Pages

Monday, May 11, 2020

தேவாரம் - மிகு கொடை வடிவினர்

தேவாரம்  -  மிகு கொடை வடிவினர் 


ஒவ்வொரு துறையிலும் மிக மிக திறமை வாய்ந்தவர்களை பார்த்தால் தெரியும், அந்தத் திறமையே ஒரு அழகாகத் தெரியும்.

சில பாடகர்களை பார்த்தால்,  சராசரி ஆளை விட அழகு கொஞ்சம் குறைவாகவே இருக்கும். ஆனால், அவர்களுக்கு பின்னால் இருக்கும் திறமை, அதுவே ஒரு அழகைக் கொடுக்கும்.

பெரிய பெரிய அறிவியல் அறிஞர்களை பார்க்கிறோம். தலையெல்லாம் கலைந்து, சவரம் செய்யாமல் தாடி மீசையோடு இருப்பார்கள். அனால், அவர்கள் கண்டு பிடித்த உண்மைகளை நாம் அறியும் போது அவர்களின் வசீகரம் கூடியது போல இருக்கும்.

தானம் கொடுப்பதே ஒரு அழகாம். பிறருக்கு உதவுவது ஒரு அழகைத் தரும் என்கிறார் சேக்கிழார் பெருமான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பிள்ளையார் எப்படி வந்தார் என்பதற்கு பல கதைகள் இருக்கின்றன. பார்வதி மஞ்சள் தூளை பிடித்து வைத்து, அதற்கு உயிர் கொடுத்து, சிவன் அந்த பிள்ளையை வெட்ட, பின் யானையின் தலையை கொண்டு வந்து பொருத்தி என்றெல்லாம் கதை போகும்.

திருஞான சம்பந்தர் சொல்கிறார்....

ஒரு முறை சிவனும், பார்வதியும், யானை வடிவம் கொண்டு இன்பம் அனுபவித்தார்களாம். அதில் பிறந்தவர் தான் கணபதி என்கிறார்.

பாடல்

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.


பொருள்

பிடியத னுரு = பிடி அதன் உரு = பிடி என்றால் பெண் யானை. அதன் உருவத்தை

வுமை கொள = உமை கொள்ள. உமா தேவி கொள்ள.

மிகு = பெரிய

கரியது =கரி + அது = கரி என்றால் ஆண் யானை.

வடிகொடு = வடிவம் கொண்டு

தனதடி = தனது அடியார்

 வழிபடு = வழிபட

மவரிடர் = அவர் இடர். அவர்களின் துன்பங்களை

கடி = கடிய, மாற்ற

கண பதிவர = கணபதி வர (பிறக்க)

வருளினன் = அருளினன். அருள் செய்தான்

 மிகுகொடை = சிறந்த கொடை

வடிவினர் = அதனால் அழகிய வடிவம் கொண்டவர்கள்

பயில் = வாழும்

வலி வல = வலிவலம் என்ற ஊரில்

முறை யிறையே = உறையும் இறையே. வாழும் இறைவனே

பிறருக்கு உதவி செய்தால், அதனால் ஒரு அழகு வரும் என்பது ஒரு செய்தி.

அது மட்டும் அல்ல, கொஞ்சம் இலக்கணம் பார்ப்போம்.

தமிழ் எழுத்துக்களில் குறில் எழுத்து, நெடில் எழுத்து என்று உண்டு.

குறுகிய ஓசை கொண்டது குறில் எழுத்து. ஒரு மாத்திரை அளவு என்பார்கள். மாத்திரை என்பது  கண் சிமிட்டும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரம்.  அ, இ, உ, எ, ஒ என்பவை குறில் எழுத்துக்கள்.

நெடிய ஓசை கொண்டது நெடில் எழுத்து. இரண்டு மாத்திரை அளவு உள்ளது.  ஆ, ஈ, ஊ, ஏ , ஐ, ஓ  ...இவை நெடில் எழுத்துக்கள்.

மேலே உள்ள பாடலைப் பாருங்கள்.

குறில் எழுத்து மட்டும் தான் இருக்கும். நெடில் எழுத்தே கிடையாது.

நம்மால் இப்படி ஒரு வாக்கியம் எழுத முடியுமா என்பது சந்தேகம். முழு பாடல் அதிலும் ஒரு கதை, ஒரு கருத்து என்று.

ஞான சம்பந்தர்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_11.html

No comments:

Post a Comment