Pages

Tuesday, March 31, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாழை இலை

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாழை இலை 


வாழை இலை பார்த்து இருக்கிறீர்களா?

அதன் நடுவில் ஒரு தண்டு மாதிரி இருக்கும். இரண்டு இலையை அந்தத் தண்டுப் பகுதியில் ஒட்டி வைத்த மாதிரி இருக்கும்.

அது எப்படி வந்தது தெரியுமா?

அதற்கு ஒரு கதை இருக்கிறது.

இராவண வதம் முடிந்த பின், தாங்கள் வரும் செய்தியை பரதனுக்கு சொல்லி வரும்படி அனுமனை இராமன் அனுப்பினான். அனுமனும் சொல்லிவிட்டு மீண்டும் இராமனிடம் வருகிறான். இப்படி பரதன் தீக்குளிக்க இருந்தான், அவனை தடுத்து நீங்கள் வரும் செய்தியைக் கூறி விட்டு வந்தேன் என்று சொன்னான்.

அனுமன் வருகிற சமயம் பார்த்து, இராமர் உணவு அருந்திக் கொண்டு இருந்தார். அனுமனுக்கும் பசிக்கும் தானே?

அனுமனுக்கு ஒரு இலை போட்டச் சொல்லலாம். அதற்கு கொஞ்சம் நேரம் ஆகும். பாவம், பக்தன் பசியாக இருப்பான் என்று, தன்னுடைய இலையிலேயே, தான் உண்ணும் உணவையே சாப்பிடும் படி சொன்னாராம் இராமர்.

'இந்தா இந்த உணவு உனக்கு, இந்தப் பகுதி எனக்கு" என்று கையால் இலையில் பிரித்து  வைத்தாராம். அப்படி பிரித்த பின் தான் வாழை இலை இரண்டு பகுதியாக மாறியது என்று   ஒரு கதை உண்டு.

"இராமரும் அனுமனும் ஒரே இலையில் சாப்பிட்டார்களா? கேள்விப் பட்டதே இல்லையே...இராமாயணத்தில் எங்கே வருகிறது இப்படி" என்று கேட்காதீர்கள்.

இராமாயணத்தில் இல்லை, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருக்கிறது.

திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரம்.

பாடல்

வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து

காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று

கோதில் வாய்மையி னாயொடு முடனே உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்

ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.


பொருள்

வாத = வாதம் என்றால் காற்று. வாயு

மாமகன் = வாயு புத்திரனான அனுமன்

மர்க்கடம் = குரங்கு

விலங்கு = விலங்கு

மற்றோர் சாதி  = மனித ஜாதி அல்லாத வேறு ஒரு ஜாதி

யென் றொழிந்திலை = என்று தள்ளி வைக்கவில்லை

உகந்து = மனம் மகிழ்ந்து

காதல் = அன்புடன்

ஆதரம் = அன்பு

கடலினும் பெருகச் = கடலை விட பெரிதாக

செய்த = அனுமன் செய்த

தகவினுக் உதவிக்கு

 கில்லைகைம் மாறென்று = பதில் உபகாரம் ஒன்று இல்லை என்று

கோதில் = குற்றமற்ற

வாய்மையி னாயொடு முடனே  = உண்மையானவனான அனுமனோடு

உண்பன் நான் = நான் உண்பேன்

என்ற = என்ற

ஓண்பொருள் = சிறந்த விஷயம்

எனக்கும் = எனக்கும் (திருமங்கை ஆழ்வாருக்கும்)

ஆதல் வேண்டுமென்று  = வேண்டும் என்று

றடியிணை யடைந்தேன் = உன் திருவடிகளை அடைந்தேன்

அணி பொழில்திரு வரங்கத்தம் மானே. = சோலைகளை அணிகலமாக கொண்ட திருவரங்கத்தில் உள்ள  அம்மானே

போதுமா?

இராமன், அனுமனோடு ஒன்றாக உண்டான் என்று  ஆழ்வார் சொல்கிறார்.

உண்டாரா, இல்லையா என்பதல்ல கேள்வி. இதில் நாம் உள்ளே உள்ள கவி உள்ளதை அறிய வேண்டும்.

முதலாவது,  பக்தன் கேட்கவே இல்லை. எனக்கு பசிக்கிறது என்று அனுமன் சொல்லவே இல்லை.  அவனுக்கு பசிக்குமே என்று அறிந்து, இராமர் அவனுக்கு உணவு  அளிக்கிறார். எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுபவர்கள்  ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று  கூட அறியாத அவனால் அதை எப்படித் தர முடியும்?

இரண்டாவது, என்ன வேண்டும் என்றால் அதை உடனே தர வேண்டும் என்பது  ஆண்டவன் விருப்பம். இன்னொரு இலை போட்டால் அதற்கு நேரம் ஆகும் என்று, என் இலையிலேயே சாப்பிடு என்கிறார்.  எதை, எப்போது தர வேண்டும்  என்று அவனுக்குத்  தெரியும்.

மூன்றாவது,  குரங்குதானே, தாழ்ந்தது தானே என்று இராமர் நினைக்கவில்லை. கணவன் சாப்பிட்ட இலையில் சாப்பிடுவது, அல்லது மனைவி சாப்பிட்ட இலையில்  கணவன் சாப்பிடுவது என்றால் கூட கொஞ்சம்  சங்கடம் இருக்கும். ஒரு குரங்கை, தன்னோடு ஒரே இலையில் சாப்பிடச் சொல்ல முடியுமா?

நான்காவது, ஏதோ கடமைக்கு சொல்லவில்லை. கடல் போன்ற அன்போடு ஒன்றாக  உணவு அருந்தச் சொன்னார்.  மனிதர்களுக்கு மனிதர் வேறுபாடு   காட்டும் இந்த உலகில்,  ஒரு குரங்கோடு அன்போடு ஒன்றாக உணவு உண்டார்.  இராமரை வணங்குபவர்கள், பின் பற்றுபவர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும்.

ஐந்தாவது,  "குரங்கையே ஒன்றாக சேர்த்து உணவு உண்ணச் சொன்னாயே இராமா,  நான் குரங்கை விட மோசமானவனா ? எனக்கும் அந்த அருள் வேண்டும் " என்று தாழ்ந்து வேண்டுகிறார் ஆழ்வார்.

அடுத்த முறை வாழை இலையில் உணவு உண்ணும் போது, இந்த பாசுரத்தை  நினைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாசுரம் என்றாலும், மனம் எல்லாம் நிறைந்து போகிறது அல்லவா?

இப்படி கிட்டத்தட்ட 4000 பாசுரம்.

ஒரு நாளைக்கு ஒரு பாசுரம் என்று வைத்துக் கொண்டு படித்தாலும், பத்து பதினோரு வருடம் ஆகி விடும்.

முழுவதும் படிக்க முடியாவிட்டாலும், முடிந்த வரை படிக்கலாமே.

interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_31.html

2 comments:

  1. இந்த பாசுரத்தின் விளக்கமும் ஆழ்வாரின் வேண்டுதலும் படிக்கையில் எனக்கு மெய் சிலிர்த்தது. அற்புதமான விவரிப்பு.
    பாசுரங்களை படிக்க ஆவல்தான். வார்த்தைக்கு வார்த்தை அர்த்தத்துடன்ஒவ்வொரு ஆழ்வாரின் பாசுரங்களுக்கு கிடைக்குமா?

    ReplyDelete
  2. கண்களில் நீர் வர வைக்கும் விண்ணப்பம் இது. மிக அருமை!

    ReplyDelete