துக்கு கொண்டு போவது உனக்கு என்ன பெரிய  காரியமா ? உன்னால் முடியும். "

என்கிறார்.

ஆர்வம் உள்ளவர்கள் 36 தத்துவங்களை தேடி கண்டு கொள்வார்களாக !

ஒன்றைப் படிக்கும் போது, அதில் இருந்து வேறு எதை அறிந்து கொள்ளலாம் என்று தேட  வேண்டும். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_29.html

2 comments:

  1. மேலும் தெரிந்து கொள்ள ஆவலை நயமாக தூண்டி விடுகிறீர்கள்.எனக்கு தெரியாததை நினைத்தால் மலைப்பாக உள்ளது.நன்றி.

    ReplyDelete
  2. பல நாட்களுக்கப்புறம் விட்டுப்போன BLOG பாடல்களை படிக்க விழைந்துள்ளேன். இந்த 36 தத்துவங்கள் என்ன என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete