திருக்குறள் - பொறுமை - நிறையுடைமை
நல்ல பேர் எடுப்பது என்பது ஒன்று, எடுத்த பேரை தக்க வைத்துக் கொள்வது என்பது மற்றொன்று.
பேர் எடுப்பதைவிட அதை தக்கவைத்துக் கொள்வது கடினமான செயல்.
எல்லோருக்கும் கொஞ்சம் நல்ல பெயர் இருக்கும். அன்பானவர்/ள் , யாருக்கும் உடனே உதவி செய்பவர்/ள், திறமையானவர்/ள், பொறுப்பானவர்/ள் என்று ஏதோ ஒரு விதத்தில் நல்ல பேர் இருக்கும்.
அந்த நல்ல பேர் நிலைக்க வேண்டும் என்றால், பொறுமை என்ற குணத்தை எப்போதும் கடை பிடிக்க வேண்டும்.
நல்ல பேருக்கும் , பொறுமைக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கு.
ஏதோ ஒரு நொடியில், யாரோ ஒன்றை தவறாக சொன்னார்கள், அல்லது செய்தார்கள் என்றால், நிதானம் தவறி நாம் ஒன்றை செய்து விடக் கூடும், அல்லது வாய் தவறி வார்த்தை வந்து விடலாம். நாம் அப்படி பொறுமை இழந்து ஏதேனும் செய்தால், சொன்னால், அது, நாம் இதுவரை சேர்த்து வைத்த நல்ல பெயரை அழித்து விடும்.
"அவரா அப்படி சொன்னார்/செய்தார்? அவர் அப்படி செய்ய மாட்டாரே, நம்ப முடியலியே..." என்று உலகம் சொன்னாலும், அந்த ஒரு செய்கை, சொல் எப்போதும் நம் மீது ஒரு கறையாக இருந்து கொண்டே இருக்கும். ஒரு முறை தவறு நிகழ்ந்து விட்டால், பின் அதை மாற்றுவது கடினம்.
ஒரு முறைதான் இராமன் மறைந்து நின்று அம்பு எய்தான். யுகம் எத்தனை ஆனால் என்ன? அந்த கறை போகிறதா?
பாடல்
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்
பொருள்
நிறையுடைமை = நிறைந்த தன்மை, உயர்வான குணங்கள் நிறைந்து இருக்கும் தன்மை
நீங்காமை = ஒருவனை விட்டு நீங்காமல் இருக்கும்படி
வேண்டின் = விரும்பினால்
பொறையுடைமை = பொறுமையுடன் இருத்தல்
போற்றி = போற்றி, சிறப்பாக, உயர்வாக,
ஒழுகப் படும் = கடை பிடிக்க வேண்டும்
ஒழுகுதல் என்றால் விடாமல் கடை பிடித்தல் என்று பொருள். ஏதோ ஒரு சமயம் செய்தோம், இன்னொரு சமயம் விட்டு விட்டோம் என்று இருக்கக் கூடாது.
போன மாதம், ஆறாம் தேதி நான் பொறுமையாக இருந்தேன் என்று சொல்லிப் பயன் இல்லை. எப்போதும் பொறுமையை கடை பிடிக்க வேண்டும்.
அப்படி கடை பிடிக்காவிட்டால், நிறையுடைமை நீங்கி விடும்.
பொறுமை , நமது மற்ற நல்ல குணங்களை கட்டி சேர்த்து வைக்கும் அரண் போன்றது என்பது பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_16.html
very interesting way of writing..keep writing..siva siva
ReplyDelete