நாலாயிர திவ்ய பிரபந்தம் - காதல் நோய்
நோய் என்று இருந்தால் அதற்கு ஒரு மருந்து என்று ஒன்று இருக்க வேண்டும். மருந்தே இல்லாத நோய் வந்தால் என்ன செய்வது?
நோயினால் வரும் துன்பம் ஒரு புறம். மருந்து இல்லாத கவலை இன்னொருபுறம்.
நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஒரு கட்டத்தில், இறப்பு வந்தால் கூட பரவாயில்லை, இந்த வேதனையில் இருந்து விடுதலை பெறலாம் என்று நினைக்கலாம்.
இந்த காதல் நோய் இருக்கிறதே, இறந்த பின்னும் தொடரும் போல் இருக்கிறதே என்று அவள் வருந்துகிறாள்.
அவனோ கண்டு கொள்ள மாட்டேன் என்கிறான்.
இந்த இரவு வேறு முடிந்து தொலைய மாட்டேன் என்று ஊழிக் காலம் போல நீண்டு கொண்டே போகிறது.
அவன் வருவது ஒன்றுதான் இந்த காதல் நோய்க்கு மருந்து. அவன் வராவிட்டால், இந்த உயிரை யார் காப்பாற்றப் போகிறார்கள் என்று தவிக்கிறாள்.
பாடல்
பின்நின்று காதல் நோய்* நெஞ்சம் பெரிது அடுமால்*
முன்நின்று இரா ஊழி* கண் புதைய மூடிற்றால்*
மன் நின்ற சக்கரத்து* எம் மாயவனும் வாரானால்*
இந் நின்ற நீள் ஆவி* காப்பார் ஆர் இவ் இடத்தே?*
பொருள்
பின்நின்று காதல் நோய் = காதல் நோய் தெரிகிறது. அது என்ன பின் நின்று காதல் நோய்? காதல் அவளை பின்னே இருந்து பிடித்துத் தள்ளுகிறது. போ, அவன் கிட்ட போய் சொல்லு என்று. நாணம் , வெட்கம் தடுக்கிறது.
அது ஒரு அர்த்தம்.
இறந்த பின்னாலும் விடாமல் தொடரும் காதல் என்று வியாக்கியானம் செய்த பெரியவர்கள் கூறுகிறார்கள்.
நெஞ்சம் = மனம்
பெரிது = ரொம்பவும்
அடும் = அடும் என்றால் சண்டை பிடிக்கும், அழிக்கும் என்று அர்த்தம்.
ஆல் = அசைச் சொல்
முன் நின்று = முன்னால் நிற்கும்
இரா = இந்த இரவு நேரம்
ஊழி = ஊழிக் காலம் போல நீண்டு கொண்டே போகிறது
கண் புதைய மூடிற்று = கண்ணை கட்டி விட்டது மாதிரி இருண்டு கிடக்கிறது
ஆல் = அசைச்சொல்
மன் = மன் (இரண்டு சுழி ன் ) என்றால் நிலைத்து நிற்கும்
நின்ற = நிற்கும்
சக்கரத்து = சக்கரத்தைக் கொண்ட
எம் மாயவனும் வாரானால்* = அந்த மாயவன் வராவிட்டால்
இந் நின்ற = இங்கே இருக்கும் என்
நீள் ஆவி = நீண்ட உயிரை
காப்பார் ஆர் இவ் இடத்தே ? = யார் காவல் செய்வார்கள் இங்கே
பக்தி என்பது எப்போதாவது நேரம் கிடைக்கும் போது செய்வது அல்ல. காலையில் ஒரு பத்து நிமிடம், மாலையில் ஒரு பத்து நிமிடம், வருடத்துக்கு இரண்டு தடவை தல யாத்திரை, நாள் கிழமைன்னா கோவிலுக்கு போவது ...அது அல்ல பக்தி.
காதல் வயப் பட்டவர்களை பாருங்கள் தெரியும்.
எந்நேரம் பார்த்தாலும் அவள் (அவன்) சிந்தனைதான் இருக்கும்.
நொடிக்கு நூறுதரம் செல் போனை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
நடு இரவில் தூக்கம் கலைந்தால் , செல் போனை எடுத்து செய்தி ஏதாவது வந்து இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இல்லை என்றால் ஏதாவது செய்தி அனுப்புவார்கள்.
காதல் என்றால் அப்படித் தான் இருக்கும்.
பக்தியும் அப்படி இருக்க வேண்டும்.
"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்பார் மணிவாசகர்.
அப்படி இலயிக்க வேண்டும்.
உருக வேண்டும்.
நம்மால் உருக முடியுமா என்று தெரியவில்லை.
உருகியவர்கள் பாடிய பாசுரங்களை படித்தால், நம் நெஞ்சும் உருகும்.
interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post.html
படித்தவுடன் மனம் உறுத்தியது.என் பக்தி ஏதோ காமா சோமா வென நீங்கள் எழுதியது போல இருக்கிறதே என. .கடைசி வரியை படித்தவுடன் கொஞ்சம் ஆறுதல்.
ReplyDelete"உருகியவர்கள் பாடிய பாசுரங்களை படித்தால், நம் நெஞ்சும் உருகும்."
நாலாயிரத்து திவ்வியப் பிரபந்தத்தில் இப்படி ஒரு அன்னியோன்னியமாக உணர்ச்சி நிறைந்த பாடலா? ஆச்சரியமாக இருக்கிறது.
ReplyDeleteநெஞ்சை நிகிழ வைக்கும் பாடல்.
இந்தச் செல்வத்தை எங்களுக்குத் தந்ததற்கு நன்றி.