கம்ப இராமாயணம் - நீயும் அந்த வஞ்சனை நினைத்தாயா?
பெண்ணின் மனதில் என்ன ஓடுகிறது என்று யார் அறிவார்? அந்த பெண்களே அறிவார்களா என்பது சந்தேகம்.
அசோக வனத்தில், சீதை சிறை இருக்கிறாள். அனுமன் அவளைக் காண்கிறான். "பேசாமல் என் கூட வந்து விடு. உன்னை இங்கிருந்து நான் கொண்டு போய் விடுகிறேன். இராவணனை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறான்.
பேசாமல், அனுமன் கூட போக வேண்டியது தானே.
விமானத்தில், ஒரு பெண் போகிறாள். அந்த விமானம் கடத்தப் படுகிறது. கமாண்டோ படை வீரர்கள் வந்து எல்லோரையும் மீட்கிறார்கள். அப்போது அந்தப் பெண், "அதெல்லாம் முடியாது. உங்களோடு வர மாட்டேன். என் கணவன் வந்து தான் என்னை மீட்க வேண்டும். அப்போது தான் வருவேன் " என்று அடம் பிடித்தால் என்ன செய்வது?
சீதை சொல்கிறாள் அனுமனிடம்
"நீ என்னை மீட்டுக் கொண்டு போய் விட்டால், அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு சேர்க்கும். இராமனை ஏமாற்றி இராவணன் என்னை இங்கே கொண்டு வந்து விட்டான். அது போல நீயும் இராவணனை ஏமாற்றி என்னை கொண்டு போக நினைக்கிறாயா. அப்படி கொண்டு போனால் அவனுக்கும், உனக்கும் என்ன வேறுபாடு? " என்று.
பாடல்
'அன்றியும், பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெஞ்சிலை மாசுணும்; வேறு இனி
நன்றி என் ?பதம் வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை,நீயும் நினைத்தியோ ?
பொருள்
'அன்றியும், = அது மட்டும் அல்லாமல்
பிறிது உள்ளது ஒன்று = வேற ஒண்ணும் இருக்கு
ஆரியன் = இராமன்
வென்றி = வெற்றி கொள்ளும்
வெஞ்சிலை = வெம்மையான வில்
மாசுணும் = மாசு படும்
வேறு இனி = இனி மேல்
நன்றி என் ?பதம் = நல்லது என்ன இருக்கு ?
வஞ்சித்த நாய்களின் = வஞ்சனை செய்த நாய்களின்
நின்ற வஞ்சனை = அவர்கள் மனதில் நின்ற வஞ்சனை
நீயும் நினைத்தியோ ? = நீயும் செய்ய நினைக்கிறாயா?
அவர்கள்தான் இராமனின் வில்லுக்கு மாசு உண்டாக்கி விட்டார்கள் என்றால், நீயும் அதையே நினைக்கிறாயா ?
என்று கேட்கிறாள்.
கணவனின் பெருமை கெட்டுப் போய் விடக் கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறாள்.
இருப்பதோ அரக்கனின் சிறையில்.
அக்கம் பக்கம் துணைக்கு யாரும் இல்லை.
மிகக் கடினமான நிலை. அதற்கு முன்னால் தற்கொலைக்கு கூட சீதை முயன்று இருக்கிறாள். அவ்வளவு துன்பமான நிலை.
அனுமன் அழைத்துக் கொண்டு போகிறேன் என்கிறான். சீதை இடத்தில் வேறு யாராவது இருந்து இருந்தால், தப்பித்தால் போதும்டா சாமி என்று கிளம்பி இருப்பார்கள்.
கணவனின் பெருமை தன்னால் கெட்டு விடக் கூடாது என்பதற்காக அந்தத் துன்பத்தையும் சீதை பொறுத்துக் கொள்கிறாள்.
ஆண்களின் உலகில் தனி ஒரு பெண்ணாக சீதை நிற்கிறாள்.
இராவணனின் காமம் ஒருபுறம்.
மான் பின் போன இராமன் மறுபுறம்.
தவறு என்று தெரிந்தும், சீதையை தனியே விட்டு விட்டுப் போன இலக்குவன் இன்னொரு புறம்.
வா, கூட்டிக் கொண்டு போகிறேன் என்று வந்து நிற்கும் அனுமன் மறுபுறம்.
இவர்களுக்கு மத்தியில் சீதை தனியாளாக நின்று கொண்டு, எது சரி, எது தவறு என்று முடிவு எடுத்து, அந்த முடிவில் உறுதியாக இருக்கிறாள்.
"எங்க வீட்டு காராருக்கு ஒண்ணும் தெரியாது...பேரு தான் பெரிய பெரிய பேரு...ஒண்ணு சாதிக்கத் தெரியாது...ஒரு சாமர்த்தியம் கிடையாது" என்று கணவனை மற்றவர்கள் முன் ஏளனமாக பேசும் பெண்கள், சற்று யோசிக்க வேண்டும்.
இது போன்ற நல்ல நூல்களை சிறுவயது முதலே சொல்லி கொடுத்து வளர்த்தால், நல்ல குணங்கள் வந்திருக்குமோ என்னவோ?
https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_48.html
அது சரி. ஆனால், இதைக்கேட்ட அனுமனின் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்? இப்படியா ஒருவர் மனம் புண்படப் பேசுவது?
ReplyDelete