கந்த புராணம் - பழி ஒன்று நின்பால் சூழும்
அவனுக்கு அவள் மேல் கொள்ளை காதல். எட்ட இருந்து, பார்த்து, இரசித்து , எப்படியாவது பேசி விட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறான்.
அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தது.
அவளிடம் போய்
"ஏங்க , ஏதாவது சொல்லுங்க. பிடிச்சுருக்குனு சொல்லுங்க, இல்லை பிடிக்கலேன்னு சொல்லுங்க...ஏதாச்சும் சொல்லுங்க" என்று சொல்கிறான்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை. நிலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
"சரிங்க, பேச வேண்டாம், ஒரு புன்சிரிப்பு?"
அதற்கும் அவள் ஒன்று செய்யாமல் நிற்கிறாள்.
"சரி போகட்டும், புன்னகை கூட வேண்டாம், ஒரே ஒரு பார்வை பாருங்க...அது போதும்" என்கிறான்.
அவள் மசியவில்லை. நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.
"என்னங்க நீங்க, நான் கிடந்து தவிக்கிறேன்...எனக்கு ஒரு வழி சொல்லுங்க "
அவள் அப்போதும் மெளனமாக இருக்கிறாள்.
"ஏங்க, உங்க மனசு என்ன கல் மனசா ? எனக்கு சாப்பிட பிடிக்கல, தூங்க பிடிக்கல...பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு...எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா , அந்த பழி உங்க மேல தான் வரும் " என்று கூறுகிறான்.
அந்த அவன் = முருகன்.
அந்த அவள் = வள்ளி.
மேலே சொன்ன dialogue , அப்படியே கச்சியப்ப சிவாச்சாரியார் சொன்னது.
பாடல்
மொழி ஒன்று புகலாய் ஆயின் முறுவலும் புரியாய் ஆயின்விழி ஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல் வேன் உய்யும்வழி ஒன்று காட்டாய் ஆயின் மனமும் சற்று உருகாய் ஆயின்பழி ஒன்று நின்பால் சூழும் பராமுகம் தவிர்தி என்றான்.
பொருள்
மொழி ஒன்று புகலாய் ஆயின் = ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தால்
முறுவலும் புரியாய் ஆயின் = ஒரு புன்னகை கூட புரியவில்லை என்றால்
விழி ஒன்று நோக்காய் ஆயின் = ஒரு கண் ஜாடை கூட காட்டவில்லை என்றால்
விரகம் மிக்கு = விரகம் அதிகமாகி
உழல் வேன் உய்யும் = துன்பப்படும் நான் தப்பிக்கும்
வழி ஒன்று காட்டாய் ஆயின் = வழி ஒன்றும் காட்டாவிட்டால்
மனமும் சற்று உருகாய் ஆயின் = எனக்காக மனம் உருக்காவிட்டால்
பழி ஒன்று நின்பால் சூழும் = உன் மேல் தான் பழி வரும்
பராமுகம் தவிர்தி என்றான். = எண்னை பார்க்காமல் இருப்பதை விட்டுவிடு என்றான்.
தெய்வீகக் காதல்தான். முருகன் , வள்ளி மேல் கொண்ட காதல். அதை விட பெரிய தெய்வீக காதல் என்ன இருக்க முடியும்?
அந்த காதலின் பின்னாலும், காமமே தூக்கி நிற்கிறது.
"விரகம் மிக்கு உழல் வேன் உய்யும்" என்கிறான் முருகன்.
பட்டவர்த்தனமாக, வெளிப்படையாக சொல்கிறார் கச்சியப்பர். "விரகம்" தான் இந்தப் பாடு படுத்துகிறது என்று.
சரி, அது பக்கம் இருக்கட்டும்.
பக்தர்கள் பலர் இறைவனை வேண்டுவார்கள்..."ஆண்டவா, எனக்கு முக்தி கொடு, வீடு பேறு கொடு, மோட்சம் கொடு, உன் திருவடி நிழலில் இருக்கும் பேற்றைத் தா " என்று.
"சரி பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம். புறப்படு" என்று கூப்பிட்டால் எத்தனை பேர் போவார்கள்?
மற்றவர்களை விடுங்கள்.
மணிவாசகர் போகவில்லை. இறைவன் வலிய வந்து அழைத்தான். இவர் போகவில்லை.
காரணம், மனம் பக்குவப் படவில்லை.
பின்னால், அதை நினைத்து நினைந்து, நைந்து நைந்து புலம்பினார். அந்த புலம்பலின் மொத்த தொகுப்புதான் திருவாசகம்.
இறைவன் கூப்பிட்டுக் கொண்டேதான் இருக்கிறான்.
நமக்கு கேட்பதில்லை.
கேட்டாலும், கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறோம்.
அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் படிப்பு, அதுகளுக்கு ஒரு கல்யாணம், வயதான பெற்றோர், என்று இவ்வளவையும் விட்டு விட்டு எங்க போறது?
அப்புறம், இந்த இறைவனுக்கு என் மேல் கருணையே இல்லையா என்று புலம்ப வேண்டியது.
முருகன் வலிய வந்து வள்ளியிடம் கேட்கிறான்.
அவளோ,ஒன்றும் பேசாமல் இருக்கிறாள்.
முருகன் சொல்கிறான் "இங்க பாரு...நான் வந்து கூப்பிடுகிறேன்...நீ வரவில்லை என்றால் , பழி உன் மேல் தான் வரும். என்னை யாரும் குறை சொல்ல முடியாது ..எனவே என் கூட வா" என்கிறான்.
பக்குவம் இல்லாத ஆன்மா. வந்திருப்பது இறை என்று அறியாமல் விழிக்கிறது.
எங்கோ இருந்த குகனுக்குத் தெரிந்தது , அருகில் இருந்த கூனிக்குத் தெரியவில்லை.
பிள்ளை பிரகாலதனுக்குத் தெரிந்தது, தந்தை இரணியனுக்குத் தெரியவில்லை.
தம்பி வீடணனுக்குத் தெரிந்தது, அண்ணன் இராவணனுக்குத் தெரியவில்லை.
என்ன செய்ய?
பக்குவம் வேண்டுமே?
https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_21.html
காதல் இரசம் வழியும் இந்தப் பாடலுக்குள் இப்படி ஒரு அர்த்தமா? நாங்கள் எல்லாம் ஜொள்ளு விட்டு சந்தோஷமாக இருந்ததைக் கலைத்த பாவம் உன்னையே சேரும்!
ReplyDeleteஅபாரம்.ஒரு சிறிய பாடலை எடுத்து கொண்டு எவ்வளவு உதாரணங்களுடன் பக்குவத்தில் அவசியத்தை சொல்லி விட்டீர்.
ReplyDeleteபக்குவத்தின்
Delete