Pages

Wednesday, November 27, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம்



இறைவன் ஒருவனே. அவன் தான் உலகைப் படைத்தான். காக்கிறான்...என்று ஏறக்குறைய எல்லா மதமும் சொல்கிறது. அனைத்து பக்தர்களும் ஏற்றுக் கொள்ளகிறார்கள். இருந்தாலும், அந்தக் கடவுள் யார் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் வணங்கும் கடவுள் தான் அந்தக் கடவுள். நீ வணங்கும் கடவுள் உண்மையான கடவுள் அல்ல என்று.

கடவுள் ஒருவர் தான் என்றால் எப்படி பல கடவுள்கள் இருக்க முடியும். உன் கடவுள், என் கடவுள் என்ற பேதம் எப்படி வரும்?

மனிதனின் அகங்காரம். "நான்" வணங்கும் கடவுள்தான் உண்மையான கடவுள் என்பது மனிதனின் பயம் கலந்த அகங்காரம் அன்றி வேறு என்னவாக இருக்கும்.

உன் கடவுள், என் கடவுள், உன் ஆச்சாரம், என் ஆச்சாரம்,   ,ஜாதி, மதம், குலம் , கோத்திரம் என்று மனிதர்கள்  கடவுளின் பெயரால் வரம்பு கட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு  இருக்கிறார்கள். சண்டை என்றால் கத்தி , துப்பாக்கி ஏந்தி இரத்தம் சிந்தி சண்டை போட வேண்டும் என்று இல்லை. வெறுப்பு, உயர்ந்தவன்/தாழ்ந்தவன் என்ற எண்ணம், துவேஷம்,  கோபம், இவையும் சண்டை போல் வன்முறையை சார்ந்தவைதான்.

நம்மாழ்வார் கூறுகிறார் ,

"இந்த உடல் நிலத்தில் விழுவதற்கு முன், உங்கள் வேற்றுமைகளை மறந்து எங்களோடு வந்து சேர்ந்து, நாடும் நகரமும் நன்றாக அறிய உரத்த குரலில் "நமோ நாராயணா"  கூறி அவனுக்கு  பல்லாண்டு கூறுங்கள் " என்று.


பாடல்


ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்துகூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோநாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்றுபாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.



பொருள்


ஏடு = இந்த உடல் (அல்லது எமன் ஓலை)

நிலத்தில் இடுவதன்முன்னம் = நிலத்தில் விழுவதன் முன்

வந்து = வந்து

எங்கள் = எங்கள்

குழாம்புகுந்து = எங்கள் குழுவில் சேர்ந்து

கூடுமனமுடையீர்கள் = கூடுகின்ற மனம் உள்ளவர்களே

வரம்பொழி வந் = வரம்பு ஒழிந்து வந்து

ஒல்லைக் கூடுமினோ = சீக்கிரமாக வாருங்கள்

நாடு = நாடும்

நகரமும் = நகரமும்

நன்கறி ய = நன்கு அறிய

நமோ நாராய ணாயவென்று = நமோ நாராயனா என்று

பாடு = பாடும்

மனமுடைப்  = மனம் உடைய

பத்தருள் ளீர் = பக்தர்களுக்குள்

வந்து பல்லாண்டு கூறுமினே. = வந்து பல்லாண்டு கூறுகள்

எல்லோரும் வாருங்கள். நமக்குள் ஒரு பேதமும் இல்லை.  நாம் மட்டும் இரகசியமாக வைத்துக் கொள்வோம். நாம் மட்டும் சுவர்க்கம் போவோம் மற்றவன் எப்படியும் போகட்டும் என்று இல்லாமல்,  "எல்லோரும் வாருங்கள்" என்று அழைக்கிறார்.

"சேர வாரும்  ஜெகத்தீரே " என்று தாயுமானவர் அழைத்தது போல.

ஜாதி மத வரம்புகளைத் தாண்டி, எல்லோரும் வாருங்கள்.

பிரபந்தம், தேவாரம் போன்ற பாடல்களுக்குக் கூட சாதி, சமய சாயம் பூசி  விலக்கி வைத்து  விடுகிறார்கள்.

யார் சொல்வதையும் கேட்காதீர்கள். நீங்களே படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

இந்தப் பாடல்கள் உங்கள் மனதை விரிவடையச் செய்யும். குறுகிய வட்டத்தில் இருந்து வெளி வரச் செய்யும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_27.html

2 comments:

  1. இது என்ன சுத்த அபத்தமாக இருக்கிறது?

    "எல்லோரும் வாருங்கள்" என்பது சரி.

    ஆனால் வந்து "நமோ நாராயணா" என்று சொல்லுங்கள் என்றால், "நாராயணனே கடவுள், என் கடவுளே உண்மை" என்று ஒப்பொக்கொள்ள வேண்டும் என்கிறாரே! அதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது?

    ReplyDelete
  2. இது நம்மாழ்வார் எழுதிய பாசுரம் கிடையாது. இந்த வரிகள் திருப்பல்லாண்டு பாசுரத்தில் இருப்பவை. அருளியவர் - பெரியாழ்வார்

    ReplyDelete