திருக்குறள் - வாழ்க்கைத் துணை
இல்லறத்தில் ஈடுபடும் ஒரு ஆடவனின் 11 கடமைகளைப் பற்றிச் சிந்தித்தோம். அந்தக் கடமைகளை அவன் தனியே செய்து விட முடியாது. அவனுக்கு ஒரு துணை வேண்டும். அது, அவன் மனைவி.
இல்வாழ்க்கை என்று ஒரு அதிகாரம் எழுதினார். அதில் ஆடவனின் கடமைகளை கூறினார்.
அடுத்து வாழ்க்கை துணை என்று பெண்ணின் கடமைகளை கூற இருக்கிறார்.
ஆணுக்கு தனியே ஒரு அதிகாரம் எழுதவில்லை. பெண்ணுக்கு எழுதுகிறார்.
வாழ்க்கை துணை என்றால் யார்? வாழ்க்கை துணையாக வரும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் முதல் குறளில்.
தாலி கட்டி கூட்டிக் கொண்டு வந்து விட்டால், அவள் வாழ்க்கை துணை என்று சொல்லவில்லை.
பல பேர் அப்படி நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மனைவி என்ற பொறுப்பு, மிகப் பெரியது.
வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம்.
பாடல்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
பொருள்
மனைத்தக்க = மனைக்கு தக்க
மாண்புடையள் ஆகித் = மாண்புகளைக் கொண்டு
தற் கொண்டான் = தன்னை கொண்டவனின் (கணவனின்)
வளத்தக்காள் = வளமைக்கு தக்க வாழ்பவள்
வாழ்க்கைத் துணை = வாழ்க்கைத் துணை என்று சொல்லப் படுவாள்
மனைக்கு தக்க மாண்புகள் என்றால் என்ன ?
உரை எழுதிய பரிமேல் அழகர் கூறுகிறார்
மனை அறத்துக்கு தக்க நல்ல குணங்கள் என்கிறார். அது என்ன மனை அறம் , நல்ல குணம் என்ற கேள்விகள் வரும் அல்லவா ?
இல்லற கடமைகள் என்று 11 கடமைகளை ஆடவனுக்கு கூறினார் அல்லவா? அவற்றை நிறைவேற்ற மனைவி உதவ வேண்டும்.
உதாரணமாக விருந்து உபசாரம். வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்க வேண்டியது ஆடவனின் கடமைகளில் ஒன்று என்று பார்த்தோம். மனைவியின் துணை இல்லாமல் அது நடக்காது. விருந்தைப் பேணுவதில் கணவனுக்கு உதவி செய்ய வேண்டும்.
சரி செஞ்சிட்டா போகுது என்று போன் போட்டு அருகில் உள்ள பெரிய ஓட்டலில் விலை உயர்ந்த உணவு வகைகளை வரவழைத்து தந்து விடலாமே? விருந்தினர்கள் சந்தோஷமாக போவார்களே என்றால் அது சரி அல்ல என்று அடுத்த வார்த்தையில் கூறுகிறார்.
"வளத்தக்காள்" கணவனின் வளமை அறிந்து செலவு செய்ய வேண்டும். "என்னால எல்லாம் சமையல் செய்ய முடியாது. வேணும்னா ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி அவங்களுக்கு கொடுங்க" என்றால் அது வாழ்க்கைத் துணை அல்ல.
நல்ல குணங்கள் என்ற பட்டியலில் அவர் சொல்வது, "அட்டில் தொழில் வன்மை" என்கிறார். அட்டில் என்றால் சமையல்.
ஆஹா, உங்களுக்கு வடிச்சு கொட்டத்தான் நாங்க இருக்கோமா என்று வரிந்து கட்டிக் கொண்டு சிலர் கிளம்பலாம்.
அப்படி கிளம்பினால் ஒன்றும் செய்ய முடியாது. கணவன் வெளியில் சாப்பிடுவான். பிள்ளைகள் swiggy, zomato என்று ஆர்டர் பண்ணி உண்பார்கள். மனைவி மற்றும் தாயின் தேவை குறைந்து போகும். அப்புறம் "என் மேல் யாருக்கும் அக்கறை இல்லை. நான் சொல்வதை யாரும் கேட்பது இல்லை. எனக்கு ஒரு மரியாதையே இல்லை " என்று குறை பட்டுக் கொள்ளுவதில் அர்த்தம் இல்லை.
பிள்ளைகளின் பாசம், Swiggiyin மேல் தானே இருக்கும்?
சமையல் என்பது வேலை அல்ல.
அது அன்பின் வெளிப்பாடு.
முதலில் அன்பு வரும்.
பின்பு அருள் வரும்.
அருள் துறவு நோக்கி செலுத்தும்.
திருக்குறள் என்பது ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அறிவுரைகள் தரும் நூல் அல்ல. வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதி வரை, அதையும் தாண்டியும் வழி நடத்திச் செல்லும் ஒரு நூல்.
திருக்குறள் ஒன்றுதானா வழி? வேற வழி இல்லையா? என் வழி தனி வழி என்று சிலர் நினைக்கலாம்.
திருக்குறள் அளவுக்கு ஆழமாகவும், அகலமாகவும் சிந்தித்து ஒரு வாழ் நாள் பூராவும் வழி நடத்திச் செல்லும் ஒரு கோட்பாட்டை கண்டு பிடித்து விட்டால், அதன் படி செல்வதில் தவறு ஒன்றும் இல்லை.
முடியுமா அது ?
அது முடிகிற வரையில், நமக்கு கிடைத்த வழி திருக்குறள் தான்.
திருக்குறள் படி நடப்பது பின்னால். முதலில் அதை புரிந்து கொள்ள முயல்வோம். நடப்பதா இல்லையா என்று பின்னால் தீர்மானித்துக் கொள்ளலாம்.
அதை புரிந்து கொள்ள பொறுமையும், நிதானமும் தேவை. உங்கள் கேள்விகளை கொஞ்சம் தள்ளி வையுங்கள். முழு திருக்குறளையும் படித்த பின்னால் உங்கள் கேள்விகள் தானே மறைந்து போகும். மறையாவிட்டால், சரியாக படிக்கவில்லை என்று அர்த்தம்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_29.html
கடைசி வரி மெல்லிய சிரிப்பை வருவித்தது.!
ReplyDeleteசிறப்பபு
ReplyDeleteசிறப்பு
Delete