பட்டினத்தார் பாடல்கள் - எது எப்படி போனால் என்ன ?
சிலர், இந்த உலகமே தங்களால் தான் சுழல்கிறது என்று நினைத்துக் கொண்டு செயல் படுவார்கள். இந்த வீடு, பிள்ளைகள், கணவன்/மனைவி, அலுவலகம், மகன்/மருமகள், மகள்/மருமகன் என்று எல்லாம் தன்னையே சார்ந்து இருப்பதாய் நினைத்துக் கொள்வார்கள்.
"நான் மட்டும் இல்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா" என்று நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள்.
பின், "என்ன செய்து என்ன பலன்...என் அருமை யாருக்குத் தெரியுது " என்று அலுத்துக் கொள்ளவும் செய்வார்கள்.
உண்மையில், அவர்களை நம்பி யாரும் இல்லை. எதுவும் இல்லை. அவர்கள் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. "ஆ..அப்படியெல்லாம் இல்லை...யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் " என்று அவர்கள் குதிக்கலாம். என்ன சொன்னாலும், அவர்கள் இல்லை என்றால் ஒன்றும் நடந்து விடாது.
உலகம் மிகப் பெரியது. நம்மை நம்பி எதுவும் இல்லை. நமது தேவைகள் மிகக் குறைவு. என்னமோ நாம் தான் என்று பிரமித்து போக வேண்டாம்.
பட்டினத்தார், பெரிய பணக்காரர். அரசருக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பணம் இருந்தது. எத்தனை வேலைக் காரர்கள் இருந்திருப்பார்கள்? கொடுக்கல், வாங்கல், வரவு, செலவு, போட்டி, என்று எவ்வளவு இருந்திருக்கும் அவர் வாழ்வில்?
எல்லாவற்றையும் ஒரே நாளில் தூக்கி எறிந்து விட்டு, கட்டிய கோவணத்துடன் இறங்கி விட்டார்.
நான் இந்த செல்வத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும். அதை பாது காக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும், எவனாவது கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடுவானோ என்று பயப்பட வேண்டும்...இதுதான் எனக்கு வேலையா என்று நடையை கட்டிவிட்டார்.
அவர் சொல்கிறார், நிலவின் பிறை வடக்கு பக்கம் உயர்ந்தால் என்ன, தெற்கு பக்கம் உயர்ந்தால் நமக்கு என்ன...என்று ஜாலியாக இருந்தார்.
அவர் சொல்வதைக் கேட்போம்....
பாடல்
உடைகோவணமுண்டுறங்கப்புறந்திண்ணையுண்டுணவிங்கடைகாயிலையுண்டருந்தத்தண்ணீருண்டருந்துணைக்கேவிடையேறுமீசர்திருநாமமுண்டிந்தமேதினியில்வடகோடுயர்ந்தென்னதென்கோடுசாய்ந்தென்னவான்பிறைக்கே.
பொருள்
உடைகோவணமுண்டு = உடை, கோவணம் உண்டு
உறங்கப் புறந் திண்ணை யுண்டு = உறங்குவதற்கு யார் வீட்டு திண்ணையாவது இருக்கும்
உணவிங் = உணவு இங்கு
கடைகாயிலையுண் = கடைக் காய் இல்லை உண்டு
அருந்தத் தண்ணீருண்டு = அருந்த தண்ணீர் உண்டு
அருந்துணைக்கே = அருமையான துணைக்கு
விடையேறுமீசர்திருநாமமுண்டு = எருதின் மேல் ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு
இந்த மேதினியில் = இந்த உலகில்
வட கோடுயர்ந்தென்ன = வட கோடு உயர்ந்து என்ன ?
தென் கோடு சாய்ந்தென்ன = தென் கோடு சாய்ந்து என்ன ?
வான்பிறைக்கே. = வான் பிறைக்கே
அவரைப் போல் நம்மால் இருக்கிறதை எல்லாம் உதறிவிட்டு தெருவில் இறங்க முடியாது என்பது வாஸ்தவம்தான்.
ஆனாலும், எல்லாம் நான் தான், என்னை வைத்துத்தான் எல்லாம் நடக்கிறது, நான் இல்லாவிட்டால் இந்த உலகம் நின்று விடும் அல்லது என் குடும்பம் நின்று விடும் என்று நினைப்பதை குறைக்கலாம்.
அந்த எண்ணம் வரும்போது மனம் லேசாகும். படபடப்பு குறையும். வாழ்க்கை மென்மையாக இருக்கும். ஓட்டம் குறையும். நிதானம் வரும். அழுகை குறையும். ஆதங்கம் குறையும்.
மனம் உள்நோக்கித் திரும்பும்.
https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_30.html
அருமையான பாடல். என்ன ஒரு மனப் பக்குவம்! நமக்கு இதில் 1000000இல் ஒரு பகுதி வந்தால் போதும்.
ReplyDeleteசித்தர்கள்தான் தமிழரின் கடவுட் கொள்கையைவிளங்குபவர்கள்அவர்கள்வழியேநல்வழி.பிறவெல்லாம் புற வழிகள்.
ReplyDelete