Pages

Monday, November 18, 2019

கந்த புராணம் - பேரினை உரைத்தி

கந்த புராணம் - பேரினை உரைத்தி 


அவளை அன்று தற்செயலாக வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெரிய  கடையில் பார்த்தான்.  வீணையின் ஒற்றை தந்தியை சுண்டி விட்ட மாதிரி ஒரு சிலிர்ப்பு. யார் இவள் ? இவ்வளவு அழகா? சிரிக்கிறாளா இல்லை முகமே அப்படித்தானா? என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். பக்கத்தில போய் பேசலாமா என்று நினைக்கிறான். அதற்குள் அவள் போய் விட்டாள்.

அவனுக்குள் ஏதோ ஒரு அவஸ்தை.

சிறிது நாள் கழித்து, மீண்டும் அவளை ஒரு நூலகத்தில் பார்த்தான். அவள் பாட்டுக்கு படித்துக் கொண்டிருக்கிறாள். அவனுக்குள் ஒரு இனம் புரியாத பரபரப்பு. பேசவும் முடியாது. அவள் இருக்கும் மேஜைக்கு பக்கத்து மேஜையில் அமர்ந்து கொள்கிறான்.

அவள் வாசித்து முடித்து விட்டு செல்கிறாள். அவனும் அவள் பின்னையே போகிறான்.

ஏதாவது அவளிடம் பேச வேண்டும் என்று ஆசை. என்ன பேசுவது, என்ன கேட்பது என்று தவிக்கிறான். ஏதாவது கேட்டால் , அவள் தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்றும் பயம்....

ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை அணுகி, தன்னை அறிமுகப் படுத்தி கொண்டு, அவள் பெயரை கேட்கிறான்.

அவள் பதில் சொல்லாமல் போய் விடுகிறாள்.

அப்புறம் சிறிது நாள் கழித்து, "ஏங்க , பேர் சொல்லாட்டாலும் பரவாயில்ல, நீங்க எந்த ஊருன்னாவது சொல்லுங்க" என்றான். அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.

கொஞ்ச நாள் சென்றது, "சரிங்க , ஊர் பேர் சொல்லாட்டாலும் பரவாயில்லை, உங்க ஊருக்கு போற வழியையாவது சொல்லுங்க. ஏதாவது சொல்லுங்க "  என்று  அவளை பேச வைக்க பாடாய் படுகிறான். ....

இது ஏதோ நம்ம ஊர் +2 , காலேஜ் படிக்கும் பையன் , பொண்ணுங்க கதை மாதிரி இருக்கா?

இல்லை, இது கந்தபுராண கதை.

நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். பாடலைப் பாருங்கள்.


பாடல்


வார் இரும் கூந்தல் நல்லாய் மதி தளர் வேனுக்கு  உன்றன்
பேரினை உரைத்தி மற்று உன் பேரினை உரையாய் என்னின்
ஊரினை உரைத்தி ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.


பொருள்

வார் இரும் = வாரி, வகிடு எடுக்கப்பட்ட

கூந்தல் = கூந்தலை கொண்ட

நல்லாய் = நல்ல பெண்ணே

மதி  தளர் வேனுக்கு = புத்தி தடுமாறும் எனக்கு

உன்றன் = உன்னுடைய

பேரினை உரைத்தி = பேர் என்னனு சொல்லு

மற்று  = அல்லாமல்

உன் பேரினை உரையாய் என்னின் = பேரை சொல்லமாட்டியா, சரி, அப்படினா

ஊரினை உரைத்தி = உன் ஊர் பேராவது சொல்லு

ஊரும் உரைத்திட முடியாது என்னில் = அதையும் சொல்ல முடியாது என்றால்

சீரிய = சிறந்த

நின் = உன்னுடைய

சீறுர்க்குச் = சிறப்பான ஊருக்கு

செல்வழி உரைத்தி என்றான். = போகிற வழியாவது சொல்லு  என்றான்

அது சிறந்த ஊருனு இவனுக்கு எப்படித் தெரியும்? ஊர் பேரே தெரியாது. ஆனால், அது சிறந்த ஊர் என்று எப்படித் தெரியும்?

அவள் பிறந்ததனால், அது சிறந்த ஊராகத்தான் இருக்க முடியும் என்பது அவன் எண்ணம்.

காதல் இரசம் கொஞ்சும் பாடல்.

இது கந்த புராணத்தில் 10149 ஆவது பாடல்.

எவ்வளவு பாடல்கள் இருக்கின்றன. என்னைக்கு அதை எல்லாம் படித்து இன்புறுவது?

whatsapp , youtube , facebook பாக்கவே நேரம் இல்லை...இதில் கந்த புராணத்தை  எங்கே போய்  படிப்பது ?

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_18.html

2 comments:

  1. உங்கள் பதிவை பார்க்கும் முன்னர் பாடலை படித்திருந்தால் ஓரளவு தான் புரிந்து இருக்கும்.அதில் உள்ள நளினம்,அழகு,ரசனை கட்டாயம் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. உங்கள் விளக்கம் பாடலை வேறு level க்கு கொண்டு செல்கிறது.நன்றி.

    ReplyDelete
  2. திரு பார்த்தசாரதி சொன்னதை விட சரியாகச் சொல்ல முடியாது! நூற்றுக்கு நூறு உண்மை சொன்னார்.

    ReplyDelete