திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - காய்சின ஆலம் உண்டாய்
நமக்கு துன்பம் வரும் போது நாம் இறைவனை ஏசுகிறோம். "கடவுளே உனக்கு கண் இல்லையா, நீ என்ன கல்லா ?"
ஏதாவது நல்லது நடந்தால் , "நான் பண்ணின பிரார்த்தனை வீண் போகவில்லை, நான் கும்பிட்ட சாமி நல்ல சாமிதான்" என்று சாமிக்கு சான்றிதழ் வழங்குகிறோம்.
உங்கள் ஏச்சினாலும் , புகழ்ச்சியாலும் இறைவனுக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லம். நீங்கள் புகழ்ந்தால் அவன் உடனே எல்லோரிடமும் சென்று நீங்கள் புகழ்ந்ததை சொல்லி மகிழப் போவதும் இல்லை, நீங்க திட்டினால் அதற்காக அவன் மனம் வருத்தப் போவதும் இல்லை.
உங்களுக்கு பொழுது போகவில்லை. ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
மணிவாசகர் சொல்கிறார் "நான் ஏசினாலும், புகழ்ந்தாலும் அது என் பிழைதான். நீ அதை எல்லாம் பெரிது பண்ணாமல் என்னை காப்பாற்றி கடையேற்றுவாய் . அமுது வந்த போது, அதில் உனக்கும் ஒரு பங்கு வந்திருக்க வேண்டும். அதை விடுத்து, நீ விஷத்தை உண்டாய். உனக்கு அமுதும், விஷமும் ஒன்றுதான். எனவே, என் ஏச்சையும், புகழையும் ஒன்றாகக் கொண்டு, தேவர்களை காத்தது போல என்னையும் காப்பாத்து "
என்று குழைந்து வேண்டுகிறார்.
பாடல்
ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து
வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின்
தேகடை யாயென்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக்
காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே.
பொருள்
ஏசினும் = ஏசினாலும்
யானுன்னை = யான் உன்னை
யேத்தினும் = ஏத்தினும், புகழ்ந்தாலும்
என்பிழைக்கே = என் பிழையினால்
குழைந்து = மனம் வருந்தி
வேசறு வேனை = துன்பப் படுவேனை
விடுதிகண்டாய் = விடுதலை அடையச் செய்வாய்
செம்பவள = சிவந்த பவளம்
வெற்பின் = மலையின்
தேகடை யா = போல தேகம் உடையவனே
யென்னை = என்னை
ஆளுடையாய் = ஆளுகின்றவனே
சிற் றுயிர்க் கிரங்கிக் = சிறிய உயிர்களுக்கு இரங்கி, இரக்கப் பட்டு (சிறிய உயிர் = தேவர்கள்)
காய்சின = பொங்கி வந்த
ஆலமுண்டாய் = ஆலகால விஷம் உண்டாய்
அமுதுண்ணக் கடையவனே. = அமுது உண்ண உடமை உள்ளவனே
அமுது நஞ்சு எல்லாம் அவனுக்கு ஒன்றுதான். நாம் தான் கிடந்து அலட்டிக் கொள்கிறோம்....கோவிலுக்குப் போய் அவன் பெயரில் அர்ச்சனை செய்வதும், ஆராதனை செய்வதும், அபிஷேகம் செய்வதும், மொட்டை அடிப்பதும் என்று. இதை எல்லாம் பற்றி அவன் கவலைப் படுவதே இல்லை.
அமுதம் எங்கே. உலகை அழிக்கும் விஷம் எங்கே. அதற்கு பதில் இதை உண்டவன், இதை எல்லாம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவா போகிறான்.
எதற்கு இந்த ஆட்டம் ?
https://interestingtamilpoems.blogspot.com/2019/09/blog-post_17.html
No comments:
Post a Comment