Pages

Wednesday, April 29, 2020

வெற்றி வேற்கை - எது அழகு

வெற்றி வேற்கை - எது அழகு


மானுக்கு கொம்பு அழகு.

மயிலுக்கு தோகை அழகு.

அது போல் எதற்கு எது அழகு என்று பட்டியல் தருகிறார் அதிவீரராம பாண்டியர், வெற்றி வேற்கை என்ற நூலில்.

எளிய தமிழில் அழகான கருத்துகளை தரும் நூல் அது.

அதில் இருந்து சில மாதிரிகள்....

ஒருவன் படித்தவன், அறிவாளி, கல்வி மான் என்றால் அதை எப்படி அறிந்து அறிந்து கொள்வது.

"கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்"


ஒருவன் கல்வி கற்றவன் என்றால், கற்றதை தவறு இல்லாமல் தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரிய வேண்டும்.

"படிச்ச ஞாபகம் இருக்கு...ஆனா exact ஆ அது என்னனு தெரியாது" என்று சிலர் சொல்வதை கேட்டு இருப்போம். அது படித்ததற்கு அழகு அல்ல.

மற்றவர்களுக்கு புரியும்படி அழகாக சொல்லத் தெரிய வேண்டும்.

இன்று கணனியில் data science என்று சொல்லக் கூடிய பிரிவு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் ஒரு உட் பிரிவு, predictive analysis என்பது. அதாவது என்ன நடக்கப் போகிறது என்று சொல்லுவது.

கையில் இருக்கும் அனைத்து செய்திகளையும் சேர்த்து, இப்படி இருந்தால், இனி இப்படி ஆகும் என்று சொல்லுவது.

உதாரணமாக,  கொரோன வைரஸின் தாக்கம் எப்படி இருக்கும், அது எப்படி பரவும், எவ்வளவு வேகமாக பரவும், இன்னும் ஒரு மாதத்தில் எவ்வளவு பேர் அதனால் பாதிக்கப் படுவார்கள்  என்று ஆராய்ந்து  சொல்லும் பிரிவு.

வெற்றி வேற்கை அதை அன்றே கண்டு சொல்லியது....

"மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்"

என்ன நடக்கப் போகிறது என்று ஆராய்ந்து சொல்லவதுதான் மந்திரிக்கு அழகு.

மந்திரி என்றால் மந்திரி மட்டும் அல்ல. மந்திரியின் பொறுப்பில் உள்ள அனைவருக்கும் அது பொருந்தும்.

சில பேர் ஏதோ கொஞ்சம் தெரிந்தால் போதும், உலகிலேயே எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்று தையா தக்கா என்று குதிப்பார்கள். அறிவு என்பது   அடக்கத்தைத் தர வேண்டும்.

"அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்"

கற்று, உணர்ந்து அடங்கி இருக்க வேண்டும். அடக்கம் இல்லை என்றால், அறிவு இல்லை என்று அர்த்தம். 

இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. 

தேடி கண்டு பிடித்துப் படித்துப் பாருங்கள். 

மிக எளிமையான நூல். 

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_17.html

No comments:

Post a Comment